1000 ஆண்டு கால தொன்மையான தமிழ் சாசனங்கள் கண்டுபிடிப்பு

06.09.2012.BY.rajah.
இலங்கையிலே உலகப் பெரு நெறிகளான நான்கு சமயங்களும் நிலைபெறுகின்றன. நெடுங்காலமாக இவற்றிடையே பரஸ்பர நல்லுறவுகள் நிலைபெற்றுள்ளன. இந்த நான்கு சமயங்களிலும் சைவ சமயமே மிகப் புராதனமானது. சைவசமயம் ஆலய வழிபாட்டையே அடிப்படை அம்சமாகக் கொண்டது. இலங்கையிலுள்ள இந்துக்கோயில்களில் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்பவையே மிகவும் புராதனமானவை; பிரசித்தி பெற்றவை; பாடல்பெற்ற தலங்கள் என்னும் சிறப்பு அவற்றிற்கு உண்டு.
பாடல்பெற்ற தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வரலாறு மிகத்தொன்மையானது என்பதை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தும் மிக முக்கிய சான்றாதாரங்கள் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் அண்மையில் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. திருக்கேதீஸ்வரத்தில் கோபுரத்துக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள நந்தி படிமத்திலும் ஆலயத்தின் உட்பிரகார வீதியில் மூலஸ்தானத்திற்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான லிங்கத் திருமேனியிலும் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்களின் நீளமான வாசகங்கள் அமைந்திருப்பதை பேராசிரியரினால் அடையாளம் காண முடிந்தது. இந்தக் கண்டுபிடிப்பினால் திருக்கேதீஸ்வரத்தின் தலப்பெருமை மேலும் சிறப்புப் பெறுகின்றது.
திருக்கேதீஸ்வரம் பற்றி திருஞானசம்பந்தரும் சுந்தர மூர்த்திநாயனாரும் தேவார பதிகங்களைப் பாடியுள்ளனர். அப்பர் தேவாரத்திலும் திருக்கேதீஸ்வரம் குறிப்பிடப் படுகின்றது. சேக்கிழாரின் பெரியபுராணத்திலும் திருக்கேதீஸ்வரத்தைப்பற்றி குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் சோழராட்சி
சோழரின் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டிருந்த 10 ஆம், 11ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பல பகுதிகளில் புதிய சிவாலயங்கள் அமைக்கப்பட்டன. அவை அதிகளவில் பொலன்னறுவையிலும் தமிழரின் பெரு நகராக விளங்கிய பதவியாவிலும் கட்டப்பட்டன. ஆயினும் சோழப்பேரரசர்களும் அவர்களின் பிரதிநிதிகளாக இலங்கையிலே சோழஇலங்கேஸ்வரன் என்ற பட்டம் பெற்று ஆட்சி புரிந்த சோழ வம்சத்து இளவரசர்களும் பாடல்பெற்ற தலங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினர். இந்தப் பாடல் பெற்ற தலங்களோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்புகள் தொல்லியல் சான்றுகளின் மூலம் தெரியவந்துள்ளன. குறிப்பாக சாசனங்களும் கலைச் சின்னங்களும் இதற்கு அடிப்படையானவை என்பது குறிப்பிடத்தக்கது.
16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்துச் சென்ற போர்த்துக்கேய இராணுவம் திருக்கேதீஸ்வரக் கோயிலை சூறையாடி இடித்து அழித்து விட்டது. ஆறுமுகநாவலர் "யாழ்ப்பாண சமயநிலை' எனும் நூலில் திருக்கேதீஸ்வரத்தின் புனருத்தாரணத்தில் சைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்கள். அதன் பயனாக 19 ஆம் நூற்றாண்டிலே கொழும்பிலுள்ள செட்டியார் சமூகத்தினர் ஒரு சிறு ஆலயத்தை அமைத்து வழிபாடுகள் நடை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.
