அகதிகளை வரவேற்கிறதா அவுஸ்திரேலியா?!- தப்ப முயன்ற ஈழத் தமிழர்கள்

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, சொந்த நாட்டை, வீட்டை, உறவுகளை இழந்து உயிருக்குப் பயந்து ஓடிவந்த இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்க்கை, எத்தனை மோசமாக இருக்கிறது என்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது சமீபத்திய சம்பவம்.
கடந்த 17-ம் தேதி, சென்னையை அடுத்த ஊரப்பாக்​கத்​தில் மூன்று வான்களில் சென்ற 61 ஈழத் தமிழர்களை வளைத்துப் பிடித்திருக்கிறார்கள், தமிழக கியூ பிராஞ்ச் பொலிஸார்.
இவர்கள் அனைவரும் தமிழத்தில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர்கள். புரோக்கர்கள் கொடுத்த நம்பிக்கையில், திருட்டுத்தனமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற நேரத்தில்தான் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களை அங்கு கொண்டு போய்ச் சேர்ப்பதாகக் கூறி, பணம் வசூல் செய்த நான்கு புரோக்கர்களையும் கைது செய்துள்ளது பொலிஸ்.
இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்து சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கும்மிடிப்பூண்டி, ஈரோடு, புதுவை, கரூர், திருச்சி எனப் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு அரசின் நேரடிக் கண்காணிப்​பின் கீழ் சில வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
திறந்தவெளி முகாம் எனப்படும் இந்த முகாமில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்லவும் பிற இடங்களுக்குச் சென்று வரவும் அனுமதி தரப்பட்டுள்ளது. இவர்களில் வழக்குகளில் சிக்கியுள்ள சிலர் மட்டும் சிறைக்கு நிகரான கட்டுப்பாடுகள் கொண்ட பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளளர்.
இப்போது பொலிஸிடம் சிக்கி இருக்கும் 61 பேரும் பல்வேறு திறந்தவெளி முகாம்களில் தங்கி இருந்தவர்கள்தான். ''இவர்கள் முகாம் அதிகாரிகளின் அனுமதி இன்றி கடந்த 17-ம் தேதி அன்று முகாம்களில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா செல்வது போல் கிளம்பியிருக்கிறார்கள்.
புரோக்கர்களிடம் முன்னரே பேசி வைத்தபடி இரண்டு குழுவாக வேளாங்​கண்ணி மற்றும் கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டம் போட்டு இருந்தனர்.
எங்களுக்குத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ஊரப்பாக்கம் அருகே வேன்களில் வந்தவர்களை வழிமறித்துப் பிடித்து, அனைவரையும் எங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டோம்'' என்றனர் பொலிஸார்.
காஞ்சிபுரம் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருந்த ஈழத் தமிழர்களைச் சந்தித்தோம். ''எங்களை போட்டோ பிடிச்சுப் போட்டு என்னப் செய்யப்​போறீங்க... நாளைக்கு காலையில் எங்களுக்கு சுதந்திரம் கிடைச்சிடுமா?'' என்று விரக்தியுடன் பேச மறுத்தனர். பொலிஸில் பிடிபட்ட அவமானத்தில் பலரும் முகத்தைக் காட்ட விரும்பாமல் திருப்பிக்​கொண்டனர்.
அவுஸ்திரேலியா கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி இவர்களிடம் பணம் கறந்த பாமினி என்ற நகுலன், சின்னத்தம்பி, சசிகுமார், வின்சென்ட் என்ற நான்கு ஏஜென்ட்களையும் கைது செய்திருக்கிறது காவல்துறை. இவர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட காளிதாஸ் என்பவரைத் தேடி வருகிறார்கள்.
விசார​ணை செய்த பொலிஸார், ஆவணங்களை சரிபார்த்த பிறகு அகதிகளை மீண்டும் அவர்களது முகாம்களுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் அகதி முகாம்களைச் சேர்ந்தவங்கதான். பல இடங்களிலும் இருக்கிற அகதிகளிடம் பேசி, பழக்கத்தை ஏற்படுத்திக்கிட்டு, அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிப் போனா நிம்மதியா வாழலாம்’னு மூளைச்சலவை செய்து இருக்காங்க.
அவுஸ்திரேலியாவுக்கு அழைச்சுட்டுப் போறதுக்காக பணம் வசூல் செஞ்சு இருக்காங்க. 17-ம் தேதி தப்பிச் செல்வதற்கு நாளும் குறிச்சி இருக்காங்க. இந்த விவரங்கள் எப்படியோ கசியவே, மேலதிகாரிகள் எங்களை அலெர்ட் செஞ்சாங்க.
வண்டலூரில் இருந்து கூடுவாஞ்சேரி போற வழியில் எல்லா வாகனங்களையும் நிதானமாக சோதனை செய்தோம். தப்பிக்க முடியாமல் மாட்டிக்கிட்டாங்க. நாங்க கைது செய்யாமல் இருந்திருந்தால், நிச்சயமாக இவர்கள் ஏமாந்துதான் போயிருப்பார்கள்.
திருட்டுத் தோணியில் ஏறிப்போய் நடுவழியில் உயிரை விட்டிருப்பார்கள். இப்போது, அவுஸ்திரேலியாவிலும் அதிகமான கட்டுப்​பாடுகள் இருப்பதால், ஈழத் தமிழர்கள் தப்பி ஓட முயற்சிப்பது நல்லதல்ல'' என்றார் அகதிகளைப் பிடித்த தனிப்படையைச் சேர்ந்த ஒரு பொலிஸ்காரர்.
அகதிகள் முகாமில் இருப்பவர்கள் திருட்டுத்தனமாக அவுஸ்திரேலியாவுக்குச் தப்பிச் செல்ல முயற்சிக்கிறார்கள் என்றால், இங்கே அவர்களுக்கு அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளும் கொடுமையும் இருப்பதாகத்தானே அர்த்தம்?
கொடுமை தாங்காமல் இலங்கையில் இருந்து அபயம் கேட்டு வந்தவர்களைத் தமிழ்நாடும் வஞ்சிக்கக் கூடாது. அவுஸ்திரேலியாவில் அவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்​தையும், நிம்மதியையும் தமிழகம் தர வேண்டும்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.