யாரோ போட்ட பாதை : வழியின் சிறப்பால் வாழ்க்கை சிறக்கும்

அண்மையில் படித்தபின் நெஞ்சை வருடிக்கொண்டிருக்கும் வரிகளை, நீங்களும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமே! “எப்போது உங்களால் கண்களுக்குத் தெரியாதனவற்றைப் பார்க்க முடிகிறதோ, எப்போது நம்பமுடியாதவற்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வருகிறதோ, அப்போது, எதை உங்களால் முடியாது என்று உலகம் சொல்கிறதோ, அதை நீங்கள் செய்து முடிப்பீர்கள்!” இந்த வரிகளை ஒருமுறைக்கு மூன்று முறை படித்தால் (நான் அப்படித்தான் படித்தேன்) உங்கள் சிந்தனைகள் பல அடுக்குகளில் மலர்ந்து விரியத் தொடங்கும். முதலில், கண்ணுக்குத் தெரியாதனவற்றை உங்களால் பார்க்க முடிகிறதா? ஒரு சிறிய விதையை உங்களால் ஒரு பெரிய மரமாகப் பார்க்க முடிகிறதா? உங்கள் மூன்று வயது மகனை அல்லது மகளை மிகப் பெரும் தொழிலதிபராக, மருத்துவராக, பொறியாளராக, விளையாட்டு வீரனாக உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? பத்து பேரை வைத்துக் கொண்டு இயங்கும் உங்கள் நிறுவனத்தை இன்னும் 10 ஆண்டுகளில் ஆயிரம் பேர் உழைக்கும் நிறுவனமாக உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா? உங்கள் நகரில் மட்டுமே விற்றுக் கொண்டிருக்கும் உங்கள் பொருள்களை இன்னும் 10 ஆண்டுகளில், இந்தியா முழுக்க விற்பனை செய்வதாக உங்களால் சிந்தனை செய்து பார்க்க இயலுகிறதா? இன்றைக்கு இல்லாத ஒரு நிலையை, இன்னும் 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என்று ஒரு கால எல்லையை வரையறை செய்து கற்பனை செய்து பார்க்க முடிந்தால் சாதனையின் முதல் படிக்கு வந்து வீட்டீர்கள் என்று பொருள். இப்போது இல்லாத ஒன்றை, இப்போது கண்ணுக்குப் புலனாகாத ஒன்றைப் பார்ப்பதில் மிகப்பெரிய வெற்றியின் இரகசியம் மறைந்திருக்கிறது. புகையோடும், நெருப்போடும் எரியும் மெழுகுவர்த்தியை பார்த்த போதெல்லாம், எடிசனின் கண்களுக்கு அன்றைக்கு இல்லாத மின்சார விளக்குதான் தெரிந்தது. மறைந்துபோன காதல் மனைவியின் உடலைப் பார்த்ததும் ‘ஷாஜகான் கண்களுக்கு, தாஜ்மஹால்தான் தெரிந்தது. பறவைகள் பறக்கும் போதெல்லாம், ரைட் சகோதரர்கள் ஆகாய விமானத்தைத்தான் கண்டார்கள். இலட்சியவாதிகளின் உடல்கள் நிகழ்காலத்தில் இருந்தாலும் உள்ளங்கள் என்னவோ எதிர்காலத்தில்தான் உலா வந்து கொண்டிருந்தன. அவர்களுடைய செயல்பாடுகள் அந்த எதிர்கால கனவுகளை நோக்கி நடை போட்டுக்கொண்டிருந்தன. இலக்கை நோக்கி நகருங்கள்; உங்கள் வேகத்திற்குத் தகுந்தாற்போல் நீங்கள் விரைவிலோ அல்லது நிதானமாகவோ உங்கள் இலக்கினை இப்போது கண்களால் கண்டிராத ஒன்றை நிச்சயம் அடைவீர்கள். சாதனைகளை குவிக்க இரண்டாவது நிபந்தனை “நம்ப முடியாததை நம்பவேண்டும்”. நம்பமுடியாதது என்று சொல்லிவிட்ட பின்பு அதை எப்படி நம்புவது? இரண்டு செய்திகளை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, ஓன் மாண்டினோ என்ற மிகப்பெரிய எழுத்தாளர் கூறியது போல, மிகப்பெரிய செய்திகளெல்லாம் ஆரம்பத்தில் முடியாதது போலத்தான் தோன்றும். இரண்டு, நம்ப முடியாதது என்றுதான் குறிப்பிட்டோமேயொழிய நடக்க முடியாதது என்று கூறவில்லையே! பின்வரும் கற்பனைகளுக்கு முடியும் அல்லது முடியாது என்று விடையளியுங்கள். 