மண்டைதீவுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடிமருந்தைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குருநகர் கடற்றொழிலாளர்கள் இருவருக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் அபராதம் விதித்ததுடன் அவர்கள் எச்சரிக்கப்பட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் ந. கணேசமூர்த்தி தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி யாழ்.மண்டைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெடிமருந்தைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குருநகர் கடற்றொழிலாளர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அன்றே இருவரும் ஊர்காவற்றுறை நீதவான் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும் நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இவர்களது வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது அவர்களை விசாரணை செய்த நீதவான் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையைப் பாவித்தமையினால் இவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் இனிமேலும் இவ்வாறு தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையினைப் பயன்படுத்தினால் தண்டனை இரு மடங்காக அதிகரிக்கப்படும் எனவும் நீதவான் எச்சரித்து விடுதலை செய்துள்ளார்.