குடிக்க தண்ணீர் இல்லாமல் அகதிகள் 55 பேர் மரணம்

 12 யூலை 2012
இத்தாலிக்கு அகதிகளாக படகில் வந்த 55 பேர் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவில் இருந்து 56 பேர் படகு ஒன்றில் இத்தாலியில் அகதிகளாக தஞ்சமடைய கடந்த ஜூன் மாத கடைசியில் வந்துள்ளனர்.
படகு இத்தாலியை நெருங்கிய சமயத்தில், வீசிய புயல் காற்றில் சிக்கி, திசை மாறி மத்திய தரைக்கடல் பகுதிக்குச் சென்று விட்டது. இதனால் கரையை எட்ட முடியவில்லை, எங்கு செல்வதென்று தெரியாமல் கடலில் சில நாட்கள் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் படகில் இருந்த குடிநீர் தீர்ந்து போனதால், அனைவரும் தாகத்தால் தவித்தனர். சிலர் கடல் நீரைக் குடித்து தாகத்தைத் தணிக்க முயற்சித்தனர். சிலர் நாக்கு வறண்டு மயங்கி விழுந்து விட்டனர்.
இதனிடையே படகும் சேதமடைந்து, கடலில் மூழ்கத் தொடங்கியது. தண்ணீர் இல்லாமல் பாதி உயிரை விட்டிருந்தவர்கள், கடலில் மூழ்கி இறந்தனர்.
ஒருவர் மட்டும் படகின் உடைந்த பாகத்தைப் பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்தார். துனிசியாவைச் சேர்ந்த மீனவர்கள் அந்த நபரை கடந்த 9ஆம் திகதி மீட்டு கரை சேர்த்தனர். அவர் மூலமே 55 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்தியா, லிபியாவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறியுள்ளார். லிபியாவில் புரட்சி ஏற்பட்ட பின்னர், இந்த ஆண்டில் மட்டும் 1,300-க்கும் மேற்பட்டவர்கள் இத்தாலியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.