திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்

.
அலங்கார வைபவம் முடிந்ததும் ஞானசம்பந்தர் உருத்திராட்ச மாலையினை எடுத்து நமச்சிவாய என்ற திருநாமத்தை மனதிலே தியானித்தவாறு தொழுது தாமே கழுத்தில் அணிந்து கொண்டார்.ஞானசம்பந்தர் கோடி சூரிய பிரகாச ஒளியுடன், அன்பர்களும், அடியார்களும்,

 உறவினர்களும் சூழ்ந்துவர, திருமணம் நடக்க இருக்கும் நம்பியாண்டார் நம்பியின் பெருமனைக்குள் எழுந்தருளினார்.பந்தலிலே போடப்பட்டிருந்த முத்துக்குடை நிழலின் கீழ் பொற்பலகையில் அமர்ந்தார்.சங்கநாதங்களும், சுந்தர கீதங்களும், மங்கல இசைக் கருவிகளும்

 ஒலித்த வண்ணமாகவே இருந்தன. வாழ்த்தொலிகளும், வேத முழக்கங்களும் இடையறாது ஒலித்துக் கொண்டேயிருந்தன.இதே சமயத்தில் நம்பியாண்டார் நம்பியின் அருந்தவப்புதல்விக்குக் காப்பு கட்டிச் சங்கற்பம் முதலிய வேதச் சடங்குகளைச் செய்தனர்.அப்பவளக் கொடி

பெண்ணுக்கு வைரத்தாலும், நவமணிகளினாலும் செய்யப்பட்ட பசும் பொன் ஆபரணங்களை வரிசையாகச் சூட்டி அலங்காரப் பொன் விளக்கு போல் பொலிவு பெறச் செய்தனர்.

அந்தணர் குலக் குழந்தைகள், ஓங்கி எழுந்த ஓமப்புகையில், வாசனைத் தூளை வீசினர். வேதியர்கள், பொற் கலசத்திலிருந்து நன்னீரையும், அரசிலையும், தருப்பையும் கொண்டு தெளித்தார்கள்.அழகு மகளிர் நறுமலர்களைத் தூவி

னர். குறித்த நேரத்தில் சிவக்கொழுந்தும், அக்கொழுந்தின் கரம்பற்றப் போகும் பொற்கொடி போன்ற நற்குண நங்கையும் ஆதிபூமி என்னும் மணவறையின் உள்ளே அமர்ந்தருளினார்.நம்பியாண்டார் நம்பி ஞானசம்பந்தருடைய கரத்தில் மங்கள நீரினை மும்முறை வார்த்துத் தமது மகளைத் தாரை

வார்த்துக் கொடுத்தார்.ஞானசம்பந்தர், மங்கை நல்லாளின் கரம் பற்றி ஓமத்தைச் சுற்றி வலம் வந்தார்.அபபொழுது அவரது திருவுள்ளத்திலே, எனக்கு ஏன் இந்த இல்லற வாழ்க்கை வந்தமைந்தது? சிற்றின்பத்தில் உழலு<வதைவிட, இவளுடன் எம்பெருமானின் திருவடி நீழலை அடைந்தே தீருவது என்று பேரின்ப ஆசை அமிர்தம் போல் சுரந்தது. அத்தகைய மெய்ஞ்ஞான எண்ணத்தோடு, ஞான சம்பந்தர் மனைவியோடும்,

மற்றவரோடும், உற்றார் உறவினர்களோடும் திருமணப் பெருங்கோயிலை வந்தடைந்தார். சிவனடியார் மலரடியை மனதிலே நிறுத்தி, தன்னை அவரது சேவடியில் சேர்த்துக் கொண்டருள வேண்டும் என்ற கருத்துடன், நல்லூர்ப் பெருமணம் என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடி அருளினார். அப்பொழுது விண்வழியே அசரீரியாக எம்பெருமான், நீயும், உன் மனைவியும், உன் புண்ணிய திருமணத்தைக் காண வந்தவர்களும், எம்மிடம் சோதியினுள்ளாகக் கலந்தடையுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருள் செய்தார்.

எம்பெருமான் மூன்று உலகங்களும் தம் ஒளியால் விளங்கும் வண்ணம் சோதிலிங்கமாக காட்சி அளித்தார். அப்பேரொளி திருக்கோயிலையும் தன்னகத்தே கொண்டு மேலோங்கி ஒளிமயமாக ஓங்கி நின்றது.

