சீதன நடைமுறைகள் தேவைதானா?

23.09.2012.By.Rajah.நிலா முற்றம் எனும் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் "தேசிய வாழ்வியல் முன்னேற்றத்திற்கு சீதனம் அனுகூலமானதா?" என்ற தலைப்பிலான பகிரங்கப் பொது மன்றம் ஒன்று நேற்று நிராவியடியில் இடம்பெற்றது. இதில், யாழ். பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளரான எஸ்.சந்திரசேகரம் தனது ஆய்வினை முன் வைத்துப் பல முக்கிய கருத்துக்களை வெளியிட்டார். எனினும், இது கடும் வாதப் பிரதி வாதங்களிற்கு உட்பட்டதோடு, பல சமூகக் கேள்விகளிற்கும் பதில் அளிப்பதாக அமைந்தது. இவ்வாறு பகிரப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாக இந்தக் கட்டுரை அமைகின்றது.

சேமிப்பின் முக்கியத்துவம்

மக்களின் வாழ்கைத் தரமானது பொருளாதார அபிவிருத்தி மட்டத்தினால் தீர்மாணிக்கப்படுகின்றது. இந்த அபிவிருத்தியானது பொருளாதார வளர்ச்சியிலேயே அதிகம் தங்கியுள்ளது. வளர்ச்சி என்பது உற்பத்தியிலான தொடர் அதிகரிப்பு என்பதுடன் உற்பத்தி அதிகரிக்க முதலீடு அவசியம். இந்த முதலீடானது சேமிப்பினால் உருவாக்கப்படுகின்றது என்ற வகையில் "மக்களின் வாழ்வியல் முன்னேற்றம் என்பது அவர்களின் சேமிப்பிலேயே அதிகம் தங்கியுள்ளது!" இந்த சேமிப்பினைத் தூண்டவென ஒவ்வொரு அரசாங்களும் பல்வேறு கொள்கையினை பின்பற்றுவதுடன், ஒவ்வொரு சமூகங்களும் தாமக்கேயான சில தனித்துவப் பண்புளையும் கொண்டு திகழ்கின்றன.

சீனா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் அனுபவம்

தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளியல் உறுதிப்பாட்டினை கொண்டுள்ள சீனா மற்றும் சிங்கப்பூர் அரசுகள், கடின உழைப்பு மற்றும் வலிந்த சேமிப்பு பழக்கத்தினை மக்களிடம் தூண்ட பல்வேறு நடவடிக்கைகளினை எடுத்து வருகின்றன. உதாரணமாக, சிங்கப்பூரில் உள்ள தொழிலாளர் ஒவ்வொருவரும் தமது சம்பளத்தில் 40% ஐ ஊழியர் சேமலாப நிதியத்திற்கு கண்டிப்பாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு திரட்டப்படும் சேமிப்பினை அரசு பாரிய முதலீட்டு திட்டங்களில் ஈடுபடுத்துகின்றது. இதனால் இந்த நாடுகளின் பொருளாதாரங்கள் 8% - 10% என்ற உயர் பொருளாதார வளர்ச்சியினை சாதிக்க முடிந்துள்ளது.

இலங்கையின் அனுபவம்

அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டினை தொடர்ந்து பேண முடியாத இலங்கையில், தொழிலாளர்கள் ஊக்கமிழக்கவும், நுகர்வுச் செலவுகளை அதிகம் தூண்டுவதற்குமான திட்டங்களே முன் வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கைத் தொழிலாளி ஒருவர் தனது சம்பளத்தில் 12% ஐ ஊழியர் சேமலாப நிதியத்திற்கு வழங்கி வருவதுடன் இதனைக் கூட முறையாக எல்லோரும் செலுத்துவதில்லை. இவ்வாறாக அரசு பெற்றுக் கொள்ளும் நிதியினை முறையான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யத் தவறி வருகின்றது. இந்த நிலையில், பிரதேச வளர்ச்சி என்பது அந்த அந்த சமூகங்கள் கொண்டுள்ள சேமிப்பு மற்றும் முதலீட்டு கலாச்சாரங்களையே நம்பி உள்ளது.

