யாழ் தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய முத்தேர் பவனி

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா 05.09.2017. சிறப்பாக 
இடம்பெற்றுள்ளது.
  முருகப்பெருமானுக்கு காலை முதல் விசேட அபிஷேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், சந்நிதி வேற்பெருமான், ஆறுமுக சுவாமி ஆகிய முத்தெய்வங்களும் உள்வீதி 
வலம் வந்தனர்.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணியளவில் முத்தெய்வங்களும் முத்தேர்களில் எழுந்தருளினர். சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு விசேட தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க முற்பகல் 10.30 மணியளவில் முத்தேர்
 பவனி ஆரம்பமாகியது.
விநாயகப்பெருமானின் தேர் முன்னே செல்ல சந்நிதி வேற்பெருமானின் பிரதான தேர் வீதி வலம் இடம்பெற்றது. பிரதான தேரின் வடத்தை பக்திப் பரவசத்துடன் நூற்றுக் கணக்கான அடியவர்கள் 
தொட்டுஇழுத்தனர் 
முற்பகல்11.30 மணியளவில் முத்தேர்களும் இருப்பிடத்தைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து 
வழிபட்டனர்.
நூற்றுக் கணக்காண ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை செய்தும், பறவைக்காவடிகள், செதில் காவடிகள் என்பன எடுத்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், பாற்காவடிகள் எடுத்தும் நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு இரவு வரை குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆலயத்தை நோக்கி பெருமளவு காவடிகள் வருகை தந்த வண்ணமுள்ளன.
தேர்த் திருவிழாவில் யாழ். குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த இலட்சக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.
தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட அடியவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் ஆலயச் சூழலிலும், ஆலயத்திற்குச் செல்லும் குடாநாட்டு வீதிகளின் பல்வேறிடங்களிலும் தாக சாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் ஆலயச் சூழலிலுள்ள சந்நிதியான் ஆச்சிரமம் உட்பட பல்வேறு மடங்களிலும் அன்னதானமும் பரிமாறப்பட்டன.
இதேவேளை, 06.09.2017. காலை 08 மணிக்குத் தீர்த்தத் திருவிழா சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.