அச்சோதியிலே ஓர் வாயிலையும் காட்டியருளினார்.அன்பும், அறமும், அருளும், திருவும் உருவாகக் கொண்ட உமையாளின் திருமுலைப் பாலுண்ட புண்ணியத்தின் திரு அவதாரமாகிய திருஞானசம்பந்தப் பெருந்தகையார் - சைவத்தை வளர்த்து, செந்தமிழ்ப் பதிகம் பல பாடிய தென்னகத்துத் தெய்வப் புதல்வன் சிவபரஞ் சுடராகிய மனநல்லூர்ப் பெருமானைத் தொழுது

போற்றினார்.தண் தமிழால் பாடிப் பரவசமுற்றார். தேன் தமிழால் அபிஷேகம் செய்தார். பக்தி வெள்ளத்தில் மூழ்கினார்.உலகம் உய்ய, சிவஞான நெறியினை எல்லார்க்கும் அளிக்க வல்லது நமச்சிவாய என்னும் திருவைந் தெழுத்துப் பெருமந்திரமாகும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தினை, விண்ண வரும், மண்ணவரும் கேட்கும் வண்ணம் பாடினார் சம்பந்தர்.திருஞான சம்பந்தர் அனைவரையும் நோக்கி, பிறவித் துயரம் தீர யாவரும்

இப்பேரொளியிலே புகுவீர்களாக என்று கேட்டுக் கொண்டார். சிவாய நம; சிவாய நம என்ற வேத மந்திரத்தினை விண்ணை முட்டும் வண்ணம் பெருமழை போல் கோஷித்து வாழ்த்தினர். எல்லையில்லாத பிறவி என்னும் வெள்ளத்திலே மூழ்கித் தத்தளித்துக்கொண்டு, காற்றடைத்த பையாகிய காயத்திலே அடைபட்டு, உய்ய உணர்வின்றி மயங்கும் மக்களுக்கு பேரின்ப வழிகாட்டிய திருஞான சம்பந்தரின் திருவடியைத் தொழுது, நமச்சிவாய மந்திரத்தை மனதிலே தியானித்த வண்ணம் மக்கள் யாவரும் சோதியினுள்ளே புகுந்தனர்.

திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், திருநீல கண்ட யாழ்ப்பாண நாயனார், சிவபாத விருதயர், நம்பியாண்டார் நம்பி ஆகிய சிவனருட் செல்வர்கள் தம் இல்லறத்தாருடன் பேரொளியில் புகுந்தனர். ஏனையவர்களும், திருமணத்திற்கு வந்தணைந்தவர்களும், திருமணத்திற்கு பணிகள் செய்தோரும் தத்தம் மனையார்களோடு பேரொளியில்

 புகுந்தார்கள்.அருந்தவசிகளும், மறைமுனிகளும், ஆலயம் தொழ வந்த சால்புடை மக்களும் சோதியினுள் கலந்தனர். பேரின்ப வீட்டிற்குப் பெருவழிகாட்டிய ஞான சம்பந்தப் பெருமான் தம் மனைவியாரின் கையைப் பிடித்தவாறே அச்சோதியினை வலம் வந்தார். நமச்சிவாய என்ற நாமத்தை முழக்கியவாறு, சோதியினுள் புகுந்தார்.அதன் பின்பு அப்பேரொளியில் காணப்பட்ட வாயிலும் மூடிக்கொண்டது.தேவர்களும், முனிவர்களும்,

சிவகணத்தவர்களும் சிந்தை மகிழ்ந்து போற்றித் துதித்தனர்.கொன்றை மாலையை அணிந்த செஞ்சடை வண்ணர், உமாதேவியாருடன் விடைமேல் தோன்றி அருளினார்.பேரொளி புகுந்த சிவனருட் செல்வர்களைத் தமது திருவடி நீழலை அடைந்து திருப்பணி புரியும் திருப்பேற்றை

அளித்தார்.வேதங்களையும், ஏழுலகங்களையும் ஈன்று கருணை வடிவமாக நின்ற உமாதேவியாரின் திருமுலைப் பாலினைச் சிவஞான அமுதத்தோடு உண்டு, அருள்பெற்று, சைவத்தை உயர்வித்த அருந்தவச் செல்வன் திருஞான சம்பந்தப் பெருமானையும் அவர் தம் மனைவியாரையும் எம்பெருமான் தமது அருகிலேயே அணைந்து வாழும் நிகரில்லாப் பெருவாழ்வை அளித்தருளினார்.

குருபூஜை: திருஞானசம்பந்தரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.