1008 தேங்காய்கள் உடைத்து வவுனியாவில்

13.09.2012.By.Rajah.
1008 தேங்காய்கள் உடைத்து வவுனியாவில் நேற்றுப் பிரார்த்தனை; கடவுளே! எமது உறவுகளை மீட்டுத் தா

காணாமல்போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் நேற்றுக் காலை வவுனியா குருமன்காடு காளிகோயிலில் கண்ணீர் மல்கியவாறு தேங்காய்களை உடைத்துப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனை நிகழ்வில் காணாமற் போனோரின் உறவுகள், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச கைதிகள் தினத்தை முன்னிட்டு காணாமற் போனோரை மீட்டுத்தரக் கோரி வவுனியாவில் 1008 தேங்காய்களை உடைக்கும் போராட்டமும் பிரார்த்தனையும்
நேற்றுக் காலை நடைபெற்றது.

கடந்த பல தசாப்தங்களாகவும், இறுதி யுத்த்தின் போதும் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாகவும் பல ஆயிரக்கணக்கானோரின் விடுதலையைக் கோரியும் அவர்கள் தொடர்பான தகவல் கோரியும் கடந்த பல வருடங்களாக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆயினும் இன்னமும் அவர்களுக்கு இலங்கை அரசினால் எந்தத் தீர்வும் அளிக்கப்படவில்லை. அண்மைக்காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டு ஊனமாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர். இந்த நிலையில் ஜனநாயக வழியிலான போராட்டங்களும் தீவிரம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க நீதி வேண்டி ஆண்டவன் சந்நிதியில் 1008 தேங்காய்களை உடைக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்தப் பிரார்த்தனை நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், விநோ நோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளோட் தலைவர் த.சித்தார்த்தன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்கரா, சிறிதுங்க ஜெயசூரிய ஆகியோர் உட்பட அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.