கலைகள் ஒன்றுக்கு ஒன்று மிக நெருக்கமானா இலக்கியமும் சிற்பமும்...

எல்லாக் கலைகளும் மனித வாழ்க்கையில் இருந்து பிறந்தவைதாம். மனித வாழ்க்கையின் தேவைகளையும், நம்பிக்கைகளையும், அழகுணர்ச்சியையும் வெளிப்படுத்துபவைதாம். எனவே இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பும் தவிர்க்க முடியாதது. சில கலைகள் ஒன்றுக்கு ஒன்று மிக நெருக்கமாக அமைந்திருக்கும். வேறு சில கலைகள் பல கலைகளுக்கு நடுவில் நாயகமாக அமர்ந்திருக்கும். இலக்கியம் அப்படிப்பட்ட நாயகக் 
கலைகளில் ஒன்று.
நம் மரபுவழி இலக்கியங்கள் பெரும்பாலும் கவிதை வடிவில் அமைந்தவை. கவிதையும் இசையும் பிரிக்கமுடியாத தன்மை கொண்டவை. இலக்கியம், வரலாறு ஆகிய இரண்டு கலைகளும் காலம் என்கிற பரிமாணத்தைத் துல்லியமாகக் காட்ட வல்லவை. ஒன்று தளர நேரிடும்
 போது மற்றொன்று
 கைகொடுக்கும் தன்மை வாய்ந்தவை. இலக்கியத்தோடு நெருங்கிய தொடர்புள்ள மற்றொரு கலை சிற்பக்கலையாகும். ஒளிப்படங்களும், திரைப்படங்களும் மனித மூளையில் பேராட்சி செலுத்தும் காலமிது. எனவே சிற்பக் கலையினுடைய அருமை பெருமைகளை நாம் உணராமல் போய்விட்டோம்.
செதுக்க வேண்டிய சிற்பம் கடவுளானாலும், மனிதனானாலும் அந்த உருவத்தை மனத்தில் கற்பனை செய்கிறான் சிற்பக் கலைஞன். அந்தக் கற்பனை அந்தரத்தில் பிறப்பது அன்று. அவனுடைய வாழ்க்கை அனுபவங்களோடு ஒட்டிப் பிறப்பதாகும். அதைப் போன்று அழகியல் அனுபவம் வேறு யாருக்கேனும் கிடைத்து இருக்கிறதா? என்று பார்க்கிறான். பெரும்பாலும் முன்பிறந்த இலக்கிய அனுபவங்கள் அவனுக்குக் கைகொடுக்கின்றன. அத்தகைய கவிதைகளை மனத்துள் வரித்துக் கொள்கிறான். கண்ணை மூடிக்கொண்டு கவிதையைச் சொன்னால் மனத்தில் அந்த உருவம் அப்படியே வந்து நிற்கிறது.
பெருமாள் கோயில்களில் திருமங்கையாழ்வாரின் சிலையைப் பார்த்திருக்கிறீர்களா? அவர் மணக்கோலத்தில் வந்த இறைவனை வேலைக் காட்டி அச்சுறுத்தி வழி மறிக்கிறார். திருமால் ஆகிய இறைவன் அவரது வலது காதிலே எட்டெழுத்தால் ஆன நாராயண மந்திரத்தை 
உபதேசித்துத்
 திருத்துகிறார். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின் திருமங்கையாழ்வாரின் தோற்றம் எப்படி இருந்தது என்பதனை ஒரு கவிஞன் கவிதையாக்குகிறான். இந்தக் கவிதையைச் சிற்பமாக்குகிறான் மற்றொரு கலைஞன் மெத்தப்பணிவாக, மார்பில் வேலை அணைத்தபடி, ஒரு கையால் வாய் புதைத்து, தலையைச் சற்றே முன்புறம் சாய்த்து, எதையோ கேட்கும் பாவனையில் அமைந்த சிலையினைப் பாருங்கள் சிலையைப் பிறப்பித்த பாட்டு இதுதான்.
