காய்கறி விற்கும் தாய்வான் பெண்ணுக்கு நோபல்பரிசுக்கு நிகரான ராமன் மகசேசே விருது

_
30.07.2012.தாய்வானில் காய்கறி விற்கும் பெண்ணுக்கு நோபல் பரிசுக்கு நிகராகக் கருதப்படும் ராமன் மகசேசே விருது வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்சின் மணிலா நகரில் இயங்கி வரும் ராமன் மகசேசே விருது அறக்கட்டளை, சமூக சேவைக்கான விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

இவ்வாண்டு கம்போடியா, பங்களாதேஷ், தாய்வான், இந்தியா,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக காய்கறி விற்கும் இப்பெண்ணும் தெரிவாகியுள்ளார்.

இது குறித்து மகசேசே அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தாய்வானைச் சேர்ந்த சென் ச்சூ-சூ காய்கறி விற்பனை செய்து வருகிறார். ஆறாம் தரம் வரை மட்டுமே படித்துள்ள இவர் வீடின்றி வீதியோரம் உறங்குகிறார்.ஆனால், தினந்தோறும் காய்கறி விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் பல சிறார்களின் அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி செய்கிறார்.

இதன் மூலம் தாய்வான் சிறார்களின் எதிர்காலத்தையே மாற்றியமைத்து வருகிறார். ஆயிரக்கணக்கான சிறார்கள், சென்னுடைய நிதியுதவியில் படித்துள்ளனர். இதுவரை 333,000 டொலருக்கு சிறார்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புறுபவர்களுக்கும் பாடசாலை நூலகங்கள் கட்டவும் இவர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார். இவரது சிறந்த சமூக சேவையைப் பாராட்டி மகசேசே விருது வழங்கப்படுகிறது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சென் தெரிவிக்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார்.

பிலிப்பைன்சின் முன்னாள் அதிபரின் பெயரால் ராமன் மகசேசே விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.