மகா தீப கொப்பரைக்கு இன்று சிறப்பு பூஜை

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டு, தொடர்ந்து 11 நாள்கள் எரிந்த மகா தீபம் சனிக்கிழமை அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி, மகா தீபம் எரிய பயன்படுத்தப்பட்ட கொப்பரைக்கு கோயிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா, நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. 27ஆம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து, 11 நாள்கள் எரிந்தது.
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பிரகாசிக்கும் திறன் கொண்ட இந்த மகா தீபம், சனிக்கிழமை அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது. பின்னர், மகா தீப கொப்பரை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் மகா தீபக் கொப்பரையை வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி, மேலாளர் இந்திரஜித், கண்காணிப்பாளர்கள் துவாரகநாத், வடிவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.