கனடாவின் வளர்ச்சியில் தமிழ் இளைஞர்கள்

 
 
15.09.2012.By.Rajah.யுவதிகளின் பங்களிப்பு பாராட்டுக்குரியது: மார்க்கம் நகரசபை மேயர் புகழாரம்பல்வேறு மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் நிறைந்துள்ள கனடாவின் வளர்ச்சிக்கு அவர்கள் அனைவரும் தமது பங்களிப்பினை வழங்கிவருகின்றார்கள். இந்த வகையில் இங்கு வாழுகின்ற தமிழர் சமூகத்தின் இளைஞர்களும் யுவதிகளும் அளித்து வருகின்ற பங்களிப்பானது மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதற்கும் உரியது.
கனடாவில் இயங்கிவரும் இளைய தலைமுறையினரின் இசைக் கல்லூரியான பவதாரணியின் பாரதி கலைக்கோயில், கடந்த காலங்களில் கனடாவில் இயங்கிவரும் பல வைத்தியசாலைகளுக்கு உதவும் நோக்கத்தோடு பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.
இதன் மூலம் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்களுக்கு வாழ்வளித்த கனடா தேசத்திற்கு தங்களால் ஆன உதவிகளை செய்வதைக் காணமுடிகின்றது. எம்மால் உணர முடிகின்றது.
பாரதி கலைக் கோவில் எதிர்வரும் 21ம், 22ம், 23ம் திகதிகளில் தொடர்ச்சியாக நடத்தவுள்ள 48 மணிநேர இடைவிடாத “Non Stop- Help for Love” என்னும் இசை நிகழ்ச்சி மூலம் சேகரிக்கப்படவுள்ள நிதியானது மார்க்கம் நகரில் பல ஆண்டுகாலமாக மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கும் ஸ்ரோவில் பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு கனடாவின் மார்க்கம் நகர சபையின் மேயர் கௌரவ பிராங்க் ஸ்கெபட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதனை அறிவிக்கும் நோக்கமான நடத்தப்பட்ட மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பை மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரும் சமூக சேவையாளருமான லோகன் கணபதி ஆரம்பித்து வைத்தார்.
பல தமிழ் பேசும் ஊடகங்கள் கலந்து சிறப்பித்த மேற்படி சந்திப்புக் கருத்தரங்கில், மார்க்கம் நகரசபையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மார்க்கம் நகரசபையே கடந்த வருடம் தை மாதத்தை தமிழர்களின் மரபு நாளாக அங்கீகரித்து அதை தமது சபையின் அனுமதியோடு நடைமுறைப்படுத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கு மூல காரணமாக இருந்தவர்கள் மேயர் பிராங்க் ஸ்கெபட்டியும் நகர சபை உறுப்பினர் லோகன் கணபதியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேயர் பிராங்க் ஸ்கெபட்டி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாம் எமக்குள் தனித்து நின்றால் ஒன்றையும் சாதிக்க முடியாது. குழுவாகவோ அல்லது அணியாகவோ நின்றால்தான் எதனையும் சாதிக்கலாம். அதே போல பவதாரணியின் பாரதி கலைக்கோவில் நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் அவர்களது அதிபர் மதிவாசன் தலைமையில் எதிர்வரும் 23ம் திகதி ஒரு உலக சாதனையை படைக்கவுள்ளார்கள்.
48 மணிநேர இடைவிடாத இசை நிகழ்ச்சியை வழங்கி சாதனை படைக்கவுள்ள அதே நேரத்தில், நல்லதோர் மனிதநேய விடயத்திற்காகவும் அவர்கள் தங்களை அர்ப்பணிக்கவுள்ளார்கள்.
ஸ்ரோவில் வைத்தியசாலை இயங்குவதில் பல கஸ்டங்கள் உள்ளன. அத்துடன் அந்த வைத்;தியசாலையில் சிறந்த சேவையை வழங்குவதற்கு மேலும். இடவசதியும் வைத்திய உபகரணங்களும் தேவைப்படுகின்றன.
எனவே இந்த வைத்தியசாலையின் தேவையை உணர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளாக உள்ள பவதாரணியின் பாரதி கலைக்கோவில் நிறுவனத்தினர் நல்ல பணியை ஆற்றவுள்ளனர். அவர்களது முயற்சியில் மார்க்கம் நகர சபையும் பங்காளிகளாக இருப்பதையிட்டு நான் பெருமையடைகின்றேன்” என்றார்.
அங்கு உரையாற்றிய பவதாரணியின் பாரதி கலைக்கோவில் ஸ்தாபரும் அதிபருமான மதிவாசன்,
“ நமது பாரதி கலைக்கோவில் பல பொது விடயங்களுக்கு நிதி சேகரிக்கும் பணிகளைச் செய்து வந்துள்ளது. எமது கலைக்கோவிலின் அதிபராக இருந்த மறைந்த பவதாரணி அவர்களின் மறைவு எமமை கவலைக்குள்ளாக்கினாலும் அவரது மறைவுக்கு காரணமாக இருந்த கொடிய நோயிலிருந்து மக்கள் விடுதலை பெற எமது இசைத்துறையை நாம் பயன்படுத்தி பொதுப்பணி ஆற்றிவருகின்றோம்.
அதற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அனைவருக்கும் குறிப்பாக பவதாரணியின் பாரதி கலைக்கோவில் பெற்றோர் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்” என்றார்.
 
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.