சிறுமிகளைக் கடத்த முயற்சி நிந்தவூரில் பெரும் பதற்றம்

08.08.2012.
news
நிந்தவூரில் வைத்து வானில் கடத்தப்பட்ட பாடசாலைச் சிறுமிகள் இருவர் அம்பாறை நகரில் அமைந்துள்ள இராணுவச் சாவடிக்கு முன்னால் இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவத்தால் நேற்றுமுன்தினம் அப்பகுதியெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு:
நேற்றுமுன்தினம் மாலைநேர வகுப்புக்குச் சென்ற முஜிபுர் ரகுமான் ஜெய்னப் (வயது 09), முகம்மது உவைஸ் நபீசா (வயது 09) ஆகிய இரு மாணவிகளும் வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது வீதியால் வந்த சிவப்பு நிற (வடி) வான் ஒன்றிலிருந்து இறங்கிய இருவர், சிறுமிகள் இருவரையும் பலவந்தமாகத் தலைமுடியைப் பிடித்து வானில் ஏற்றிக்கொண்டு விரைந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் தமது கண்களைக் கறுப்பு நிறத்துணியால் கட்டியிருந்தனர் எனவும் கூரிய கத்தியைக் காட்டி சத்தமிட்டுக் கத்தினால் கொலை செய்து விடுவோமென மிரட்டினர் எனவும் சிறுமிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு நிந்தவூரில் கடத்தப்பட்ட இரு சிறுவர்களையும் ஏற்றிச் சென்ற கடத்தல்காரர்கள் அம்பாறையை அடைந்த போது வீதிச் சாவடியொன்றைக் கண்டதும் சிறிது தூரத்தில் சிறுமிகள் இருவரையும் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சிறுமிகள் இருவரும் அழுதுகொண்டு பொலிஸாரிடம் தமக்கு நடந்த விடயத்தைச் சொல்லி அழுதுள்ளனர்.
இம்மாணவிகளை விசாரித்த பொலிஸார் அவர்களிடமிருந்து பெற்றோரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்று, நிந்தவூரிலுள்ள பெற்றோருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கடத்தப்பட்ட இரு மாணவிகளும் நிந்தவூருக்குக் கொண்டுவரப்பட்டனர். இது தொடர்பாக இரு பிள்ளைகளின் பெற்றோரும் சம்மாந்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் நிந்தவூர்ப் பிரதேசத்தில் வியாபாரம் அல்லது வேறு தேவைகளுக்காக நுழைந்த வடி வான் சம்பந்தப்பட்ட சகல விடயங்களையும் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி தஹநாயக்க உத்தரவிட்டுள்ளார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.