பொருத்தமான பேரினப் பொருளாதாரக் கொள்கையினை வடகிழக்கில் அரசு முன்வைக்காத நிலையில், தற்செயலாக, வடகிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்கள் பண்டு தொட்டு இன்று வரை கடைப்பிடித்து வரும் சீதனம் என்ற கலாச்சார நடைமுறையானது, அவர்களின் பொருளாதார வளங்கள் தொடர்பான வாய்ப்பினை ஓரளவேனும் பாதுகாத்து வந்துள்ளது.

யாழ்ப்பாண சீதன நடைமுறைகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சீதன நடைமுறைகள் தொடர்பாக விரிவுரையாளரான எஸ்.சந்திரசேகரம் ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். இதன்படி, ஒரு திருமணத்தின் போது சராசரியாக 52 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் சீதனமாக கை மாற்றப்படுகின்றது. இதில், வீடு முதலிடம் பெறுவதுடன் இதையடுத்து தங்க நகைகள், பண வைப்பு, மேட்டு நிலம், தாழ் நிலம் என முறைய முக்கியத்துவம் பெறுகின்றன.

மேற்படி சொத்துச் சேகரிப்பில், பண வைப்பினைத் தவிர ஏனைய எல்லா வகையான சேமிப்புத் திட்டங்களாலும் யாழ்.மக்கள் அதிக நன்மையினை ஈட்டி வருவதனை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் மிக நீண்ட காலமாக மெய்யான வட்டி வீதம் மிகக் குறைந்த மட்டத்திலேயே இருப்பதனால் பண வைப்புச் செய்தவர்கள் மட்டும் முதல் இழப்பினை சந்தித்துள்ளனர்.

எது எவ்வாறாயினும், யாழ்ப்பாணம் அல்லது வடகிழக்கு மக்களின் சீதன நடைமுறைகள் வலிந்த சேமிப்பினைத் தூண்டுவதுடன், இது பிரதேச வளர்ச்சிக்குத் தேவையான முதலீட்டினை ஈட்டித்தரக் கூடிய ஓர் கலாச்சாரச் செயற்பாடு என்ற வகையில் சீதன நடைமுறையின் அவசியத்தினை வலியுறுத்தி தனது கருத்துக்களை முன்வைத்தார் விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகரம்.

வாதப் பிரதி வாதங்கள்

இந்த பொது மன்றத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தின் மற்றொரு பொருளியல் விரிவுரையாளரான எஸ்.உதயகுமார் பங்கு பற்றியதோடு, முன்னால் கல்விப் பணிப்பாளர் ஜோஜ், ஆசியரியர் தணிகாசலம் மற்றும் பல ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர். எனினும், பெரும்பாலானவர்களின் கருத்துக்கள் "சீதன நடைமுறைகள் தவறானது என்பதோடு இது இல்லாது ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என ஆதங்கப்பட்டதனை காண முடிந்தது.

சீதனம் கொடுக்கத் தான் வேண்டுமா?

என்னதான் பொருளாதாரம் வளர்ந்தாலும் அதன் நன்மைகள் அடித்தட்டு மக்கள் எல்லோருக்குமே சென்று சேர்கின்றதா?, யாரை வருத்தி யார் சந்தோஷப்படுவது? யாருக்காக இந்த பொருளாதார வளர்ச்சி? எனக் கேள்விக் கணைகளைத் தொடுத்த ஆசிரியர் தணிகாசலம், சாதிக் கொடுமைகளிற்கும், பெண் அடிமைக்கும் காரணமான இந்த சீதன நடைமுறைகள் இல்லாது ஒழிய வேண்டும் என வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய விரிவுரையாளர்களான எஸ்.சந்திரசேகரம் மற்றும் எஸ்.உதயகுமார், எந்த வீட்டிலும் ஆண்கள் சீதனம் கேட்பதில்லை. தாய் அல்லது மாமி என்ற பாத்திரம் ஏற்கும் ஒரு பெண்னே இன்ன இன்ன சீதனம் தர வேண்டும் என்கிறார்கள். எனவே, பெண்ணுக்கு பெண்தான் பொண் விலங்கு போடுகிறாள் என்பதுடன் மக்களின் வாழ்கைத் தரம் உயர பொருளாதார வளர்ச்சி அவசியம் என வலியுறுத்தினார்கள்.

