உருவச் சிலையில் நேர்த்திக்கடன்


எல்லா கிராமங்களுக்கும் ஒரு காவல் தெய்வம் உண்டு. அந்தக்காவல் தெய்வமே பலருக்கு குல தெய்வமாகவும் இருக்கும்.  அம்மனே இது போல் காவல் தெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம்.  வீரகாளியம்மன், மாகாளியம்மன் மாரியம்மன், கருமாரியம்மன், அங்காள பரமேஸ்வரி போல் பலருண்டு.

இதேபோல் முனீச்வரன், கருப்பண்ண சாமி, முத்துக்கருப்பன் என பல ஆண் தெய்வங்களும் உண்டு.  சில கிராமங்களில் சாதரணமாக வாழ்ந்து வரும் ஒரு சிலர் தங்கள் ஊருக்காகவோ அல்லது  வேறு  எதாவது விதத்தில்  தியாகம் செய்து உயிர்விட அவர்கள் நாளடைவில் அங்கு இருக்கும் மக்களுக்கு தெய்வமாக ஆகிவிடுவதுண்டு. இதில் ஆண்களும் பங்கு பெறுகிறார்கள். சில சமயம் இரு சகோதரர்கள் அல்லது  சகோதரிகள் சேர்ந்தே எல்லைத்தெய்வமாக இருப்பதும் உண்டு.

குமரிமாவட்டம் முன்பு கேரளாவுடன் சேர்ந்திருந்தது. அங்கிருந்த பலர் மலையாள சம்பிரதாயங்களை வழிபட்டு அந்த மொழியும் பேசிவந்தனர். அப்போது அங்கு ஆண்டு வந்த வேணாட்டு மன்னன் உறவில் இரு சகோதரிகள் தங்கள் நாட்டையும் குலத்தையும் மிகவும் நேசித்தனர். இரு சகோதரிகள் குணமும் மிகவும் வித்தியாசமானது தான். தங்கையின் கோபம் அக்காளிடம் இல்லை. அக்கா மிகவும் சாந்தக் குணமுடையவள். ஆனால் தங்கை உக்ரமானவள்.

ஒரு சமயம் தங்கள் குல மானம் காத்துக்கொள்ள தங்கள் உயிரையும்  அவர்கள் கொடுக்கத் துணிந்தனர். அவர்கள் தற்கொலை மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. தங்கள் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்தனர். தற்கொலை ஆனதால் பூலோகத்திலேயே சுற்ற நேர்ந்தது. அந்த ஊர் மக்கள்

 அவர்கள் இருவருக்கும் தெய்வ பதவியை அளித்து கும்பிடத் தொடங்கினர். அவர்களும் பதுமநாபபுரம் அரண்மனை அருகில் இருக்கும் வயல்கள் தவிர சுற்றுச்சூழலிலும் நடமாடத்தொடங்கினர். சிலர் பேய் என்று பயந்தனர். 

ஒரு நாள் இவர்கள் வந்துக்கொண்டிருந்த போது வேணட்டு மன்னர் ஒருவர் தன் கோட்டை வாயிலில் நின்று இயற்கையை ரசித்துககொண்டிருந்தார்.  அழகிய தென்றல் வீசிக்கொண்டிருந்தது  அந்த நேரம்  இரு சகோதரிகள்  அங்கு  உக்ரமாகக் கூச்சலுடன் கத்தியபடி வந்தனர்.

'யார் நீ ? இங்கு என்ன செய்கிறாய்?" என  மன்னரைக்கேட்டனர்
மன்னரும் "நான் பத்மநாமதாசர்" என்று கண்களை மூடிக்கொள்ள இந்த சகோதரிகளைப்பற்றி எல்லாம் அவருக்குத் தெரிந்தது.

"சகோதரிகளே! குலப்பெருமையைக் காத்த நீங்கள் இந்தக் கிராமத்திற்கே தெய்வமாக ஆகிவிட்டீர்கள். ருத்ரமாக ஆகாமல் சாந்தமாகிவிடுங்கள். உங்களுக்கு மேலாங்கோட்டில் ஒரு ஆலயம் அமைத்து  தருகிறேன்" என்றார்.
சகோதரிகளும் ஒத்துக்கொண்டனர்.

அவர் சொன்னபடி ஆலயமும் அமைந்தது. அன்றைய தினத்திலிருந்து மேலாங்கோட்டு இசக்கியம்மன் காவல் தெய்வமாக ஆகி எல்லோரையும் காத்து வருகிறாள்.

அன்றையதினத்திலிருந்து மழலைச்செல்வம் வேண்டி  நிற்பவர்கள் , நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். என்ன நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டுகிறார்கள்  தெரியுமா?  தங்கள் கொடிய நோய் நீங்கினதும்  இசக்கி அம்மன் போல் உருவச்சிலை செய்து வைப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். எல்லோரையும் காத்து அருள் புரிகிறாள் இசக்கி அம்மன். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறியதும் பக்தர்கள் இரு சகோதரிகளின் சிலைப்போல்  செய்து  தங்கள் நேர்த்திக்கடனைச்செலுத்தி விடுகிறார்கள்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.