"மறையுரைத்த மந்திரத்தை மால்உரைக்க, அவன்முனே
மடிஒதுக்கி மனம்ஒடுக்கி வாய்புதைத்து ஒன்னலார்
கறைகுளித்த வேல்அணைத்து நின்றஇந் நிலைமைஎன்
கண்ணை விட்டகன்றிடாது கலியன்ஆணை 
ஆணையே"
பாட்டினை நினைத்தபடியே சிற்பத்தைப் பார்த்தால் மனம் ஒடுக்கிய செய்திகூடக் கண்ணுக்குப் புலப்படும். கலையின் வெற்றி இதுதான். எழுத்தாணியாலே ஏட்டிலே கவிஞன் வடித்த பாட்டு, சிற்பக்கலைஞனால் உளியினைக் கொண்டு கல்லிலே வடிக்கப்பட்டு விட்டது. இவ்வகையான பாட்டுக்களை வடமொழியாளர் "தியான சுலோகம்" என்று 
குறிப்பிடுவர்.
தமிழர்களின் சிற்பக்கலைத் திறமையை உலகிற்குக் காட்டிய சிற்பங்களில் முதன்மையானது நடராசரின் ஆனந்தத் தாண்டவச் சிற்பமாகும். கல்லிலும், செம்பிலும் இந்த ஆனந்தத் தாண்டவ நடராசச் சிற்பத்தைத் தமிழகமெங்கும் கோயில்களில் காணலாம். இந்தச் சிற்பத்தின் கலை அழகினையும், தத்துவப் பிற்புலத்தையும் குறித்துக் கலை அறிஞர் "ஆனந்த கென்டிஷ் குமாரசாமி" எழுதிய சிவ நடனம் என்னும் ஆங்கில நூல் உலகக் கலை வரலாற்றில் புகழ்பெற்ற நூலாகும்.
மாமன்னன் முதலாம் இராசராசன் இந்தச் சிற்பத்திற்கு "ஆடல் வல்லான்" எனப் பெயரிட்டான். அவன் காலத்தில்தான் (கி.பி. 985 - 1010) இந்தச் சிற்ப வடிவம் சிறப்புப் பெற்றதாகத் தெரிகிறது. திருநாவுக்கரசரின் பாடல் ஒன்று இச்சிற்பத்திற்கு உரிய அடிப்படையாகும்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்
குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற்
பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்
காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே.
இந்தப் பாட்டை நினைத்துக் கொண்டு அந்த ஆனந்தத் தாண்டவச் சிற்பத்தைப் பாருங்கள். சிற்பக் கலையினை இலக்கியக்கலை வழி நடத்திய உண்மை உங்களுக்குப் புலப்படும். ஊர் ஊராகத் தமிழ்நாட்டில் காணக் கிடைக்கிற நடராசரின் செப்புத் திருமேனிகளில் நுணுக்கமான வேறுபாடுகளும் பல உண்டு.
எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம். ஆடல்வல்லானின் நடனச் சிற்பங்களில் அவர் முயலகனின் முதுகின் மீது ஒரு காலை ஊன்றி ஆடுவது மரபு. ஆனால் தஞ்சை மாவட்டம் திருநல்லூரில் மட்டும் அவரது ஊன்றிய கால் முயலகனின் தலைமீது பதிந்திருக்கும். பொது விதிக்கு மாறாக இந்தச் சிற்பம் அமைந்தது ஏன் என்ற வினாவுக்கு விடை இலக்கியத்தில் கிடைக்கிறது. தேவாரத்தில் அப்பர் தம் திருநல்லூர்ப் பதிகத்தில்
"நனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார்
நல்லூர்எம்பெருமானார் நல்லவாறே
என்று பாடுகிறார். அப்பரின் தலைமீது சிவன் திருவடி வைத்த ஊர் என்பதனால் முயலகனின் தலைமீதும் திருவடி வைத்தது போல் சிற்பி கற்பனை செய்திருக்கிறான். சிற்பக்கலைஞன் மீது கவிஞன் செலுத்திய செல்வாக்கிற்கு இது ஓர் அடையாளம்.
