யாழ். மானிப்பாயில் 15 பவுண் நகையுடன், 150,000 ரூபா பணமும் கொள்ளை

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணம் என்பன இன்று செவ்வாய் அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் - மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக தனியார் வைத்தியசாலைக்குப் பின்பக்கமுள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான பெற்றோரைப் பார்ப்பதற்கு இவர்களது மகன் சில தினங்களுக்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து வந்துள்ள நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தகப்பனார் வெளியில் சென்ற சமயம் வீட்டு வாழைத் தோட்டத்துக்குள் மறைந்து நின்ற இருவர் திடீரென வந்து அவரின் கைகளைப் பின்னால் இறுக்கிப் பிடித்தவாறு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அவரது மகனின் கடவுச்சீட்டை அச்சுறுத்தி வாங்கியதுடன், சத்தமிட்டால் கடவுச்சீட்டைக் கிழித்து எறிந்து விடுவோம் என மிரட்டி 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையிட்டுச் சென்ற இருவரும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உரையாடியதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களை இனங்காண்பதற்கு பொலிஸ் மோப்ப நாய்களைப் பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்ததுடன், இந்த மோப்பநாய்கள் மதவாச்சிப் பகுதியிலிருந்தே கொண்டுவரப்படவுள்ளதால் தற்போது இரண்டு பொலிஸ் காவலாளிகளை பாதுகாப்பிற்காக வீட்டிற்கு முன்னால் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.