சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த சரியான மருந்துகள் இல்லை; உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என பேராசிரியர் ஜயலத் கவலை

30.08.2012.BY-rajah.
இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் 15-70 வயதுக்குட்பட்டவர்களில் 15 சத வீதமானோரில் சுமார் 20 ஆயிரம் பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயை குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமையினால் தினமும் உயிரிழப்பு இடம் பெறுகின்றது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கும் மேற்பட்டோரே இந்த நோயின் தாக்கத்துக்கு அதிகளவில் ஆளாகியுள்ளனமை தெரியவருகின்றது.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக் அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த நோயின் தொற்றின் வேகத்தையும், நிலையையும் அறிந்துகொண்ட களனி, ரஜரட்ட, பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப் பீட பேராசிரியர் கள், முன்னணி மருத்துவ குழுக்களினால் இந்த நோயின் தாக்கம், தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
குறிப்பாக இலங்கையில் வட மத்திய மாகாணத்தில் பலர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். சிறுநீரக நோய் குறித்து சர்வதேச அமைப்புகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இதன்படி பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியராக கடமைபுரிந்து, தற்போது சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பில் உள்ளக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக செயற்படும் இலங்கை விசேட வைத்தியர் பேராசிரியர் சாந்தி மென்டிஸ் வேண்டுகோளுக் கிணங்க, உலக சுகாதார அமைப்பினால் இந்த சிறுநீரக நோய் தொடர்பிலான 3 அறிக்கைகளை ஆராய்ச்சியின் பின்னர் முன்வைத்திருந்தது.
இதன் முதலாவது அறிக்கை 2011 ஜுன் மாதத்திலும், இரண்டாவது அறிக்கை 2011 ஒக்டோபர் மாதத்திலும், மூன்றாவது அறிக்கை 2012 பெப்ரவரி மாதத்திலும் சமர்ப் பிக்கப்பட்டுள்ளன. மருத்துவச் சபை ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டது. இதன் பிரகாரம் குறித்த அறிக்கைகளில் உலக சுகாதார அமைப்பானது இந்நோயை எவ்வாறு இனங்காண்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய குறிப்புகளை குறிப்பிட்டிருந்தது.
இந்த நோய் மேலும் பரவுவததை தவிர்க்க தாமதமின்றி இந்த அறிக்கைகளில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோய்களுக்குச் சிகிச்சை வழங்குவதைப் பார்க்கிலும் அந்த நோயை இல்லாதொழிப்பதே மேல் ஆகும்.
துரதிர்ஷ்டவசமாக உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் உலக சுகாதார அமைப்பின் குறித்த 3 அறிக்கைகளிலும் நோய்த்தடுப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நோயானது வட மத்திய மாகாணத்திலேயே அதிகளவில் பரவிவருகின்றது என்பதை தற்போதுள்ள அரசு தெரிவிக்கவில்லை.
இப்போதாவது உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட 3 அறிக்கைகளி லுமுள்ள பரிந்துரைகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையில் உள்ள வற்றை தாமதமாகியும் நடைமுறைப்படுத்தாவிட்டால் அப்பாவி மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு வழி கிடையாது. மக்களைக் காப்பாற்றுவது அரசின் பொறுப்பு.
விருத்தியாகும் சிறுநீரக நோயை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் சிகிச்சை நிலையங்களை திறந்துவைப்பதில் என்ன பயன்? எதிர்காலத்தில் இந்நோய் விருத்தியாகாமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.