முதுகுவலிக்கு வேக்யூம் சிகிச்சை!

         
Friday 26 October 2012  By.Lovi.
நான்கு கால் விலங்கு நிலையிலிருந்த மனிதனை நிமிர்த்தி நேராக்கியது பரிணாம வளர்ச்சி. அந்தப் போராட்டத்தில் ‘பெண்டு நிமிர’ உழைத்த உறுப்பு, முதுகெலும்பு. உறுதியற்ற மனிதர்களை ‘முதுகெலும்பில்லாதவனே’ என்பார்கள். வலிமைக்கு அடையாளமாகக் கருதப்படும் முதுகெலும்பை காலமாற்றம் திரும்பவும் வளைக்கப் பார்க்கிறது. ஆம், ‘முதுகுவலி’ இப்போதைய வாழ்க்கைமுறையில் தவிர்க்க முடியாத துயரம். ‘உட்கார்ந்தபடியே நீண்டநேர வேலை’, ‘தொடர்ச்சியான டூ-வீலர் டிரைவிங்’, ‘போதிய உடற்பயிற்சியின்மை’ போன்றவையே இதற்கு முக்கியக் காரணங்கள். இப்படிப்பட்ட முதுகுப் பிரச்னைகள் மட்டுமல்லாமல் வயிற்றுப் பிரச்னைகளுக்கும் அக்குபிரஷரில் இருக்கிறது ஆச்சரியப்படத்தக்க தீர்வு!

முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு நடக்கவே முடியாமல் போன நடிகர், நடிகைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அவர்கள் பிரபலங்கள் என்பதால் செய்தி வெளியே தெரிகிறது. இதே பாதிப்பால் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கும் சாதாரண மக்கள் எத்தனையோ பேர்! சென்சிடிவ்வான நரம்புகளின் சங்கமமான முதுகெலும்பை கண்டபடி அறுத்து விளையாடுவதும், மூளையோடு தொடர்புடைய முதுகெலும்பு திரவத்தை நினைத்த நேரத்தில் ஏதோ சிறுநீர் எடுத்துப் பரிசோதிப்பது போல உறிஞ்சுவதும் இன்று சர்வசாதாரணமாக நடக்கிறது. முதுகுவலி என சிகிச்சைக்குப் போனால் கிடைக்கும் முதல் அட்வைஸ், ‘கொஞ்ச நாளைக்கு வண்டி ஓட்டாதீர்கள்!’ என்பதாகத்தான் இருக்கும். வேலையை சுலபமாக்குவதற்கும், சௌகரியத்துக்காகவும்தான் கண்டுபிடிப்புகள். டூவீலர்களைப் பொறுத்தவரை ஷாக் அப்சார்பர் சரியான பராமரிப்பில் இருந்தால் தாராளமாகப் பயன்படுத்தலாம். வாகனத்தை ஓட்டும்போது நம் உடல் அதிக நேரம் ஒரே பொசிஷனில் இல்லாதபடி பார்த்துக்கொண்டால் மட்டும் போதும்.

‘முதுகுவலி ஏற்பட முதுகெலும்பு மட்டுமே காரணமல்ல’ என்பதுதான் அக்கு சிகிச்சை சொல்வது! நம் வயிற்றின் இடப்புறமாக அமைந்துள்ளது பெருங்குடலின் கீழிறக்கக் குடல். அந்தப் பெருங்குடலின் சக்தி குறையத் தொடங்கும்போது, அந்த பாதிப்பு இடது முதுகில்... முதுகெலும்பின் 4வது லம்பாரை ஒட்டிய சவ்வுகளில் வலி மூலம் உணரப்படும். ஆக, பெருங்குடலின் சக்தியைத் தூண்டிவிட்டாலே அந்த முதுகுவலியை விரட்டிவிடலாம்.

நோய்க்கான மூலகாரணத்தைக் கண்டுபிடித்துச் சரி செய்யும் அக்கு சிகிச்சை கோட்பாட்டின்படி, முதுகுவலியைக் கண்டறிவது மிகவும் எளிமையான விஷயம். கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கொஞ்சம் கீழ்ப்புறமாக சற்று அழுத்திப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். மெட்டாகார்பல் எலும்புப் பகுதியான அந்தப் பகுதியை அழுத்தும்போது வலி இருப்பின், முதுகுவலி பிரச்னை இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும்போது மெல்ல மெல்ல முதுகுவலி மாயமாகும் அதிசயத்தை உணர்வீர்கள்.

