முருகன் பிறப்பு வித்தியாசமான கதை

பத்மபுராணம் என்ற நூலின், 41வது சர்க்கத்தில் உள்ள 100 ஸ்லோகங்கள், முருகனின் பிறப்பு பற்றியும், அவருக்கு ஆறுமுகம், 12 கை என மாறுபட்ட உருவம் அமைந்தது குறித்தும் வித்தியாசமான தகவல் உள்ளது. ஒருமுறை பார்வதியையும், பரமேஸ்வரனையும் ஆயிரம் ஆண்டுகளாக எங்கும் காணவில்லை. அவரைக் காணச் சென்ற தேவர்களை, வீரகன் என்ற கணநாதன் தடுத்து விட்டான். தேவர்கள், அக்னியை அனுப்பி அவர்களைத் தேடச் சொன்னார்கள்.

அவன் கிளி வடிவெடுத்து அவர்கள் தங்கியிருந்த அறை பக்கம் சென்றான். சாளரம் (ஜன்னல்) வழியாக எட்டிப் பார்த்த போது, அங்கே இருவரும் தனிமையில் இருந்ததைக் கண்டான்.
சிவன் கிளியைப் பார்த்து விட்டார். ""அக்னியே! எனது வீரியம் வெளிப்படும் வேளையில், இங்கு வந்து பார்த்தாய். எனவே, இதன் ஒரு பகுதியை நீயே ஏற்பாய்,'' என்று சாபமிட்டார்.

இதையடுத்து அக்னி அதை ஏற்றான். அது ஒரு குளமாகப் பெருகியது. பார்வதி தேவி அந்த குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் அந்த குளத்து நீரை பருகினர். அந்த நீரை ஒரு தாமரை இலைக்குள் அடக்கியெடுத்து கொண்டு போக முயன்றனர்.
பார்வதி அவர்களைத் தடுத்தாள். ""இது என் கணவருக்குரியது. இதை நீங்கள் கொண்டு போகக்கூடாது,'' என்றாள்.

அந்தப்பெண்கள் பார்வதியிடம்,"" எங்களை தடுத்த உனக்கு குறையுள்ள ஒரு பிள்ளையே பிறக்கும். நாங்கள் இந்த குளத்து நீரைப் பருகி விட்டதால், அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பையாவது எங்களுக்கு தர வேண்டும்,'' என்று உரிமை கொண்டாடினர். இதற்கும் பார்வதி மறுத்தாள்.
"" இதற்கு நீங்கள் உரிமை கொண்டாட முடியாது,'' என்றவள், அவர்கள் எடுத்துச் சென்ற நீரை திரும்பவும் வாங்கி பருகி விட்டாள். இதையடுத்து அந்தப் பெண்கள்,""உனக்கு பிறக்கும் குழந்தை குறையுடையதாகப் பிறக்கட்டும்,'' என்று சாபமிட்டு சென்றனர்.

அதன்படி, வலது விலா வழியாக குமாரர் என்ற குழந்தையும், இடது விலா வழியாக ஸ்கந்தர் என்ற குழந்தையும் பிறந்தது. இவை இரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டு ஆறுமுகமும், 12 கரங்களும் கொண்டதாகத் திகழ்ந்தது.
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.