சொர்க்க வாழ்வு தரும் புனித மத்தன த்வாதசீ விரதம்



வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரைகண்டவர் தேவதத்தர். இருப்பினும் அவருக்கு மக்கள் செல்வம் இல்லையே என்ற ஒரு மனக்குறை மட்டும் இருந்தது. அதற்காக மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்தார். அவர் முன் திருமால் தோன்றி, 'தேவ தத்தா! உன் மனக்குறை நீங்கும்.

ஆனால் அற்ப ஆயுள் உள்ள ஆண் குழந்தை வேண்டுமா? அல்லது விதவையாகக் கூடிய பெண் குழந்தை வேண்டுமா?' என்று கேட்டார். தேவதத்தரோ சற்று யோசித்து விட்டு, 'சுவாமி! ஒரு பெண் குழந்தையையே எனக்குத் தந்தருளுங்கள்' என வேண்டினார்.

அதன்படியே வரத்தை அளித்து விட்டு அங்கிருந்து மறைந்தார் மகா விஷ்ணு. தேவதத்தர் வீடு திரும்பினார். கொஞ்ச காலத்திலேயே தேவதத்தருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு திருமண வயது வந்ததும், திருமணம் செய்துவைத்தார் தேவதத்தர்.

ஆனால் விதிதான் முன்பாகவே எழுதப்பட்டு விட்டதே. திருமணமான இரண்டாவது மாதத்திலேயே தேவதத்தரின் மருமகன் இறந்துபோனான். இதனால் அவரது மகள் விதவையானாள். அதையடுத்த சில நாட்களிலேயே தேவதத்தர் தம்பதியரும் இறந்துபோனார்கள்.

விதவையான அந்தப் பெண், தாயும் தந்தையும் இல்லாத தன் சொந்த வீட்டுக்கே வந்து விட்டாள். தந்தையின் சொத்துக்களை அனுபவித்து வந்தாலும், மறந்தும் கூட யாருக்கும் அவள் தான- தர்மம் செய்யவில்லை. மாறாக, பிச்சை கேட்டு வந்தவர்களை எல்லாம் 'நாஸ்தி (இல்லை) நாராயணா!' என்று சொல்லி விரட்டி விடுவாள்.

மீண்டும் பிச்சைக் கேட்டால் வசவு வார்த்தைகள் தான் வருமே தவிர, நல்ல வார்த்தைகள் வராது. மகா விஷ்ணு அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்தார். 'இந்த விதவைப் பெண் கொஞ்சம் கூட தர்மம் செய்யாமல்... இரக்கம் இல்லாமல் கடினமான மனதுடன் நடந்து கொண்டாலும், 'நாராயணா!' என அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கிறாளே!' என்று எண்ணிக்கொண்டார்.

பிறகு மானிட உருவம் கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டு முன்பு போய் பிச்சை கேட்டார். அவள் தன் வழக்கப்படி 'நாஸ்தி நாராயணா!' என்று விரட்டினாள். 'என்னம்மா! உன் வீடு தேடி வந்து பிச்சை கேட்கும் என்னை இந்த விரட்டு விரட்டுகிறாயே!' என்றார் உருமாறி வந்திருந்த திருமால்.

 'பிச்சைக்காரனுக்கு இவ்வளவு திமிரா?' என்று கத்திய அந்தப் பெண், தான் மெழுகிக் கொண்டிருந்த கந்தல் துணியை கோபத்துடன், மகாவிஷ்ணுவின் பிச்சை பாத்திரத்தில் வீசி எறிந்தாள். சற்று விலகிப்போன மகாவிஷ்ணு தன் கையில் இருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது, அதற்குள் தரை மெழுகிய கந்தல் துணியுடன் ஒரு துவரையும் இருந்தது.

அந்தத் துவரையை எடுத்த விஷ்ணு பகவான், சிரித்தபடியே அதை அங்கேயே ஓர் இடத்தில் முளைக்கும் படியாகப் போட்டுவிட்டு வைகுண்டம் சென்று விட்டார். அந்த துவரை சில நாட்களிலேயே பெரிய செடியாக வளர்ந்து காய்த்துக் குலுங்கியது. மகாவிஷ்ணு சென்ற சில நாட்களிலேயே விதவைப் பெண்ணும் இறந்துபோனாள்.

அவள் மீண்டும் மறுபிறவியில் ஒரு புழுவாகப் பிறந்து, அந்தத் துவரைச் செடியில் இருந்த இலைகளைத் தின்று கொண்டிருந்தாள். ஒரு நாள் மகாவிஷ்ணு லட்சுமிதேவியுடன் அங்கு வந்து, 'புழுவே! நன்றாக இருக்கிறாயா!' என்று கேட்டார். 'பெருமாளே! தாங்கள் அறியாததும் உண்டோ?' என்று புழுவிடம் இருந்து பதில் வந்தது.

அப்போது அருகில் இருந்த லட்சுமிதேவி, 'சுவாமி! இந்த புழுவிற்கு இந்த ஜன்மம் வருவதற்கு ஏதேனும் காரணம் உண்டா?' என்று கேட்டார். தேவதத்தர் வரம் வாங்கியது முதல் அவளது மகள் விதவையானது வரை அனைத்தையும் கூறி, 'அவள்தான் புழுவாகப் பிறந்திருக்கிறாள்!' என்று சொல்லி முடித்தார் மகாவிஷ்ணு. அதற்கு லட்சுமிதேவி, 'இந்தப் புழு பிறவியில் இருந்து விடுதலை கிடைக்க என்ன வழி?' என்று கேட்டார்.

விரத பலன் மகிமை :
அவருக்கு 'மத்தன த்வாதசீ விரதம்' பற்றி கூறிய மகா விஷ்ணு, அந்த விரதத்தை மேற்கொண்டவர்கள் அதன் பலனில் இருந்து கொஞ்சம் கொடுத்தால் இந்த ஜீவனுக்கு விடுதலை கிடைக்கும்' என்று விமோசனத்திற்கான வழியை கூறினார் பரந்தாமன்.

அந்த விரத பலனை லட்சுமி தேவி உடனடியாக கொடுத்தாள். இதையடுத்து அடுத்த நொடியே புழுவின் பிறவி நீங்கியது. அழகான பெண் ஒருத்தி அதில் இருந்து வெளிவந்து லட்சுமி நாராயணரை வலம் வந்து வணங்கினாள்.
 'தாயே! லட்சுமிதேவி! நீங்கள் சொன்ன விரதத்தை தயவு செய்து எனக்கும் உபதேசம் செய்ய வேண்டும்' என்று வேண்டினாள். லட்சுமி தேவி விரதத்தை, அந்தப் பெண்ணுக்கு சொல்லி கொடுத்தார். அதன்படி முறையாக முழுமையான அவ்விரதத்தை கடைபிடித்த அந்தப்பெண் நற்கதி அடைந்தாள்
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.