இறை பக்தியை வெள்ளமாக கொட்டும் விசாகா

ஜனவரி 01,2013,ஸ்ரீ கிருஷ்ண கான சபா நல்லி விஹாரில் நடைபெற்ற, விசாகா ஹரியின் "நாரத பக்தி சூத்ரம்' அனைவரையும் கவர்ந்தது. வாழ்வியல் குறித்து நமக்கு கொடுக்கப்பட்டுள்ள திரட்டுக்கள் அனைத்துமே, "சூத்ரங்கள்' ஆகும். திருவள்ளுவரின் திருக்குறள், அவ்வை பிராட்டியின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் இவை அனைத்தும் சூத்ரங்கள்தான். வரிகள் சிறியது விஷயம் பெரியது. ஆனால், நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை, நாரதர் எப்படி ரத்தினச் சுருக்கமாக கூறியுள்ளார்? அதை எப்படி மிகவும் எளிதாகப் பின்பற்ற முடிகிறது.
இதைத் தான் இரண்டு நாள் இசைச் சொற்பொழிவாக விரிவாகக் கொடுத்தார். "வெடலின்' என்ற தியாகராஜரின் பாடலுடன் துவக்கி மடைதிறந்த வெள்ளமாக கொட்ட ஆரம்பித்தார் விஷயத்தை. இந்நிகழ்ச்சியில் அதிக கூட்டம். சுகிஸ்வரமாக இறைவனை அடையும் மார்க்கம் பக்தி ஒன்றே. அதுவும் அன்பு, பிரேமை, பேரன்பு இவை மட்டுமே இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறான். அவனுக்கு செய்யும் பூஜை, புனஸ்காரங்களை காட்டிலும் நம்மிடம் எதிர்பார்ப்பது, தூய அன்பு ஒன்றே என்பதை நாரதர் அழகாக சொல்லியிருக்கிறார். நம் முன் இருக்கும் இறைவனை விட்டு, இல்லாத இடத்தில் தேடி என்ன பயன்? என்பதற்கு நாராயண தீர்த்தரின் தரங்கம் ஒன்றை பாடி விளக்கம் அளித்தார் விசாகா.
செம்பை வைத்தியநாத அய்யர் குருவாயூரில் ஏகாதசியன்று, சென்ற நூற்றாண்டில் இறைவனடி சேர்ந்தது, நாத உபாசனையால் என்பதை கூறினார். சைதன்ய மகா பிரபுவின் சரித்திரம், சதாசிவ பிரமேந்திரரின் வரலாறு போன்றவற்றில், இறை பக்தியில் சுவாசித்து, குடித்து, உண்டு அதனுடன் கலந்ததை சொன்னபோதும், அதைத் தொடர்ந்து "பிப்ரே ராமரஸம்' என்ற பாடலை பாடியபோது, நாம் ஒவ்வொருவரும் இந்த நாள் வரை இறைவனை எப்படி அணுகினோம் என்பதை விளக்கினார்.
இறை பக்திக்கு இனம், மொழி என்ற வேறுபாட்டை இறைவன் பார்ப்பதே இல்லை என்பதற்கும், நாரத சூத்திரத்தில் அதை அடிக்கோடிட்டு அனைவருக்கும் பொதுவானவன் இறைவன்.
கண்ணன் அழகில் மயங்கி, அவரைப் போற்றிய வரலாற்றை கூறினார். இஸ்லாமிய ரஸ்கான் மெய்மறந்து, கண்ணனுடன் கலந்து அவர் வாயிலிருந்து வந்த முதல் கீர்த்தனம், "மகேஷ், கணேஷ், தினேஷ், சுரேஷ் சுஹாரே ஆதி, அநாதி அகண்ட சேதன என்று உருது மொழி பேசும் வாய், வடமொழியில் கீர்த்தனத்தை பாட வைத்தது யார்? கண்ணனின் அன்பு ஒன்றே என்று விளக்கினார்.
சிலையாக அவரை பார்க்கவில்லை, "கன்னய்யா' என்ற அன்பு கலந்த அழைப்பை, கண்ணன் ஏற்ற விதம் என்று விசாகா சொன்ன போது, ரசிகர்கள் மெய் மறந்தனர். அடுத்து பாரதியின் வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பாட்டில் பாரதி. இறைவன் எங்கெல்லாம் இருப்பான் என்பதை, அவர் அனுபவித்து பாடியதை இவர் பாடியபோது, பக்தி என்பது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது என்றும் விளங்க வைத்தார். நாம் அனைவரும் ஒரு குலம், அது தான் நாம் அனைவரும் இறைவனின் பக்தர்கள் என்கிற குலம் என்று சொன்னபோது, ஆகாயம் இறைவனுடைய மண்டபம். அதிலிருக்கும் பறவைகள் இறைவனின் பந்துக்கள். இவ்வுடலில் உயிர் மூச்சு இருக்கும் வரையில் உழைத்து, அவனை அடைந்தே தீர வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
தன் சிஷ்யையின் கதையை கேட்க விசாகாவுக்கு தெரியாமல், லால்குடி ஜெயராமன் இத்தனை வயதிலும், வந்து யாருக்கும் தெரியாமல், ஓரமாய் அமர்ந்து கேட்டு கடைசியில் அவருக்கு ஆசீர்வாதம் செய்தபோது, விசாகா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்பொழுது நமது நாட்டிலும், உலகெங்கிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு, விசாகா ஹரியின் ஜாதி, மத, இன, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் பயன்படும் வகையில், தன் நிகழ்ச்சியை வரைவுபடுத்திக் கொடுக்கிறார்.
அதனால், ஆயிரக்கணக்கில் மக்கள் குவிகின்றனர். தன் நிகழ்ச்சியின் மூலம் இசையை பாரம்பரியமாகவும், தான் சொல்லும் கதையால், ரசிகர்களின் மனதைத் தொட்டு கரைய வைக்கிறார். இரண்டு நாள் மொத்தம், 7 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சி ரசிகர்களுக்கு, பெரும் விருந்தாக இருந்தது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.