இதற்கு இன்னொரு சிகிச்சை, கப்பிங் தெரபி. அக்கு நிபுணரை ஆலோசித்து ஒரு சிட்டிங் பயிற்சி பெற்றால் போதும், வீட்டிலிருந்தபடியே செய்துகொள்ள முடிகிற எளிமையான பயிற்சிதான் இதுவும் (அடுத்தவர் உதவி தேவைப்படலாம்). வேக்யூம் முறையில் செயல்படும் கண்ணாடி அல்லது ரப்பரால் ஆன உபகரணங்களே இதற்கான கருவிகள். கழுத்தில் ஆரம்பித்து இடுப்பு வரை இந்த ‘வெற்றிட’ உபகரணங்களை கவிழ்த்து வைத்து சில நிமிடங்கள் படுத்திருந்தாலே போதும். இதைத் தொடர்ந்து செய்கிறபோது பெருங்குடலின் சக்தி நன்கு தூண்டப்பட்டு, பிரச்னை குணமாகிறது. முதுகைப் பொறுத்தவரை முக்கியமான ஒரே பிரச்னை இந்த முதுகுவலிதான். சுலபமான இந்த முறைகளை விட்டுவிட்டு, எதற்கெடுத்தாலும் சி.டி., எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்று சிக்கிவிடாதீர்கள். ஒருமுறை இந்த ஸ்கேன்களை எடுத்தால் நான்கரை ஆண்டுகள் அணு உலையில் வேலை பார்த்ததற்குச் சமம். அவ்வளவு கதிர்வீச்சு அதில் உண்டு. கதிர்வீச்சின் அபாயங்களை அறிவீர்கள்தானே?

அடுத்ததாக, வயிறு சார்ந்த பிரச்னைகளைப் பார்ப்போம். நமது உடலில் மார்புக்குக் கீழே ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம் ‘சோலார் பிளக்சஸ்’ எனப்படும் நாபிச்சக்கரம்தான். இது வேறொன்றும் இல்லை, சினிமாக்காரர்கள் பம்பரம் விளையாட, ஆம்லெட் போட பயன்படுத்தினார்களே... அதே தொப்புள்தான். எந்த நேரமும் சக்தி பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அக்குபங்சர் நிபுணர்கள்கூட உடலின் மற்ற பகுதிகள் போல் இந்த இடத்தில் ஊசி குத்த அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், அதே நாபிச்சக்கரத்தின் மூலம் வயிற்றுவலி உட்பட வயிறு சம்பந்தப்பட்ட 13 வகை நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதுதான் விசேஷம்.


‘மாக்சுபூசன்’ எனப்படும் அந்தச் சிகிச்சைக்குத் தேவையானவை, சிறு இஞ்சித் துண்டும் கொஞ்சம் உப்பும். தங்களுக்குத் தாங்களே செய்துகொள்வது சிரமம் என்பதால் உதவிக்கு யாரையாவது அழைத்துக் கொள்வது சிறந்தது. மல்லாந்து படுத்தபடி, தொப்புளின் மீது உப்பைப் பரப்ப வேண்டும். இஞ்சித் துண்டை பட்டையாகத் தட்டி அந்த உப்பின்மீது வைக்க வேண்டும். காய்ந்த மருக்கொழுந்து இலையைச் சுருட்டி அதன் நுனியில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டு அதை இஞ்சியின் மீது காட்டி வந்தால், தொப்புளோடு தொடர்புடைய சகல நாடிகளும் புத்துணர்ச்சி பெறுவதோடு, வயிறு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையும் வராது.

அதிகம் பளு தூக்குவதினாலோ, எசகுபிசகான உடற்பயிற்சியின்போதோ, குழந்தைகளைத் தவறுதலாக கையாளுகிறபோதோ நம் குடலில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம். குடலேற்றம் மலச்சிக்கலுக்கும், குடலிறக்கம் வயிற்றுப்போக்குக்கும் வழிவகுத்து விடலாம். இதை ஆஃப் செய்யும் ஸ்விட்சும் தொப்புள்தான். தொப்புளைச் சுற்றிலும் சிறு அழுத்தம் கொடுத்து, இறுதியாக தொப்புள் பகுதியை சற்று அதிக அழுத்தம் கொடுத்து அசைத்தால் குடலின் ஏற்ற இறக்கம் மாறி, தான் இருக்க வேண்டிய இடத்தில் வந்து சமர்த்தாக உட்கார்ந்துகொள்ளும்.

ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்

* மெட்டாகார்பல் எலும்புப் பகுதியில் வலியுள்ள இடங்களில் சில மிளகுகளை வைத்து பிளாஸ்டர் ஒட்டி மூடிவிடலாம். பிறகு அவ்வப்போது அந்த இடத்தை அழுத்துவதன் மூலமும் முதுகுவலியை விரட்டலாம்.

* தொடர்ந்து உட்கார்ந்திருப்பதைத் தவிர்ப்பது சிறந்தது. கிடைக்கிற இடைவேளைகளில் உடலுக்குத் தேவையான பயிற்சிகளைச் செய்யலாம். அக்குபிரஷர் பயிற்சிகளுக்குத்தான் தனியான இடம் தேவையில்லையே.

* முதுகுவலி பிரச்னை உள்ளவர்கள் முன்னோக்கிக் குனிவதைத் தவிர்க்க வேண்டும்.

* எளிமையான சர்வாங்காசனம் போன்ற யோகா பயிற்சிகளை செய்து வருவதும் முதுகுவலிக்கு நல்ல மருந்து

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.