புழக்கத்தில் இருந்து மறைந்து போன தமிழரின் பாரம்பரிய பாத்திரங்களும் பாவனைப் பொருட்களும்
பண்டைக் காலத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய வழக்கத்தில் இருந்த பயன்பாட்டுப் பொருட்கள் பலவற்றை பொதுவாக எடுத்து நோக்கும் போது,தேவைக்கு ஏற்றவகையில்அவை அருகிப்போயின. ஆரம்பத்தில் மனித நாகரீக வளர்ச்சியின் படிக்கல்லாக, மட்பாண்டங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும் காலக்கிரமத்தில் பாவனைப் பிரயோகத்திற்கும் மற்றும் தேவைக்கும் வசதிக்கும் அமைய, பலதரப்பட்ட உலோகங்களாலான பாவனைப் பொருட்கள், புழக்கத்தில் வந்தன.
இத்தகைய பாத்திரங்கள் தேவைக்கமைய பித்தளை, செப்பு என்னும் உலோகப்பொருட்களுக்கு ஈய முலாம் பூசப்பட்ட நிலையில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டன. பொதுவாக பல வடிவமைப்புக்களைக் கொண்ட பித்தளை பாத்திரங்களுக்கு உள்ளே சீரிய வகையில் ஈயம் என்னும் பாதுகாப்பு முலாம் பூசப்பட்ட சில பாத்திரங்கள் இன்றும் தேவைக்கமைய அதே வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆயினும் இன்று சில வழக்கொழிந்து போயின. உதாரணமாக தண்ணீர் சுட வைக்கும் கிடாரம், நெல் வேகவைக்கும் கிடாரம், பொங்கலுக்குப் பயன்படுத்தப்படும் சருவம், பித்தளைச் செம்பு, பித்தளைக் குடம், பித்தளை மூக்குப்பேணி, பித்தளை வெற்றிலைத் தட்டம், பித்தளைத் தாம்பாளங்கள், பித்தளைச் சருவச்சட்டிகள் என்பன இன்றைய பயன்பாட்டில் இல்லாது போயின. எது எவ்வாறாயினும் ஈயம் பூசப்பட்ட செப்புச் சருவம் போன்றன சூரிய பொங்கல் போன்ற சம்பிரதாய தேவைகளுக்கு இன்றும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆயினும் அரிசி அரிக்கும் அரிக்கன் சட்டி போன்ற சமையல் பாத்திரங்கள் இன்று அறவே வழக்கத்தில் இல்லாது போயின.
அவ்வாறே பொதுவாக சமைத்த கறி தாங்கிய பாத்திரங்களாக தூக்குச் சட்டி, பித்தளைப் பாத்திரங்கள் என்பன பயன்படுத்தப்பட்டன. தூக்குச் சட்டியானது மொத்தம் நான்கு அல்லது ஐந்து கிண்ணங்களை ஒருங்கே கொண்டு விளங்கியது. ஆயினும் காலக்கிரமத்தில் தூக்குச் சட்டியானது அலுமினியம் மற்றும் எவர் சில்வரால் செய்யப்பட்டதாக அமையப் பெற்றுள்ளது. இன்று கறிகளைச் சூடாக வைத்து ‘சூடு பாதுகாக்கும்’ பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய பாத்திரங்களின் வருகையால் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களின் பாவனை படிப்படியாக வழக்கொழிந்து போயின. பித்தளை பாத்திரங்களைச் சுத்தம் செய்ய அல்லது துலக்கச் சாம்பல், மண், பழப்புளி, காலக்கிரமத்தில் எலுமிச்சம் புளி போன்றவை பயன்படுத்தப்பட்டிருந்தன.