கோயிலில் புதிதாக கண்டுபிடித்த சாசனங்கள் குறித்து பேராசிரியர் பத்மநாதன் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது. ""ஈழத்திலுள்ள சிவாலயங்களில் பாடல்பெற்ற தலங்கள் தனிச் சிறப்பானவை; மிகவும் புராதனமானவை. சோழப் பேரரசர் இவற்றைப் புனரமைப்பதிலும் அவற்றிற்கு ஆதரவு வழங்குவதிலும் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பது சாசனவியல் ஆராய்ச்சி மூலம் தெளிவாகியுள்ளது. முன்பு அதாவது 1880 ஆம் ஆண்டளவில் திருக்கேதீஸ்வரத்தில் அகழ்வாராய்ச்சி மூலம் எடுக்கப்பட்டு கொழும்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரண்டு கல்வெட்டுக்கள் ஈழமான மும்முடி சோழ மண்டலத்து மாதோட்டமான ராஜராஜபுரத்தில் முதலாம் ராஜராஜன் ஒரு பிரமாண்டமான கற்றளியைக் கட்டுவித்தான் என்பதை உறுதிசெய்கின்றன. காலப்போக்கில் பிற்காலத்தவர்களால் அந்தக் கோயில் மேலும் விசாலமாக்கப்பட்டது. இந்தக் கோயிலின் சின்னமாக கொழும்பு அருங்காட்சியகத்திலுள்ள சாசனங்கள் விளங்குகின்றன. 16 ஆம் நூற்றாண்டு முடிவில் போர்த்துக்கேயர் அந்தக் கோயிற் கட்டிடங்களைத் தகர்த்து அதன் அழிபாடுகளை தங்கள் கோட்டை முதலான கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தினார்கள். அத்திபாரம் கூட தெரியாதளவிற்கு அடியில் இருந்த கற்களை எல்லாம் கிளறி எடுத்துவிட்டார்கள்.
அகழ்வாராய்ச்சி மூலம் பெறப்பட்டு கொழும்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களில் இருந்து மட்டும்தான் கோயிலைப் பற்றி விளக்கும் ஆதாரங்கள் உண்டு என்று இதுவரை கருதப்பட்டது. ஆனால் லிங்கம், நந்தி ஆகிய சாசனங்களில் திருக்கேதீஸ்வரத்தினுடைய புராதன வரலாற்றின் சிறப்பு மிக்க அத்தியாயமொன்று மறைந்துள்ளது. இவற்றில் ஆலய வரலாறு பற்றியும் அந்தக் கால சைவ சமய வழிபாடு, மாதோட்ட சைவ மக்கள், அவர்கள் ஆலயத்தில் கொண்ட அபிமானம், அதற்கு வழங்கப்பட்ட நன்கொடைகள், தானம் வழங்கியவர்களின் பெயர்கள் ஆகியவற்றைப் பற்றிய சிறப்பான விபரங்கள் அடங்கியிருக்கும்.
தமிழ்நாட்டுக் கோயில்கள் பலவற்றின் வரலாறுகளைப் படித்தும் நேரில் அவதானித்தும் தலத்திலுள்ள சாசனங்களைப் பற்றிய ஆய்வுகளைச் செய்தும் அனுபவங்கள் உடையவர்கள் இந்தச் சாசனங்களை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளமுடியும். அத்துடன் இந்திய அரசாங்கம் திருக்கேதீஸ்வரத்தைப் புனர்நிர்மானம் செய்யும் வேலைகள் தொடங்கும் தறுவாயில் இந்தச் சாசனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை ஒரு தெய்வாதீனமான அருஞ் செயலாகும்.
இந்திய அரசாங்கம் இவற்றைப் படியெடுத்து வாசகங்களை மீட்டுக்கொள்வதற்கான முயற்சியை மேற்கொண்டால் ஈழத்துச் சைவர்களின் பெரும் பாராட்டைப் பெறமுடியும். தமிழகத்து தொல்பொருளியல் திணைக்களத்து சாசனவியலாளர்களினால் இப்பணியை சிறப்பாக நிறைவேற்ற முடியும்'' என்று தெரிவித்த பேராசிரியர் இது குறித்து உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்.
கொழும்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள
திருக்கேதீஸ்வரக் கல்வெட்டுகள்
திருக்கேதீஸ்வர அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டு கொழும்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு சாசனங்களினுடைய புதிய படிகளைத் தயாரிக்க, அவற்றைப்படித்து புதிய பதிப்புகளை வெளியிடுமாறு கொழும்பு அருங்காட்சியகம் பேராசிரியர் சி. பத்மநாதனிடம் ஒப்படைத்தது.அவற்றை மீளாய்வு செய்த அவரால், பாழிகுமரனால் அமைக்கப்பட்ட ராஜராஜேஸ்வரம் பற்றிய சாசனம் முதலாம் ராஜராஜன் வழங்கிய நன்கொடைகளைப் பதிவு செய்கின்றது என்ற புதிய முடிவுக்கு வர முடிந்தது.
திருக்கேதீஸ்வரத்தில் அகழ்வாராய்ச்சி
பசுபதிச் செட்டியார் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பழைய ஆலயம் இருந்த இடத்தை அறிந்து கொள்வதற்கு பெரும் தொகையான தொழில் வினையர்களைக் கொண்டு வந்து அகழ்வாய்வு செய்தார். அகழ்வாய்வின்போது கண்டெடுக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் தவிர மூன்று பிரதான சைவ சமயச் சின்னங்களும் கிடைத்தன. இவை வருமாறு:
1. பிரமாண்டமான தோற்றமுடைய லிங்கம்.
