அமெரிக்க தூதரங்கள் மீதான தாக்குதலுக்கு உலகநாடுகள் கண்டனம்

13.09.2012.By.Rajah.
லிபியா மற்றும் எகிப்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 தூதரக அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.


இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குர் ஆனை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த அருட் தந்தை டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எகிப்திலும் லிபியாவிலும் இந்தத் தாக்குதல் நடந்தன.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும், லிபியாவின் பெங்சாய் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

பெங்சாய் தூதரகத்தின் மீது ரொக்கெட் குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தியபடி திடீரென உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். அமெரிக்கக் கொடியை கிழித்து வீசியதோடு, தூதரகத்தையும் சூறையாடி, தீ வைத்தனர்.

இதில் தூதரகத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கிருந்த லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸை பாதுகாக்க அவரை ஊழியர்கள் ஒரு அறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அந்த அறைக்குள் பரவிய கடும் புகை மூட்டத்தில் மூச்சு முட்டி அவர் இறந்தார். அவருடன் இருந்த 3 ஊழியர்களும் பலியாயினர்.
இந்தத் தாக்குதலில் மேலும் தூதரக ஊழியர்களுக்கு கை, கால்கள் உடைந்தன.



இதையடுத்து லிபிய இராணுவம் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி மற்ற அமெரிக்கர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றது.

வழக்கமாக தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள தூதரகத்தில் தான் இருப்பார். ஆனால், அன்றிரவு பணி நிமித்தமாக பெங்சாய் தூதரகத்துக்கு வந்திருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பலியானவர்களின் உடல்கள் இன்று ஜெர்மனி வழியாக அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு கொல்லப்பட்ட கடாபியின் ஆதரவாளர்களான 'Islamic law supporters' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந் நிலையில் படத்தைத் தயாரித்த சாம் பேசிலி தலைமறைவாகிவிட்டார்.

அதே போல எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகத்துக்குள் நுழைந்து அந் நாட்டின் கொடியை கிழித்து எறிந்து, கறுப்புக் கொடியை ஏற்றினர்.
உடனடியாக பொலிஸார் விரைந்து வந்ததால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.