பேய் விரட்டும் வினோத திருவிழா: பக்தர்கள் பரவசம்!

 
அக்டோபர் 25,2012.By.Rajah.நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த, அச்சப்பன் கோவில் திருவிழாவில், பக்தர்களை சாட்டையால் அடித்து, பேய் விரட்டும், "வினோத நிகழ்ச்சி நடந்து. நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில், அச்சப்பன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில், ஆண்டுதோறும், ஆயுதபூஜைக்கு மறுநாளான விஜயதசமியன்று, திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதில், குரும்பா இன மக்கள் மட்டும் பங்கேற்பர்.விழாவின், முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டுதல், சேர்வை நடனம் உள்ளிட்டவை நடக்கும். இதில், திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் துஷ்ட ஆவி பிடித்தோர் பங்கேற்பர்.அவர்கள், தரையில் மண்டியிட்டபடி, கைகளை மேலே தூக்கியிருப்பர். கை தூக்கியுள்ள பக்தர்களை, அச்சப்பன் கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபர், பிரம்மாண்ட சாட்டையை சுழற்றி, நடனமாடியபடி அடிப்பது வழக்கம்.

அதன் மூலம், தங்களை பிடித்த துஷ்ட ஆவி உள்ளிட்டவை நீங்கும் என்பது, விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் நம்பிக்கை. இந்தாண்டுக்கான, அச்சப்பன் கோவில் திருவிழா, விஜயதசமியான, நேற்று நடந்தது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குரும்பா இன மக்கள், கோவிலில் குவிந்தனர். மாலை, 3 மணியளவில், பிரசித்தி பெற்ற பேய் விரட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. அதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் ஈர ஆடையுடன் வரிசையாக மண்டியிட்டு, கைகளை மேலே உயர்த்தியவாறு காத்திருந்தனர்.

கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபரும் மேள தாளம் முழங்க சாட்டையை சுழற்றியபடி வந்தனர். பின், கைகளை மேலே உயர்த்தி மண்டியிருந்த பக்தர்களை சாட்டையை சுழற்றி அடித்தனர். ஒரே அடியில் சிலர் எழுந்து சென்றனர். ஒரு சில பக்தர்கள் இரண்டு, மூன்று அடிகளுக்கு பின் எழுந்து சென்றனர்.அச்சன் கோவில் திருவிழாவையொட்டி, 40க்கும் மேற்பட்டோர் நேர்த்திக் கடனாக, தங்களது தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டனர். மேலும், விழாவின் ஒரு பகுதியாக, குரும்பா இன மக்கள், தங்களது பாரம்பரிய உடையணிந்து, சேர்வை நடனம் ஆடினர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.