கருவில் இருக்கும் போது பெண் சிசுவை கலைத்தால் மரண தண்டனை: அமலுக்கு வரும் அதிரடி சட்டம்

புதன்கிழமை, 11 யூலை 2012கருவில் இருக்கும் பெண் சிசுவை சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யும் டொக்டர்களுக்கும் இதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிரடி சட்டத்தை மகாராஷ்டிரா அரசு அமலுக்கு கொண்டு வர உள்ளது.
இந்தியாவில் தாயின் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிய தடை உள்ளது. இருப்பினும் பல தனியார் வைத்தியசாலைகளில் சட்ட விரோதமாக கண்டறியப்பட்டு, கரு கலைக்கப்படுகிறது.
தற்போதுள்ள சட்டத்தின்படி, பாலினத்தை கண்டறியும் டொக்டர்கள், ரேடியோலாஜிஸ்ட் மற்றும் சம்பந்தப்பட்ட கணவன், உறவினர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. ஆனால், இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
சட்டவிரோத கரு கலைப்பால் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் கணிசமாக குறைந்ததால் உஷாரான மகாராஷ்டிர அரசு, பாலினத்தை கண்டறியும் சோனோகிராபி மையங்கள், கரு கலைப்பு மையங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.
அதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் அதிரடியான புதிய சட்டம் இயற்ற தீர்மானித்துள்ளது.
சட்ட விரோதமாக கரு கலைப்பு செய்யும் டொக்டர்கள், கருவை கலைக்க பெண்ணை நிர்ப்பந்தப்படுத்தும் கணவன் அல்லது உறவினர் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை அரசு தயாரித்துள்ளது.
கரு கலைப்பை கொலை குற்றமாக மாற்றினால்தான் இது சாத்தியம். எனவே, மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டுள்ளது மகாராஷ்டிரா அரசு.
கரு கலைப்பு தொடர்பாக சட்ட பேரவையில் எதிர்க்கட்சிகள் நேற்று கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளிக்கும்போது நல்வாழ்வு துறை அமைச்சர் சுரேஷ் ஷெட்டி இந்த தகவலை தெரிவித்தார்.
இதன்படி, இ.பி.கோ 302வது பிரிவின் கீழ் (கொலை குற்றம்) வழக்கு பதிவு செய்வது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றார்.
மகாராஷ்டிராவில் உள்ள 8,331 சோனோகிராபி மையங்களில் 291 மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களை அடிக்கடி சோதனை செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பொலிஸ், நல்வாழ்வு, வருவாய் துறைகளின் அதிகாரிகள் அடங்கிய 584 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் 4,117 கரு கலைப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் சட்ட விரோதமாக செயற்பட்ட 341 மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பீட் மாவட்டத்தில், ‘முண்டே ஹாஸ்பிடல்‘ என்ற பெயரில் வைத்தியசாலை நடத்தி வந்த டொக்டர் சுதாம் முண்டே, அவருடைய மனைவி டொக்டர் சரஸ்வதி ஆகியோர் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 20 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கு அதிகமான கரு கலைப்பை செய்துள்ளனர். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்களும் இவர்களை தேடிவந்து கருவை கலைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.