1. இன்னும் 5 வருடத்தில் உங்கள் வருமானம் 10 மடங்காகும் முடியும் / முடியாது 2. இன்னும் 5 வருடத்தில் எகிப்து நாட்டில் பிரமிடைப் பார்ப்பீர்கள் முடியும் / முடியாது 3. இன்னும் 1 ஆண்டில் உங்கள் போட்டியாளருக்கு சென்றுகொண்டிருக்கும் ஒரு பெரிய வாடிக்கையாளரை நீங்கள் பறித்துக் கொள்வீர்கள் முடியும் / முடியாது 4. இன்னும் 1 ஆண்டில் இதுவரை தெரியாத வேறு ஒரு மொழியை சரளமாகப் பேசக் கற்றுக் கொள்வீர்கள். முடியும் / முடியாது 5. இன்னும் 1 ஆண்டில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள் முடியும் / முடியாது 6.இன்னும் 5 ஆண்டுகளில் உதகை, கொடைக்கானல், ஏற்காடு அல்லது ஏலகிரிமலை ஆகிய இடங்களில் (ஒன்றில்) ஒரு பண்ணை வீடு கட்டுவீர்கள் முடியும் / முடியாது 7. யாரும் உற்பத்தி செய்யாத ஒரு பொருளை இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி செய்து சந்தையில் விற்பீர்கள். முடியும் / முடியாது 8.இன்னும் இரண்டு ஆண்டுகளில் பத்து இடங்களில் உங்களுக்கு சொத்து இருக்கும் முடியும் / முடியாது 9. இன்னும் 1 ஆண்டில் ஒரு நூல் எழுதி வெளியிடுவீர்கள் முடியும் / முடியாது 10. இன்னும் ஓர் ஆண்டில் உங்களுக்காக 100 கைகள் வேலை செய்யும் முடியும் / முடியாது இந்த கற்பனைகளைப் படித்தவுடன் எத்தனை கற்பனைகளுக்கு முடியும் என்று விடையளித்தீர்கள்? சில கற்பனைகளைப் படித்தவுடன் “இது நமக்குத் தேவைதானா?” என்ற எண்ணம் தோன்றும். அல்லது “இது நடந்து நான் என்ன சாதிக்கப் போகிறேன்?” என்ற எண்ணம் வரலாம். வேறு சில கற்பனைகளைப் படித்தவுடன் “நிச்சயமாக இது நடக்காது” என்று தோன்றலாம். சில எண்ணங்களின் மீது ஆசையே வராது. எடுத்துக்காட்டாக, எகிப்து பிரமிடை நான் பார்க்க வேண்டும்? தேவையில்லை. (காரணம் – அவ்வளவு பணமில்லை) வருமானம் 10 மடங்காகும் (அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை) போட்டியாளருடைய வாடிக்கையாளரை இழுப்பேன் (நமக்கெதற்கு வம்பு) இரண்டு ஆண்டுகளில் 10 இடங்களில் சொத்து இருக்கும். (அவ்வளவு வசதி வராது) யாரும் உற்பத்தி செய்யாத பொருளை…… (அந்த அறிவு எனக்கில்லை) வேறு மொழி பேசுவேன். (பேசி என்ன இலாபம்?). இப்படி ஒவ்வொரு கற்பனை வரும்போதும் ஏதாவது ஒன்றைநம் உள்மனமே பேசி, அதனை தடுத்து விடுகின்றதே, ஏன்? மேற்கண்ட 10 செய்திகளுமே நடக்க வேண்டுமென்று யார் விரும்ப மாட்டார்கள்? வருமானம் 10 மடங்கு அதிகரித்தால் வருத்தமா படுவோம்? 10 இடங்களில் சொத்து வாங்கினால் கசக்கவா செய்யும்? பின் ஏன் முடியாது என்று எண்ணுகிறோம்? அதற்கு வெவ்வேறு காரணங்களைச் சொல்லுகிறோம்? அந்தக் கற்பனைகளை, இலக்குகளை அடைய நமக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் முடியாது என்று சொல்லிவிடுகிறோம். நாம் விரும்பினாலும், ஏங்கினாலும் இவையெல்லாம் எங்கே நடக்கப் போகிறது? நடப்பதற்கான சாத்தியக்கூறே இல்லையே என்கின்ற அவ நம்பிக்கையால், அவற்றிற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை! முதலில் நம்பவேண்டும்; நம்பவேண்டும்; நிச்சயம் நடந்தேயாக வேண்டும் என்று நம்பவேண்டும்! கண்ணால் காணமுடியாததைக் கண்டாயிற்று! அடுத்து நம்பமுடியாததைப் போன்ற, அந்தக் காட்சி நிச்சயம் நடக்கும் என்று நம்பத் தொடங்கி விட்டீர்களா? இனி நடந்துவிடுமா? நிச்சயம் நடக்காது! உங்கள் பயணத்தைத் தொடங்காதவரை! இலக்கு என்ன? அது எங்கே இருக்கிறது? – என்று தெரிந்தபின் அதை நோக்கி எப்படி நகருவது? எங்களுடைய இலக்கை அடைவதற்கு பத்து ஆண்டுகள் என்று வைத்துக் கொள்ளலாம். இன்றிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு எத்தனை நாட்கள் என்று கணக்கிடுங்கள் 3650 நாட்கள்! 3650 நாட்களும் என்ன செய்யப்போகிறீர்கள்? அன்றாடம் செய்கின்ற அதே வேலைகளை, செக்குமாடு சுற்றுவது போல, திரும்பத் திரும்ப செய்யப் போகிறீர்களா? அதே நேரத்தில் எழுவது, குளிப்பது, உண்பது, வேலைக்குச் செல்வது, அதே வேலை – அதே வாடிக்கையாளர்கள் – அதே சிக்கல்கள் – அதே வருமானம் – திரும்ப வீடு – இரவு உணவு உறக்கம்….. அடுத்த நாளும் அதே! இப்படியே 3650 நாட்களும்! அதே வேலைகளை திரும்பத் திரும்பச் செய்தால், இதுவரை என்ன கிடைத்ததோ, அதுதான் திரும்பக் கிடைக்கும்! புதியதாக ஒன்றும் நடக்காது! இன்னும் சொல்லப் போனால், முன்பு கிடைத்ததைவிடக் குறைவாகவும் கிடைக்கலாம்! உங்களுடைய போட்டியாளர்கள் உங்களைவிட சிறப்பாகச் செயல்பட்டால், உங்களுக்குக் கிடைத்து வந்ததில் ஒரு பகுதியை இழக்கவேண்டியும் வரலாம்! ஆகவே ஒன்றில் உறுதியாக நில்லுங்கள்! இன்று புதியதாக என்ன செய்தீர்கள்? இதுவரை செய்யாத புதிய செயல் என்ன செய்தீர்கள்? வாழ்க்கையில், 10 ஆண்டுகளில் புதியதாக ஒன்றை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டிருந்தால் தினம் புதியதாக ஒன்றை செய்தாகவேண்டும்! அல்லது புதியதாக ஒன்றை, மேலும் மேலும் சிறப்பாகவும், அதிகமாகவும் செய்துகொண்டே இருக்க வேண்டும். இரண்டு கேள்விகள்: 1. எங்கே செல்லப் போகிறீர்கள்? 2. அதற்காக இன்று என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கோவையிலிருந்து சென்னை செல்வது என்று தீர்மானித்துவிட்டீர்கள். கோவை இரயில் நிலையத்தையே சுற்றி வந்து கொண்டிருந்தால் நிச்சயம் சென்னை செல்ல முடியாது. ஏதாவது ஒரு தொடர் வண்டியில் உட்கார வேண்டும். ஏறிய உடனே சென்னை வந்துவிடாது. ஒவ்வொரு கிலோ மீட்டராக, இரயில் நிலையமாகக் கடந்த பின்னரே, சென்னையை அடைய முடியும்! அடுத்து, “எவ்வளவு நேரத்தில் அடையப்போகிறீர்கள்?” என்பது எந்த வண்டியில் ஏறினீர்கள் என்பதைப் பொறுத்தது. பணம் செலவாகிறதே என்று பேருந்திலும், சைக்கிளிலும் சென்றால், விரைவில் சென்னையை அடைய முடியாது? எனவே, வெற்றி இலக்கை அடைவது என்பது, எந்த முறையில், எந்த வழியில், என்ன வேகத்தில் செல்லுகிறீர்கள் என்பதையும் பொறுத்தது. ஆகவே சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்து வேகத்தைக் கூட்டுங்கள். ஒரு காலத்தில் உங்களைப் பார்த்து, எதை உங்களால் முடியாது என்று உலகம் சொன்னதை நீங்கள் செய்து முடிப்பீர்கள்!,,,, தி.க. சந்திரசேகரன் ,,

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.