2. பழைய ஆலயத்திலிருந்த நந்தியின் சிற்ப வடிவம்.
3. சோமஸ்கந்த வடிவம்
சைவசமய வழிபாட்டு மரபில் முதலிரண்டும் மிகப்புனிதமானவை. இதுவரை இலங்கையில் கிடைத்துள்ள லிங்கங்களில் திருக்கேதீஸ்வரத்தில் கிடைத்த லிங்கமே அளவில் மிகவும் பெரியதாகும்.
இலங்கையில் வேறெங்கும் காண முடியாத நந்தி,லிங்கம்
அதேபோல அங்கிருந்த நந்தியைப் போல் கலைவனப்பும் பிரமாண்ட தோற்றமுடைய வேறு எந்த வடிவமும் இலங்கையில் காணப்படவில்லை. திருக்கேதீஸ்வர திருத்தலத்தினுடைய மேலோங்கிய சிறப்பிற்கு இவை இணையில்லாத சிறப்புடைய ஆதாரங்கள் ஆகும். அவை ஈழ நாட்டின் சைவ சமயத்திற்கும் அதன் கலை மரபுகளுக்கும் அணிகலமானவை.
இவற்றில் மற்றுமொரு பெரும்சிறப்பு அமைந்திருக்கின்றது.முன்பு பெருமக்கள் ஆலய திருப்பணிகளில் பங்குபற்றியிருந்த போதிலும் லிங்கம், நந்தி ஆகியவற்றில் அமைந்திருக்கும் எழுத்துக்கள் எவர் கண்ணிலும் தென்படவில்லை. அண்மையில் பேராசிரியர் பத்மநாதன் திருக்கேதீஸ்வரம் ஆலயம் சென்ற வேளையிலேயே நந்தி, லிங்கம் இரண்டையும் உன்னிப்பாகக் கவனித்து அவற்றில் ஆயிரம் ஆண்டுகால தொன்மையான தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
நந்தி, சிவலிங்கம் ஆகியவற்றிற்கு காலாகாலாமாக அபிசேகம் செய்யப்பட்டதால் நெய், எண்ணெய் ஆகியவற்றின் சாத்துகளுடன் தூசியும் படிந்து படைபடையாக இவை இரண்டும் காணப்படுகின்றது. இதனால் எழுத்துகள் தெளிவில்லாமல் இருக்கின்றன. சாசனங்களில் பயிற்சி இல்லாதவர்களால் இந்த எழுத்துகளை அடையாளம் காணமுடியாது.
பொலன்னறுவைக் காலத்திலிருந்த தமிழ் வணிகத்தவர்களின் வீர வசனங்களை மீட்டு, அவற்றை வெளியிடும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது, பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் ஆலோசனைப்படி ஜப்பானிய பேராசிரியர்களைக் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டு, ஜப்பானில் உள்ள தைஷோ பல்கலைக்கழகத்தின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதே மாதிரியான ஒரு வேலைத்திட்டம் அல்லது பெருமுயற்சியின் ஊடாகத்தான் புதிதாக அடையாளம் காணப்பட்ட அரிய சாசனங்களில் காணப்படும் பூரணமான விபரங்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.
சோமாஸ்கந்தர் வடிவம்
மூன்றாவது தொல்பொருட் சின்னமாக சோமாஸ்கந்தர் வடிவம் திகழ்கின்றது. இந்த வடிவம் குறித்து பேராசிரியர் சி. பத்மநாதன் கருத்துத் தெரிவிக்கும்போது பின்வருமாறு கூறினார். "இந்த சோமாஸ்கந்தர் வடிவம் 10 ஆம் நூற்றாண்டு காலத்தையது என்று பலரும் சொல்லிவந்தார்கள். அதன் கலையம்சங்கள் பிற்கால பாண்டியரின் செல்வாக்கினைப் பிரதிபலிக்கின்றது. இந்தப் படிமத்தின் பீடத்தில் காணப்படும் வரிவடிவங்கள் 11 ஆம் நூற்றாண்டுக்குரியவற்றிலிருந்து கணிசமான அளவு வளர்ச்சியடைந்த நிலையிலுள்ளன. எனவே சோமாஸ்கந்த வடிவத்தை யாழ்ப்பாண மன்னர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்து பண்பாட்டுச் சின்னம் என்று கொள்வதே பொருத்தமானது.''
பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் கல்விச்சுற்றுலாவாக திருக்கேதீஸ்வரம் யாத்திரை சென்று வழிபாடாற்றி, இத்தகைய சைவ சமய இணையில்லாத சிறப்புடைய தொல்பொருட் சின்னங்களை தரிசிக்க வேண்டும். அதற்கு வேண்டிய ஒழுங்குகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கல்வியதிகாரிகள் செய்ய வேண்டும்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.