பூம்புகாருக்கருகில் மேலப்பெரும் பள்ளம் என்றொரு ஊர். இதன் பழைய பெயர் திருவலம்புரம். இந்த ஊரின் சிவபெருமான் செப்புத் திருமேனியில் "வட்டணை படவந்த நாயகர்" என்று எழுத்துப் பொறிப்பும் உள்ளது. "வட்டணை" என்பது நடனக்காரன் ஆடியவாறே ஆடுகளத்தை விரித்துக் கொண்டே செல்வதாகும். இது ஒரு நாட்டியக் கலைச் சொல். ஆடல் வல்லானாகிய சிவபெருமான்,
"வட்டணைகள் படநடந்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கு மன்னினாரே"
என்பது அப்பர் தேவாரத்தில் திருவலம்புரப் பதிகத்தில் வரும் ஓர் அடியாகும். இந்த அழகு நடையினை அப்படியே சிற்பமாகச் செய்து விட்டான் ஒரு கலைஞன். அவன் கற்பனைக்குக் கைகொடுத்தது அப்பரின் தேவாரப் பாடலாகும். நடனம் ஆடியபடி அமைந்த இந்தச் சிற்பம் தமிழகக் கலைச்செல்வங்களில் குறிப்பிடத்தக்கதாகும்.
பாளையக்கோட்டை அழகிய மன்னார் இராசகோபாலசாமி கோயிலில் அடுத்தடுத்த தூண்களில் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இவை கி.பி. பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்தவை. ஒன்றில் அசோகவனத்தில் சிதை ஒரு மரத்தடியில் சிறிய மேடையொன்றில் அமர்ந்திருக்கிறாள். எதிரில் அனுமன் கைகட்டி வாய்புதைத்து
 நிற்கிறான்.
 பணிவுக்கு அடையாளமாக அவன் வால் கீழ்நோக்கித் தொங்குகிறது. அடுத்த தூணில் ஓரிடத்தில் சிதை, இராமன், இலக்குவன் அமர்ந்திருக்கின்றனர். குகன் ஓடத்தைச் செலுத்துகிறான். சிற்பத்துக்குக் கீழே "இத்தூணின் நாமம் ஸ்ரீஹநுமன்" என்று ஒரு கல்வெட்டு அனுமன் இருக்கிற தூணை விட்டுவிட்டு, குகன் இருக்கிற தூணில் அனுமன் பெயர் ஏன் இடம் பெற்றது? இந்த இடத்திலும் இலக்கியம்தான் சிற்பத்தைப் புரிந்து கொள்ள நமக்குத் துணை செய்கிறது.
பெரியாழ்வார் திருமொழியில் "செறிந்த கருங்குழல் மடவாய்" என்று தொடங்கும் பதிகம். அசோகவனத்தில் அனுமன் தான் இராமனின் தூதன் என்பதைச் சிதைக்கு மெய்ப்பிக்கப் பலவகை அடையாளங்களைச் சொல்கிறான். ஏனென்றால் சிதைக்கு அனுமனை அதுவரை யாரென்று தெரியாது. இதுதான் முதல் தூணில் உள்ள சிற்பத்தின் பொருள். அவன் கூறும் அடையாளங்களில் ஒன்று, குகனோடு இராமன் கொண்ட தோழமை உணர்வாகும். மற்றையோர் கூற அனுமன் இந்தச் சிறிய நிகழ்ச்சியினை அறிந்து கொண்டவன். "நீ என் தோழன்" என்று கூறிக் குகனை இராமன் ஏற்றுக்கொண்ட இந்த நிகழ்ச்சியினை,
"கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில்
சிரணிந்த தோழமை கொண்டதும்ஓர் அடையாளம்"
எனக்கூறி குகனை அனுமன் நினைவுபடுத்துகிறான். இதனால்தான் (முதல் தூணில் அனுமனைக் காட்டி, அடுத்த தூணில் குகனைக் காட்டி, குகனைக் காட்டும் சிற்பத் தூணுக்கு "அனுமன்" என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டுக் கவிதை பத்தாம் நூற்றாண்டில் சிற்பமாகி 
இருக்கிறது.