பெண்தான் சீதனம் கொடுக்க வேண்டுமா?

ஒரு மாற்றத்திற்காகவேனும் ஆண் சீதனம் கொடுத்தால் என்ன? என முன்னால் கல்விப் பணிப்பாளரான ஜோஜ் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த விரிவுரையாளர்கள், முஸ்லீம் சமூகத்தில் ஆண்கள்தான் சீதனம் கொடுக்கின்றார்கள். தவிரவும், எந்த சமூகத்திலும் ஆண்கள்தான் சீதனம் கொடுக்கின்றார்கள்.

காரணம், ஒரு பெண்னின் சார்பாக சீதனம் கொடுக்கப்பட்டாலும் அந்த சொத்துக்களை வியர்வை சிந்தி அதிகம் கஷ்ரப்பட்டு உழைப்பது ஓர் ஆண்தான். எனவே, ஆண்களின் கடின உழைப்பினை தூண்டவும், பெண்களின் கட்டாய சேமிப்பினைத் தூண்டவும் இந்த சீதன நடைமுறைகள் அவசியமாக உள்ளதாக தெரிவித்தனர்.

சீதனம் சமூக ஏற்றத் தாழ்வினை தூண்டவில்லையா?

வருமானம் அல்லது சாதி நிலைகளில் உயர்ந்தவர்களாலேயே சீதன நடைமுறைகள் அதிகம் ஆதரிக்கப்பட்டு முன்னெடுத்தும் செல்லப்படுகின்றன. மாறாக, வருமானம் அல்லது சாதி நிலைகளில் குறைந்த குடும்பங்களில் அதிக காதல் திருமணங்கள் இடம்பெறுவதுடன் சீதன நடைமுறைகள் தவிர்க்கப்படும் ஒன்றாக அல்லது குறைந்த முக்கியத்துவம் வழங்கும் ஒன்றாகவும் உள்ளது.

இதனால், வருமானம் படைத்தவர்களிடையே மட்டும் பெருமளவு சொத்துக்கள் தொடர்ந்தும் குவிவதுடன், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆக்கப்படுகின்றனர். இதனால், சமூகத்தில் வருமான ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கும், வடகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கீழ் வர்க்கம் - மேல் வர்க்கம் என்ற வேறுபாடுகள் தொடர்ந்தும் இரண்டு சமாந்தரக் கோடுகளாகவே இருப்பதற்கு சீதன நடைமுறைகள் ஒரு காரணமாக நீங்கள் பார்க்கவில்லையா? என்றதொரு நீண்ட கேள்வியினை ஒன்லைன்உதயன் செய்தியாளர் கேட்ட போது இதற்குப் பதில் அளித்த எஸ்.உதயகுமார்,

சீதன நடைமுறைகள் சமூக பொருளாதார அபிவிருத்தியில் எதிர் கணியத் தாக்கத்தினை செலுத்துகின்றது என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆணால் மறுபுறத்தில், சீதனமே சேமிப்பினைத் தூண்டி முதலீடாக மாறுவதனால் பொருளாதார வளர்ச்சி என்ற நேர் நிலைத் தாக்கத்தினையும் கருத்தில் கொள்கின்ற போது சீதன நடைமுறைகளை ஏற்க முடியும் என தெரிவித்தார்.

சீதனத்தினை முதலீடு செய்வதாக யார் சொன்னது?

யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் இங்கே சீதனாமாக வீடு மற்றும் தங்க நகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆணால், தங்கத்தின் விலை கூடிவிட்டது, வீட்டின் விலை கூடிவிட்டது என்பதற்காக இந்த சொத்துக்களை விற்று காசாக்க யாரும் முன் வருவதில்லை. இதனால், இவை பல வருடங்களாக தேசிய உற்பத்திக் கணக்கிற்கே வரமட்டாது. இவற்றை சேமிக்க மேற்கொண்ட சிறு சிறு வீட்டுச் சேமிப்புக்கள் கூட தேசிய உற்பத்திக் கணக்கீட்டில் வருவதில்லை. இவ்வாறு, இருக்கையில் உற்பத்தி அதிகரிக்கிறது என்று நீங்கள் எவ்வாறு சொல்லப் போகின்றீர்கள்? உண்மையில், சீதனம் முதலீடு செய்யப்படுவது என்பது ஓர் பொய்யான பிரச்சாரம் என தன் கருத்தை மீண்டும் முன்வைத்தார் ஜோர் அவர்கள்.

இதற்கு பதில் தந்த விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகரம், தற்போது சீதனமாக திரட்டிய சேமிப்பினை யாரும் முதலீடு செய்வதில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அதற்கான சூழல் யாழ்ப்பாணத்தில் இன்னும் கனியவில்லை. ஒருவேளை, யாழ்ப்பாணத்தில் உறுதியான நல்ல சூழல் நிலவுகின்ற போது மக்கள் சீதனமாக திரட்டிய சொத்துக்களை முதலீடு செய்து அதிக இலாபம் பெற முடிவதோடு இதனால் பிரதேச உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு தூண்டப்பட வாய்ப்புள்ளது.

மேலும், யாழ்ப்பாணத்தில் இன்று அதிகம் இலாபம் சம்பாதிக்கும் தொழில் துறையாக வங்கித் துறையே காணப்படுகின்றது. இதற்கு காரணம் பெண்களைக் கொண்ட குடும்பங்கள் சீதனச் சேமிப்பாக பல கோடி ரூபாய்களை யாழ்ப்பாண வங்கிக் கிளைகளிலேயே முதலீடு அல்லது வைப்புச் செய்கின்றனர் எனத் தெரிவித்தார்.

சீதனக் கொடுமையால் எத்தனை பெண்கள் தூக்கம் இழந்துள்ளனர் தெரியுமா?

இங்கு பெண்கள் தரப்பில் பேசிய ஒரு பெண்னைப் பெற்ற தாய், நீங்கள் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி என்று ஏதேதோ எல்லாம் பேசுகின்றீர்கள். ஆனால், ஒரு பெண்னை பெற்றவர் வீட்டில் எத்தனை பெண்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? என கேள்வியினை தொடுத்தார்.

இதற்காக தமது வருத்தத்தினையும் தெரிவித்த விரிவுரையாளர்கள், சீதனக் கொடுமையினால் பலர் முதிர் கண்ணியாகவே வாழ்வதும், பல பெண்கள் தூக்கம் தொலைத்தும், பல ஆண்கள் குறிப்பாக கணவன்மார்கள் குடிப் பழக்கத்தில் ஆர்வம் காட்டவும் யாழ்ப்பாணத்தில் உள்ள சீதன நடைமுறைகளும் ஒரு காரணம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆணால், இதுவே ஆண்களின் கடின உழைப்பிற்கும் பெண்களின் வலிந்த சேமிப்புக்கும் அதன் வழியே ஏற்படக் கூடிய வாழ்கைத் தர முன்னேற்றத்திற்கும் சீதனம் அவசியமாக உள்ளதென மீண்டும் வலியுறுத்தினார்கள்.

முடிவுரை

இவ்வாறாக கடும் வாதப் பிரதி வாதங்களிற்கு உட்பட்ட மேற்படி கருத்தானது, மேலும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுடன் "சீதன நடை முறைகள் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு அனுகூலமானது" என்ற கத்தினை மேலும் உறுதியாக நிறுவ முடியும் என்ற விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகரத்தின் முடிவுரையுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவு கண்டன

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.