கணவன் – மனைவி ஒற்றுமைக்கு ‘கேதார கௌரி’ விரதம்

பிருங்கி முனிவர் அதி தீவிர சிவ பக்தர். சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார். ‘ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் என்கயிலைநாதன் தான். அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்றெல்லாம் உள்ளார்ந்த பக்தியுடன், ஆலவாய் அழகனை மட்டுமே துதித்து வந்தார். பிற கடவுளர்களை சற்றும் சிந்திக்காத அவருடைய போக்கு, சிலசமயம் அக்கடவுளர்களையே அவமதிக்கும் வகையிலும் அமைந்ததுண்டு.

அப்படி ஒரு நிலைக்கு ஆளானவள் – பார்வதி. கயிலாயத்தில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும்போது, பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னைத் திரும்பியே பார்க்காமல் போவதும் அவளுக்கு மன வருத்தத்தைத் தந்தது. எப்படியாவது பிருங்கி முனிவரை, தன்னையும் வணங்கச் செய்யவேண்டும் என்று விரும்பிய உமையவள், பெருமானிடம் நெருங்கி அமர்ந்துகொண்டாள். இப்படி அமர்ந்திருக்கும்போது, தன்னைத் தவிர்த்து இவரை மட்டும் பிருங்கி  முனிவரால் எப்படி வலம் வர முடியும்? என்று நினைத்தாள்.

வழக்கம்போல பிருங்கி முனிவர் வந்தார். சிவனோடு உமையவள் நெருங்கி வீற்றிருப்பதைப் பார்த்தார். என்ன  செய்வது என்று குழம்பினார். பிறகு தெளிவாகி, ஒரு வண்டாக உருவெடுத்தார். இருவருக்கும் இடையே புகுந்து  சிவனை மட்டும் வலம் வந்தார். இதைக் கண்டு வெகுண்டாள் தேவி. சக்தியும் சிவனும் ஒன்று என்ற தத்துவம் புரியாமல், தன் தலைவனை மட்டும் வணங்கும் இந்த முனிவரின் ஆணவத்தை அடக்க எண்ணினாள்.

தன்னை அவமானப்படுத்திய முனிவரின் கால்கள்  முடமாகிப் போக சபித்தாள். அது உடனே பலித்தது. ஆனாலும், தன் பக்தனை அந்த நிலையிலேயே விட்டுவிட இறைவனுக்கு சம்மதமில்லை. அவரது கால்களை சரிசெய்ததோடு, மூன்றாவதாக ஒரு காலையும் உருவாக்கித் தந்தார்.

அதோடு ஒரு கோலையும் அளித்து, பிருங்கி முனிவர் ஊன்றிச் செல்லவும் வழி செய்து கொடுத்தார். தன் கணவர் முனிவருக்கே ஆதரவாக நடப்பதைப் பார்த்து அன்னை வெகுண்டாள். உடனே, தன்னை அவருடைய  முழுமையான அன்புக்கு உரியவளாக ஆக்கிக் கொள்ள தீர்மானித்தாள். அதற்கு தவமே சிறந்த வழி என்று நம்பி,  பூலோகத்திற்கு வந்தாள். ஒரு வயல்வெளியைத் தேர்ந்தெடுத்தாள்.

சிவனை எண்ணி தவமிருந்தாள். கடுமையான தவம், அன்னையின் தவக் கடுமையினால் சுற்றி இருந்த மரங்களும், செடிகளும், கொடிகளும் கருகித்  தீய்ந்தன. மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்து அவளை ஆட் கொண்டார். ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ என்று வேண்டினாள் அன்னை.

‘தந்தேன்’என்றார்  மகாதேவன். உங்களைப் ‘பிரியாத’ என்றால் அருகிலேயே இருப்பதல்ல, உடலோடு ஒன்றியதாக… உடலைவிட்டுப் பிரிக்க  முடியாதவளாக…” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்துகொண்டார் பரமன். உடனே அவள் வேண்டிய வரத்தை அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

தேவிக்கு சந்தோஷம். இனி பிருங்கி முனிவரல்ல, யாருமே என்னை என் தலைவனிடமிருந்து பிரிக்க முடியாது. சிவன் வேறு, சக்தி வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள்,  இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண்டும் என்று சிவனுடன் சேர்ந்து விதி செய்தாள். இவ்வாறு அம்பிகை, இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவனிடமிருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை  உருவாக்கிக் கொண்ட நாள் தான் ‘கேதார கௌரி’ விரத நாள்.

கேதாரம் என்றால் வயல். கௌரி என்ற பார்வதி வயல்வெளியில் தவமிருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால்  இந்த விரதம் ‘கேதார கௌரி விரதம்’ என்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக தீபாவளி அன்றோ, அல்லது  தீபாவளிக்கு மறுநாளே இந்த விரதமும் மேற்கொள்ளப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.