இவை தவிர வெற்றிலைத் தட்டம், சுண்ணாம்புக் கிண்ணம், பித்தளை தட்டங்கள், பாக்கு வெட்டி, பாக்கு இடிக்கும் உரல், குத்துவிளக்கு, கைவிளக்கு போன்ற பொதுவான பாவனைப் பொருட்கள் கூட இன்று வழக்கொழிந்து போயின. அது மட்டுமன்றி பலவகையான பித்தளை மற்றும் செப்புத் தட்டங்கள் என்பன பொதுவாக புழக்கத்தில் இருந்து மறைந்து விட்டன. குத்து விளக்குகள், பெரிய வகைத் தட்டங்களான தாம்பாளங்கள் பல வகை அரிய அலங்காரங்கள் செதுக்கப்பட்ட தட்டங்கள் என்பன முன்பு நாளாந்தப் புழக்கத்தில் இருந்தன. ஆயினும் இன்று இத்தகைய வீட்டுப் பாவனைப் பொருட்கள் யாவும் பெருமளவு வழக்கொழிந்து போயின. எதுஎவ்வாறாயினும் பித்தளைப் பாத்திரங்களின் பயன்பாடு அருகி வரக் காரணம் யாது என நாம் ஊகிக்குமிடத்து சில சாதாரண முடிவுகளுக்கு வரக் கூடியதாகவுள்ளது.
பித்தளைப் பாத்திரங்களாவன பாரம் கூடியவையாகவும், சுத்தம் செய்ய கடினமானவையாகவும் விளங்குகின்றன. அத்துடன் அலுமினியம் என்னும் மென் உலோகப் பாவனையானது இலகுவில் சுத்தம் செய்யக் கூடியதாகவும் பாரம் குறைந்தவையாகவும் தேவைக்கமைய பயன்படுத்தக் கூடியவையாகவும் பல அளவுகளில், பல வடிவங்களில் வியாபாரச் சந்தையில் மலிவான விலைகளில் கொள்வனவு செய்யகூடியதாக வந்தமையும் பித்தளையின் பயன்பாட்டை அருகிப்போகச் செய்தது எனலாம்.
மேலும் பித்தளையாலான இட்லிப் பானை, இருந்தபடி வேலை செய்யப் கூடிய சமையல் அறைப் பலகை, அரிவாள், இருந்தபடி வேலை செய்ய கூடிய தேங்காய் திருவலை போன்றவற்றின் பயன்பாடு கணிசமான அளவு வழக்கொழிந்து விட்டதுடன் நகரப்புற நவீன இயந்திரவியல் வாழ்க்கை முறையில் இருந்தும் நழுவி விட்டன எனலாம். தேங்காய்த் திருவலைக்குப் பதில் மின்னியல் திருவலை, மேசையில் பூட்டிப் பயன்படுத்தப்படும் திருவலை என்பன காலக்கிரமத்தில் வழக்கத்தில் வந்தன. இவை எல்லாவற்றிற்கும் மேல் பொதி செய்யப்பட்ட தேங்காய்ப் பால் அல்லது உலர்ந்ததேங்காய்ப் பால் மா என்பன இன்று பெரிதும் நகர்ப்புறங்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
அரிவாளுக்குப் பதில் இன்று பல வகைப்பட்ட கத்திகள் பொதுவாக நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன. முன்பு பானையில் குடிநீர் தேவைக்கு நீரைச் சுடவைத்து குவளைகளில் சேமித்து சேகரித்துவைப்பது வழமையாகும். ஆயினும் இன்று மின்னியல் சுத்திகரிப்பு உபகரணங்களே இத் தேவைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் முற்காலத்தில் சாணத்தால் மெழுகி சூட்டு அடுப்புக்கள் கட்டப்பட்டு, புகை வெளியேறப் புகைக்கூடு கட்டப்பட்டதாக அமைந்திருந்தது. இச்சூட்டு அடுப்பானது விறகை எரிபொருளாகக் ஊடகமாகக் கொண்டு விளங்கியது. காலக்கிரமத்தில் அதன் பாவனைப் பயன்பாடானது நடைமுறைக் கஷ்டங்களால் குறிப்பாக நகர்ப் புறப் பாவனையில் கணிசமான அளவு குறைவடைந்து இதனை ஈடுசெய்யும் வகையில் மண்ணெண்ணெய் அடுப்புகள் பாவனைக்கு வந்தபோதிலும் இன்று நவீன முறையில் சமையல் அடுப்புகள் வந்துள்ளன.
இவை தவிர பித்தளையிலான கலையம்சம் செறிந்த சாம்பிராணித் தட்டங்கள் என்பன முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தன. எனவே காலத்தின் தேவைக்கு அமைய நாளாந்தப் பாத்திரப் புழக்கத்திலும் மாற்றம் நிகழ்ந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
Tags :
வாழ்வியல்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen