ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய 'அம்மா' எனும் உன்னத வார்த்தை
'அம்மா' உலகிலுள்ள உன்னதமான வார்த்தைகளில் உயர்வானது. அந்த வார்த்தைக்கும் அந்த உறவுக்கும் எதையுமே ஈடாக வைக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை.
அந்த உத்தம உறவின் உன்னதங்களை நினைவு கூர உலக நாடுகள் பலவற்றில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டுவது தாயன்பு மட்டுமே.
அந்தத் தாயன்பை ஒருகணம் உள்ளத்தில் எண்ணிப்பார்க்க உருவாக்கப்பட்டதே அன்னையர் தினமாகும். மேற்குலகத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டதெனினும் அன்னையின் அன்பை எம் கண்முன் கொண்டுவருகிறது இந்த நாள்.
அமெரிக்காவில் வாழ்ந்த அன்னா மரியா ஜார்விஸ் என்ற பெண்மணியின் தாயன்பை அடியொற்றி அன்னையர் தினம் கொண்டாடப்படுவதாக பொதுவாகக் கூறப்படுகிறது.
எனினும் பண்டைய காலத்தில் பெண் தெய்வங்களை விசேடமாக வழிபடுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுவதாகவும் மாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருசில நாடுகளில் அன்னையர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு வருடமும் மேமாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையே பொதுவாக அன்னையர் தினமாக கொள்ளப்படுகிறது.
தூய்மையான அன்பின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. அதனை யதார்த்தமாக உணர்த்துகின்ற அன்னையின் பெருமையையும் இலகுவில் வார்த்தைகளாக்கிவிட முடியாது. அது நீலவானில் ஊஞ்சல் கட்டுவது போல் பத்துப் பௌர்ணமிகள் சுமந்து, முத்துப்போல் பெற்றெடுத்துக் காத்து, காலம்முழுவதும் தனக்காகவன்றி குழந்தைகளுக்காக வாழும் தெய்வம் தாய்.
மானுட வாழ்வில் அன்பின் முதல் வெளிப்பாடாகக் கருதப்படும் தாயன்பு வாழ்வின் அந்தம் வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம். இந்நிலையில் அன்னையருக்காக ஒருதினத்தை ஒதுக்குவதென்பது சிரமமான காரியமே.
கீழைத்தேய நாடுகளில் தாயைப் பிரிந்துவாழாத நிலையே பொதுவாகக் காணப்படுவதால் அன்னையர் தினம் பற்றிப் பெரிதாக சிந்திப்பதில்லை. எனினும் எம்மை இவ்வுலகுக்கு ஈன்றெடுத்த தாய்க்காக அந்த அன்பை உணர்வதற்காக ஒருநாளை பிரத்தியேகப்படுத்துவதில் தவறில்லை என்றே கூற முடியும்.பெண்ணின் அதியுயர் நிலையாக மதிப்பிடப்படும் தாய்மையின் மகத்துவத்தை அறிந்து அன்பான அந்த உறவுக்காக அன்பைப் பகிர்வோம்.
-ஆர்.நிர்ஷன்
Tags :
செய்திகள்
Powered by Blogger.