தைத் பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும் 
தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில் 
மங்குக தீமைகள் பொங்குக வளமைகள் 
விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள் 
நீங்குக கயமை நிலவுக வாய்மை 
நல்குக வெற்றி நலிக தீதென்றும் 
நிறைக நிம்மதி நீடுக ஆயுள் 
நிலமே செழித்து நீர்வளம் பெருகுக 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ 
பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்! 
சூரியப் பொங்கல் 
தை மாதத்தின் முதல் நாளை சூரியக் கடவுளை அதாவது சூரிய பகவானை போற்றி வணங்கி வழிபடும் பொங்கல் திரு நாளாக கொண்டாடுகின்றனர். அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து புது மெருகோடு அவரவர் வேலைகளில் மூழ்கிவிடுவார்கள்.
 பெண்கள் தான் அந்த விடியலின் விளிம்பில் என்ன சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்று தோன்றும். வீட்டு வாசற்படிகளில், முற்றத்தில் கோலமிட்டு ( நான் 126 புள்ளி வச்சு இல்ல கோலம் போட்டேன் போன்ற பறைசாற்றல்களும் கூட இருக்கும். ) தேடிப்பிடித்து பசுஞ்சாணம் கொண்டுவந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கோலங்களின் மேனியில் படாது சமர்த்தாக வைப்பார்கள். 
பின்னே இதெல்லாம் ஏனோதானோவென செய்யமுடியாது இல்லையா ? வீட்டின் பின்புறம் அல்லது தோட்டத்தில் படர்ந்திருக்கிற பூசனிக்கொடியில் கதிரவனை வரவேற்க இதழ் விரிக்கலாமா என தயக்கத்திலிருக்கும் பூசணிப் பூக்களை, அதன் பட்டுப் பூவுடலில் முத்து முத்தாக 
நிற்கும் பளிங்குப் பனித்துளிகள் சிதறிவிடாமல், அவைகளுக்கு வலி தெரியாமல் மென்மையாகப் பறித்துக் கொண்டு வந்து சாண உருண்டைகளில் செருகி, சற்று எட்ட நின்று பெண்கள் அழகு பார்ப்பதும் கூட அந்தப் பொழுது புலராத வேளையில்தான். 
பச்சரிசி மாவைக் கரைத்து, காவிக் கட்டியை கரைத்து வண்ணப் பொடிகளை சிறுசிறு வட்டில்களில் எடுத்துக் கொண்டு, முழங்கால் வரை பாவாடையை தூக்கிச் செருகிக் கொண்டு முன் அறை, சமையல் அறை, நடுக்கூடம் உள் அறை, மாடிப்படி, மொட்டை மாடி, முற்றம் 
என வீட்டில் ஒரு இடம் பாக்கியில்லாமல் உட்கார்ந்து, எழுந்து தன் கைத் திறமைகளை காட்டும் விடலைப் பெண்களுக்குத் தான் 
என்ன குதூகலம்! 
மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக்கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாக பொழிகிறான். அதே போல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காக கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் தகர்க்க இயலாத நம்பிக்கையாகும். 
''பரியே பொருள் யாவிற்கும் முதலே" என்கிற முறுக்குமீசைக் கவிஞன் பாரதியின் கதிரவன் வணக்கப் பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனை முதன்மைப் படுத்தி வணங்குதல் கடைப் பிடிக்கப்படுகிறது.
 எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்கு துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ஆண்டில் நல்ல விளைச்சளைத் தரவும் வேண்டி
 பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள். 
downloadசூரிய உதயத்திற்கு முன்பாக குளித்து புத்தாடை அணிந்து முதல் நாளே குறித்து வைத்தபடி நல்ல நேரத்தில்பொங்கல் வைக்க முனைவார்கள். வீட்டு முற்றத்தில் கல் அடுப்பு கூட்டி ( கிராமங்களில் தான் பெரும்பாலும் அப்படி… நகர்ப்புறங்களில் எல்லாம் வீட்டுக்குள் தான்.) மாக்கோலமிட்ட புதுப்பானைக் கழுத்தில் இஞ்சி, மஞ்சள் செடி மாலையாக வளையமிட்டிருக்கும். பொங்கல் பானையை மையமாக வைத்து பெருக்கல் குறி போல தோகையுடன் கூடிய கரும்புகளை 
நிறுத்தி இருப்பார்கள். அறுவடையில் வந்த புதுநெல் அரிசியிட்டு, கரும்புச் சாறில் செய்தவெல்லம் இட்டு, பாலூற்றி, பசு நெய் விட்டு பொங்கல் வைப்பார்கள். உலை கொதித்து, பொங்கலின் மணம் நாசியில் நுழைய சுற்றி இருப்பவர்களின் கண்கள் மொத்தமும் பொங்கல் பானையின் மீதே இருக்க
… ஆயிற்று பொங்கல் பொங்கி வழிய " பொங்கலோ பொங்கல் " என்ற உற்சாக குரல்கள் பீறிட பொங்கல் தயார். குடும்பமே கூடிநிற்க, தலை வாழை இலை விரித்து, தேங்காய் உடைத்து, பூ, பழம் வைத்து,
 கற்பூரம் கொளுத்தி, கதிரவனுக்கு பூஜை நைவேத்தியம் செய்து, பொங்கலையும் படையல்செய்து வணங்குவார்கள்
. எண்சாண் உடம்பும் பூமிதனியில்பட விழுந்து பரிதியின் சீர் பெறுவர். அதன் பின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பொங்கல் வழங்கி 
உண்டு மகிழ்வார்கள். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.