
உலகளவில் இன்று பத்தில் 4 பேர் தீராத வலியினால் அவதிப்படுகின்றனர். இதன் பின்னணியில் உடல்ரீதியான காரணங்கள், மன அழுத்தம், வேறு நோய்களின் பாதிப்பு என எத்தனையோ இருக்கலாம். சில வகை வலிகளை சாதாரண மருத்துவ முறைகளால் தீர்க்க முடியாத பட்சத்தில், பல்நோக்கு
அணுகுமுறையில், சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படலாம். எது எப்படியோ, வலிக்கான சிகிச்சை முடிந்ததும், அதை நிரந்தரமென நினைத்து நிம்மதியடைய வேண்டாம். மறுபடி அதே வலி வராமலிருக்க, சீரமைப்பு சிகிச்சை முறை அவசியம்’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை
மருத்துவர் குமார்.
பிசியோதெரபி எனப்படுகிற அந்த சீரமைப்பு சிகிச்சை முறையின் அவசியம் பற்றியும், அதை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் அவர்.‘‘வலிக்கான சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கை முறையிலும், உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது எத்தனை அவசியமோ, அதே அளவு சீரமைப்பு சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம்.
அதைக் கடைப்பிடிக்காவிட்டால், அனேக வலிகள் மறுபடி வரலாம். சீரமைப்பு சிகிச்சை முறை என்பது வலி நிவாரண சிகிச்சையின் கடைசிக் கட்டம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதை மேற்கொள்ள வேண்டும். உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி அளிப்பதுடன், தினசரி வேலைகளை சரியாகச் செய்யவும் அந்த சிகிச்சை வழி காட்டும்.
உதாரணத்துக்கு முதுகு வலி வந்து, சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், வலி மறைந்ததும் அதை மறக்கக் கூடாது. எப்படி உட்கார்வது, எழுந்திருப்பது, கீழே விழுந்த பொருளை எப்படி எடுப்பது, கம்ப்யூட்டர் வேலையை எப்படிப் பார்ப்பது என எல்லாவற்றுக்கும் பயிற்சி எடுக்க வேண்டும். அதாவது முதுகைத் தவறாகப் பயன்படுத்தாமல், சரியாகப் பயன்படுத்துவதற்கான அந்தப் பயிற்சி, மறுபடி வலி வருவதைத் தவிர்க்கும்.
அதி தீவிர வலிகளுக்கு, உடற்பயிற்சியுடன், ஐ.எஃப்.டி., லேசர், அல்ட்ராசானிக், மசாஜ் எனக் கூடுதலாக சில விஷயங்களையும் மருத்துவர் பரிந்துரைப்பார். எல்லா பயிற்சி களையும் மருத்துவரின் லோசனையின் பேரில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். வலி இருந்தாலும் பரவாயில்லை, உடற்பயிற்சியை நிறுத்தக் கூடாது என்கிற தவறான அபிப்ராயம் பலருக்கும் இருக்கிறது. அது மிகவும் தவறு. உடம்பை வருத்தி எந்தப் பயிற்சியை செய்வதும் ஆபத்தானது.
உங்கள் நண்பருக்கு கையோ, காலோ வலிக்கிறது.... மருத்துவர் அவருக்கு சில பயிற்சிகளைப் பரிந்துரைக்கிறார். அதே இடத்தில் உங்களுக்கும் வலி வருகிறது என்பதால், உங்கள் நண்பர் செய்கிற அதே பயிற்சிகளை நீங்களும் செய்யக் கூடாது. வலிக்கான காரணம், அதன் தீவிரம் போன்றவற்றைப் பார்த்துவிட்டு, உங்களுக்கான சரியான பயிற்சியை மருத்துவர்தான் பரிந்துரைக்க வேண்டும்.செய்ய வேண்டிய நேரத்தில் செய்யத் தவறுகிற உடற்பயிற்சிகளும் சரி, செய்யக்கூடாத நேரத்தில் செய்கிற உடற்பயிற்சிகளும் சரி... இரண்டுமே ஆபத்தானவை!’’
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen