வெளியாகியது ஐபோன் 5: அரைத்த மாவையே அரைக்கிறதா அப்பிள்?

BY.Rajah.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அப்பிள் நிறுவனமானது தனது ஐ போன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐ போன் 5 இனை நேற்று அறிமுகப்படுத்தியது.


சென்பிறான்ச்சில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வை நாம் உங்களுக்கு எமது இணையத்தளத்தினூடாக நேரடியாக வழங்கியிருந்தோம்.


அப்பிளின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிம் குக் இதனை அறிமுகப்படுத்தியதுடன், உலகளாவிய சந்தைப்படுத்தடுத்தலுக்கான சிரேஷ்ட உப தலைவரான பில் ஸ்ஸிலர் ஐ போன் 5 தொடர்பின் வசதிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.


கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ போன் 4 எஸ் வெளியாகியது. அதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு ஜூன் வெளியாகிய ஐ போன் 4 இன் தோற்றத்தினை ஒத்திருந்ததுடன் எதிர்பார்த்தளவு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியிருக்கவில்லை.


எனவே ஐ போன் 5 இன் மேல் அப்பிளின் தீவிர விசிறிகள் ( Apple Fan boys) மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். பல புதிய வசதிகளையும் தோற்றத்தினையும் அப்பிள் ஐ போன் கொண்டுவருமென அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.


அவர்களின் எதிர்பார்ப்பினை அப்பிள் நிறைவேற்றியதாக? ஏற்கனவே ஐ போன் 4எஸ் மற்றும் ஐ போன்4 இனை உபயோகிப்பவர்களுக்கு ஐ போன் 5 சிறந்த மாற்றுத்தெரிவாக அமையுமா எனப் பார்ப்போம்.



ஐ போன் 5







தோற்றம்


ஐ போன் 5 ஆனது கண்ணாடி மற்றும் அலுமினியத்தாலான வெளிப்புறத்தினைக் கொண்டுள்ளதுடன் இதன் பருமன் 123.8 x 58.6 x 7.6 mm.


இதுவரை வெளியாகிய ஐ போன்களில் மிக மெல்லியதாக இது கருதப்படுகின்றது. இது 7.6 மில்லி மீற்றர்கள் மட்டுமே தடிப்பானது.


மேலும் இதன் நிறை வெறும் 112 கிராம்கள் மட்டுமேயாகும்.


முன்னைய வெளியீடான ஐ போன் 4 எஸ் இன் பருமன் 115.2 x 58.6 x 9.3 mm என்பதுடன் ஐ போன் 3 ஜிஎஸ் இன் பருமன் 115.5 x 62.1 x 12.3 mm ஆகும்.


ஐ போன் 5 ஆனது கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கவுள்ளன.


ஸ்மார்ட் போன்களின் தோற்றத்தில் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றின் திரையாகும். ஐ போன் 5 ஆனது 4 அங்குல ரெட்டினா திரையைக்கொண்டுள்ளது.


இதன் ரெசலுயுஷன் 1136x640 பிக்ஸல்ஸ் என்பதுடன் 326 (Pixels per inch) படவணு அடர்த்தியைக் கொண்டது.



தொழில்நுட்ப அம்சங்கள்




புரசசர் (Processor)


ஐபோன் 5 ஆனது ஐ போன் 4எஸ் கொண்டிருந்த A5 ஐ புரசசரை விட இருமடங்கு வேகமாக இயங்கக்கூடிய A6 புரசசரைக் கொண்டுள்ளதாக அப்பிள் தெரிவிக்கின்றது.


இது மேம்பட்ட கிராபிக்ஸ் செயற்பாடுகளுக்கும் ஏற்றதென அப்பிள் தெரிவிக்கின்றது.


எனினும் புரசசர்களின் கோர்களின் எண்ணிக்கை மற்றும் வேகம் தொடர்பில் அப்பிள் எதனையும் தெரிவிக்கவில்லை.



கெமரா (Camera)



ஐ போன் 4எஸ் கொண்டிந்ததனைப் போல ஐ போன் 5 உம் 8 மெகாபிக்ஸல் ( 3264x2448 pixels) கெமராவினையே கொண்டுள்ளது.


ஐ போன் 5 சென்சரானது 4எஸ்ஸினை விட சற்று சிறியதாகும்.


8 மெகாபிக்ஸல் கெமாராவினைக் கொண்டுள்ள போதிலும் 28 மெகாபிக்ஸலில் பரந்த தோற்ற (பெனோரமிக்) ஷொட்களை இதன்மூலமாக படம்பிடிக்க முடியும்.




மேலும் மேம்படுத்தப்பட்ட 1.2 மெகா பிக்ஸல் புரண்ட் கெமராவினையும் ஐ போன் 5 கொண்டுள்ளது.






இவற்றைத்தவிர 4ஜி எல்.டி.இ. வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஐபோன் 5 ஆனது தயாரிக்கப்பட்டுள்ளது.



மேலும் ஐஓஎஸ் 6 இயங்குதளத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதில் கூகுள் மெப்புக்குப் பதிலாக அப்பிளின் சொந்த மெப் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளமை நாம் அறிந்ததே.


சார்ஜ் செய்வதற்கான கெனக்டர் மற்றும் போர்ட்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது அப்பிள்.



இந்நிகழ்வில் புதிய வடிவிலான ஹெட்போன்களையும் அப்பிள் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருந்தது.



மேலும் அப்பிள் புதிய ஐ பொட் டச், ஐ பொட் நெநோ, மேம்படுத்தப்பட்ட டெக்ஸ்ட் டொப் ஐ டியூன்ஸ் அப்ளிகேஷன் போன்றவற்றையும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.



தற்போதைய அப்பிள் பாவனையாளர்கள் ஐ போன் 5 க்கு மாறவிரும்பினால் மாறுவதற்கான பல நல்ல தொழில்நுட்ப அம்சங்கள் அதில் உள்ளன.


அதேபோல இதைவிட பல்வேறு வசதிகளைக் கொண்ட செம்சுங் கெலக்ஸி எஸ்3 போன்ற ஸ்மார்ட் போன்களும் சந்தையில் உள்ளன.


நொக்கியாவும் அண்மையில் லுமியா920 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதுவும் பல புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.


ஆனால் பாவனையாளர் எதிர்பார்த்த அளவு புரட்சிகரமாக ஐ போன்5 உள்ளதா எனப் பார்க்குமிடத்து, இல்லையென்றே தெரிவிக்கின்றார்கள் சந்தை ஆய்வாளர்கள்.


செம்சுங், எச்.டி.சி போன்ற நிறுவனங்கள் தங்களது ஒவ்வொரு பிரதான ஸ்மார்ட்போனிலும் பல்வேறு நவீன வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.


வடிவத்திலும் அவை நல்ல மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அப்பிள் அதன் திரையில் அளவை சற்று அதிகரித்து, கண்ணாடி மற்றும் அலுமினியத்தை உபயோகித்த போதும் பெரிய அளவிலான ஐ போன் 4எஸ் என்ற எண்ணத்தை மட்டுமே தருகின்றது.


செம்சுங், எச்.டி.சி நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களில் காணப்படும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்பிடும் போது புரட்சிகரமானதும் சந்தையில் புதுமைகளைப் புகுத்திய நிறுவனம் என்ற வகையிலும் அப்பிளின் தொழில்நுட்ப அம்சங்கள் சற்றுக் குறைவே என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


ஸ்டீவ் ஜொப்ஸ் இறந்த பின்னர் அப்பிளின் வேகம் குறைந்து விட்டதா? எனத் தற்பொழுது எண்ணத் தோன்றுகின்றது.


அரைத்த மாவினையே அப்பிள் மீண்டும் அரைக்கிறதா என்ற கேள்வியும் நம்முன் எழுகின்றது.


யானைப் பசிக்கு சோளப்பொறியைத் தீனியாகப் போட்டது போலவே அப்பிளின் ஐ போன்5 உம் உள்ளது என்பதனை மறுக்க முடியாமலுள்ளது.


எது எவ்வாறிருப்பினும் இறுதி முடிவு நுகர்வோர் கையிலேயே உள்ளது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.