கி.பி. ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளில் இராமகதைச் சிற்பங்கள் (குறிப்பாக இவ்விரண்டு காட்சிகளும்) தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. இராமகதையின் கங்கை காண்படலம், குகப்படலம், சூளாமணிப்படலம் ஆகியவற்றுக்கான உணர்வினைக் கம்பன் இந்தச் சிற்பங்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டிருக்கவேண்டும். இலக்கியக் கலை சிற்பத்தை வளர்க்க, சிற்பக்கலை மீண்டும் இலக்கியத்தை வளர்த்திருக்கிறது. பெருங் கவிஞர்களுக்கும் கவிதைக்கான உந்து சக்தியைத் 
தந்திருக்கின்றது.
பெருங்கவிஞர் சேக்கிழாரின் பெரிய புராணத்துக்கு அவர் காலத்திய கல்வெட்டுகளும் சிற்பங்களும் பேருதவி செய்தன. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தாராசுரம் கோயிலின் அடித்தளத்தில் அறுபத்து மூன்று நாயன்மார் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. சேக்கிழார் காலத்துக்குச் சற்று முந்திய காலத்துச் சிற்பங்கள் இவை. இவற்றின் கீழே சிறிய
 கல்வெட்டுக்கள்
 மெய்ப்பொருள் நாயனாரின் சிற்பத்துக்குக் கீழே உள்ள தொடர் "தத்தாநமர் என்ற மிலாடுடையார்" என்பதாகும். மெய்ப் பொருள் நாயனாரின் ஒற்றைச் சேவகரின் பெயரும், அவர் கடைசியாகப் பேசிய செய்தியும் சேக்கிழாருக்கு இச்சிற்பத்திலிருந்தும் கல்வெட்டிலிருந்துமே கிடைத்திருக்கின்றன. சேக்கிழார் இந்தப் பெயரினையும் செய்தியினையும் "தத்தா நமரே காண் என்று தடுத்து வீழ்ந்தார்" என்று பெரியபுராணத்தில் அப்படியே 
எடுத்தாண்டிருக்கிறார்.
காலந்தோறும் இப்படிப் பல எடுத்துக்காட்டுக்கள் உண்டு. இவற்றிலிருந்து நாம் பெறுகின்ற செய்திதான் என்ன? கோயிற் சிற்பங்கள் ஒரு தனிமனிதனின் கற்பனையில் மட்டும் பிறந்தவை அல்ல. அவற்றுக்கு வரலாற்றுப் பிற்புலமும் இலக்கியப் பிற்புலமும் உண்டு. சிற்பிகளும், இலக்கியவாதிகளும் ஒருவர் மற்றவரின் கலையின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் மதித்திருக்கிறார்கள்.
நுண்கலைகள் எனப்படும் கலைகள் அனைத்துமே தம்மில் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஒன்றையொன்று வளர்ப்பன. தாங்கள் பிறந்த காலத்தின் கண்ணாடியாகத் திகழ்வன. அவை அனைத்துமே தனிமனிதர் வழியாக வெளிப்பட்டாலும் சமூகத்தின் படைப்புகளே. இலக்கியத்தையும் சிற்பத்தையும் ஒருங்கே நோக்கும் போது நமக்குக் கிடைக்கின்ற செய்தி இதுதான்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.