காஞ்சி கோவில்களுக்கு எப்போது கும்பாபிஷேகம் நடக்கும்?

காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களின் பின்னணியில், பல வரலாற்று தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. இங்குள்ள சிலைகள், மண்டபங்கள், தூண்கள் என அனைத்துமே, பல்லவ, சோழ, பாண்டிய என, காஞ்சியை ஆண்ட பல மன்னர்களால் எடுப்பிக்கப்பட்டவை. இந்த சிலைகளும், மண்டபங்களும், தமிழர் தம் பழம் பெருமையை, இன்றளவும் பறைசாற்றிக் கொண்டுள்ளன. கைலாசநாதர் கோவில், கலை பொக்கிஷமாக திகழ்கிறது. இது, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரதராஜப் பெருமாள் கோவில் நூறு கால் மண்டபத்தில், தசாவதாரங்கள் வரலாறு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட சங்கிலி, உருளும் தூண், போன்றவை இன்றும் காண்போரை வியக்க வைக்கிறது. அழியா ஓவியம் வரதராஜப் பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், திருப்பருத்திக்குன்றம் ஜைனர் கோவில், ஆகியவற்றில் மூலிகைகளைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற கோவில்களில் உள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள், மக்களை கவரும் வண்ணம் உள்ளன. கி.பி. 1249ல், காகதீய இளவரசி கனகாம்பா, ஏகம்பன் கோவிலில் தூண் எழுப்பியுள்ளாள். சம்புவராயர்களின் ஆட்சியில், ஏகம்பரநாதன், இக்கோவிலில் கோபுரம், துலாபார மண்டபம் கட்டியதுடன், தேரும் அளித்துள்ளான்.
இம்மன்னனால் எழுப்பப்பட்ட கோபுரம், இன்றும் "பள்ளி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கால் மண்டபம், விஜயநகர வேந்தர்களால் ஆயிரம் கால் மண்டபமாக மாற்றப்பட்டது. கி.பி.1509ல், கிருஷ்ண தேவராயன், ஏகம்பன் கோவிலின் தெற்கு கோபுரத்தை அமைத்து, 1517ல், தெப்போற்சவமும் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். வண்ண ஓவியங்கள் ராஜசிம்ம பல்லவனால், கயிலாயநாதர் ஆலயம் எடுப்பிக்கப்பட்டது. கி.பி. 1365ல், குமார கும்பண்ணன் காலத்தில், வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன. இதன் மூலம், கோவில் மேலும் பொலிவடைந்தது. காஞ்சி, காமாட்சியம்மன் கோவில் விமானத்தை, கி.பி.1394ல், இரண்டாம் புக்கன் செப்பு கவசமிட்டு, அலங்கரித்துள்ளான். கி.பி.1449ல், இக்கோவிலில், மல்லிகார்ஜுனன் 16 கால் மண்டபத்தை எழுப்பியுள்ளான். முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில், இம்மன்னனின் படைத்தளபதியான நரலோக வீரன், வரதராஜபெருமாள் கோவிலில் மடப்பள்ளி, மண்டபம், பிரகார சுற்றுச்சுவர் எழுப்பி, அதில், அரியின் சிற்பத்தை இடம் பெற செய்துள்ளான். பராமரிப்பு இல்லை இந்த வரலாற்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காஞ்சிபுரம் நகரில் உள்ள கோவில்களில், காலத்தால் அழிக்க முடியாத கலை பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால், அவை போதிய அளவில் பராமரிக்கப்படுவதில்லை என்பது தான் சோகம். பல சிற்பங்கள் தூசிகளாலும், எண்ணெய் பிசுக்காலும் மறைக்கப்பட்டுவிட்டன என்பதே உண்மை. பெரும்பாலும் இருளில் மூழ்கி கிடக்கும் இந்த கலைப் படைப்புக்கள், அங்கு வருவோரின் கண்களுக்கு தெரிவதில்லை. இவற்றை அறிந்து கொள்ள தகவல் பலகையோ, அடையாள குறியோ எதுவும் கிடையாது. எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்களும் சரி, சுற்றுலா பயணிகளும் சரி, சுவாமி தரிசனத்தோடு சென்றுவிடுகின்றனர். காணக்கிடைக்காத கலை பொக்கிஷங்களை அவர்கள் கவனிப்பதில்லை. உயிரோட்டம் தேவை பொதுவாக ஒரு கோவிலுக்கு, ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அப்போது தான், அந்த கோவிலில் மூலவரை வழிபடும் பலன் முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை என்றாலும், குறைந்த பட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, வரலாற்று சிற்பங்கள் புதுப்பிக்கப்படும் என்பது, கும்பாபிஷேகத்தின் முக்கிய பயனாகும். தற்போது நகரத்தில், ஒரு சில கோவில்களை தவிர பெரும்பாலான கோவில்களில் 20 ஆண்டுகள் கடந்தும், கும்பாபிஷேகங்கள் நடத்தப் படவில்லை. இதனால், கோவில்களில் உள்ள சிற்பங்களும், மண்டபங்களும் உயிரோட்டம் இன்றி, பொலிவிழந்து காணப்படுகின்றன. எனவே, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், சிற்பங்களை மூலிகை ரசாயனம் கொண்டு பொலிவு பெற செய்யவும், கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செய்வார்களா?

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.