காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு இட்லி நிவேதனம் படைத்து பக்தர்கள் வழிபாடு

ஜூலை 04,2012 காஞ்சிபுரம்: வட்டார அளவில் வசிக்கும் மக்களின் பழக்க வழக்கத்திற்கேற்ப, கோவில்களில் வழிபாடு, நிவேதன முறை வேறுபடுகிறது. பெருமாள் கோவிலே என்றாலும், நிவேதனம் கோவிலுக்கு கோவில் மாறுபடுகிறது. ஸ்ரீரங்கத்தில், பெருமாளுக்கு தோசை நிவேதனம் செய்யப்படுகிறது. உப்பிலியப்பன் கோவிலில், உப்பில்லா பொருட்களால் நிவேதனம் நடக்கிறது. இந்த வகையில், வரும் 5 ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ள, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், இட்லி நிவேதனம் நடக்கிறது. சுக்கும், உளுந்தும்: மிளகு, சுக்கு, உளுந்து, போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படும், இந்த இட்லிக்கு தனிச் சுவை உண்டு. தினமும் கோவில் மடப்பள்ளியில் தயாராகும் இரண்டு இட்லிகளில், ஒன்று பெருமாளுக்கும், மற்றொன்று தாயாருக்கும் நிவேதனம் செய்யப்படுகிறது. நிவேதனமான இரண்டு இட்லிகளில், ஒன்று பக்தர்களுக்கும், மற்றொன்று உபயதாரர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நிவேதனம்: வரதராஜப் பெருமாள் கோவிலில், தினமும் காலை 6.30 மணிக்கு, பெருமாளுக்கு கோவில் இட்லி, வெறும் சாதம், வெண்பொங்கல், போன்றவை நிவேதனம் செய்யப்படுகிறது. காலை 10 மணிக்கு தயிர் சாதம், மாலை 6 மணிக்கு தோசை, வடை, சுண்டல், சர்க்கரை பொங்கல். இரவு 7 மணிக்கு, தயிர் சாதம் மற்றும் வெறும் சாதம். இரவு 8 மணிக்கு சர்க்கரை பொங்கல். மாலை தயாரிக்கப்படும் சர்க்கரை பொங்கலில், முழு அளவில் வெல்லம் சேர்க்கப்படுகிறது. இரவு தயாராகும் சர்க்கரை பொங்கலில், பாதி அளவு மட்டுமே வெல்லம் சேர்க்கின்றனர். இரவு தூங்க செல்லும்போது, அதிக வெல்லம் சேர்க்கக் கூடாது என்பதற்காக இப்படி செய்யப்படுகிறது. வழக்கமான நிவேதனம் தவிர, புளியோதரை, கேசரி, வெண்பொங்கல், மைசூர்பாகு போன்றவையும் நிவேதனத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மிளகாய்க்கு தடை: வரதராஜ பெருமாளுக்கு, தயார் செய்யப்படும் நிவேதனத்தில், மிளகாய் சேர்ப்பதில்லை. அதற்கு பதிலாக, மிளகு சேர்க்கின்றனர். இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள், அக்னியிலிருந்து தோன்றியதால், அதிக சூடை தரும் மிளகாயை பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், துவரம் பருப்பு, வெந்தயம், மல்லி போன்றவையும் நிவேதன தயாரிப்பில் சேர்க்கப்படுவதில்லை. ஐந்து கால பூஜை கோவிலில், பாஞ்சராத்ர முறைப்படி தினமும் ஐந்து கால பூஜை நடத்தப்படுகிறது. காலை, 6 மணி, நடை திறப்பு. காலை, 6.30 மணி, ஸ்ரீரங்கராஜ வீதியில், தேசிகர் சன்னிதி, கிணறு, செவிலிமேடு சாலைகிணறு ஆகியவற்றில் இருந்து எடுத்து வரப்படும் தீர்த்தத்தை கொண்டு அபிஷேகம். காலை, 10 மணி, அலங்காரம், நிவேதனம். மாலை, 6 மணி, புஷ்பம் சாத்தி, வடை, சுண்டல், நிவேதனம். இரவு, 7 மணி, திருவாராதனம். இரவு, 8 மணி, திருப்பிரசாதம்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.