சகல சவுபாக்கியம் தரும் தை அமாவாசை சூல விரதம் தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலத்தில் அலங்கார வல்லி உடனுறை கிருத்திவாசேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தை அமாவாசையையொட்டி நடைபெறும் சூலவிரத சிறப்பு வழிபாடு பிரசித்தி பெற்றது ஆகும். சூலவிரத மகிமை குறித்து கந்தபுராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
சகல விதமான சவு பாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூலவிரதம். சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும்போது அதாவது தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.
அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் வணங்கி, வழிபட்டு, வெளியே சென்று சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய
சிவபெருமானின் விக்கிரகத்தை வைத்து கொண்டு அபஷேகமும், நைவேத்தியமும் செய்ய வேண்டும்.
பிறகு மதியம் வேளையில் திருநீறு, ருத்ராட்ச மாலைகளை தரித்த சிவ பக்தர்களுக்கு தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறு தான தர்மம் செய்ய வேண்டும். அதன் பின் சிவாலயத்திற்கு சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து திருக்கோவிலுக்கு நம்மால் முடிந்த காணிக்கைகளை செலுத்தி இறைவனை வணங்க வேண்டும்.
பிறகு சிவ பக்தர்களுடன் அமர்ந்து ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். இப்படி இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய விரோதிகள் அனைவரையும் வென்று தீராத கொடிய நோய்களிலிருந்தும் விடுபட்டு தீர்க்க ஆயுள், புத்திர செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் அடைந்து சகல போக பாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள்.
முடிவில் சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மகா விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து தனக்கு ஏற்பட்ட பொல்லாத தலைவலி நீங்க பெற்றார். மேலும் கொடிய அசுரனான காமநேமியை சம்ஹாரம் செய்தார். ஜமத்கனி முனிவரின் புதல்வனும், மிக பல சாலியுமான பரசு ராமரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து அதன் மகிமையால் தன் விரோதியும், ராவணனை மிஞ்சும் பராக்கிரம சாலியான கார்த்தவீர்யாஜூனனைக் கொன்றார்.
பிரம்மனும் சூல விரதத்தை அனுஷ்டித்து தனக்கு ஏற்பட்டிருந்த கொடிய வயிற்று வலி நீங்க பெற்றார். சுதர்மன் என்பவன் இவ்விரத மகிமையால் மரணத்தையே வென்று ஜயமடைந்தான். மேகாங்கன் என்னும் அரசனும் இவ்விரதத்தை கடை பிடித்து அதன் பயனாக வித்வான்களான ஆயிரம் புத்திர, பெளத்திரர்களை பெற்றெடுத்து அளவற்ற போகங்களையும் அனுபவித்து இறுதியில் சிவலோகத்தை அடைந்தான்.
இவர்களை போலவே இன்னும் பலர் இவ்விரதத்தை அனுஷ்டித்து தாங்கள் விரும்பியவற்றை அடையப் பெற்று இறுதியில் திருக்கயிலாயத்தையும் அடைந்தனர். இந்த சூல விரதத்தை எவர்கள் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்கள் பகைவர்களை வென்றும், கொடிய நோய்களிலிருந்து நீங்கியும், மேலான நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
தோஷ நிவர்த்தி பெறுவார்கள். இன்னும் ஏனைய பாவங்களில் இருந்தும் விடுபட்டு பரமேஸ்வரரின் திருவருளால் சகல ஐஸ்வர்யங்களையும் அடைவார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த இச்சூல விரதத்தின் மகிமை பற்றி மகாபலட்டரான வீர பத்திரர் சிறந்த கணத் தலைவரான பானுகம்பனுக்கு கூறியருளினார் என்று எனக்கு வியாச முனிவர் அறிவித்திருக்கிறார்– சூதமா முனிவர்.
ஆகையால் தவ சீலர்களே சகல பாவங்களையும் வேரோடு அழிக்க வல்ல இந்த சூல விரதத்தின் சிறப்பை பற்றி விளக்கும் இந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்களுக்கு மிருத்யுவின் (மரணத்தின்) பயம் இராது.
கும்பகோணம் – தஞ்சாவூர் வழித்தடத்தில் அய்யம்பேட்டை மாற்று பாதையில் வந்து ரெயில்வே நிலைய சாலையில் திரும்பி சென்றால் வெகு சமீபத்தில் உள்ள சூல மங்கலம் என்னும் இவ்வூர் அமைந்துள்ளது. ஸ்ரீ அலங்கார வள்ளி உடனுறை ஸ்ரீ கிருத்திவாசேஸ்வரர் திருக்கோவிலே சூல மங்கை என்பதாகும்.
சூல மங்கை என்னும் இக்கோவிலின் திருப்பெயரே இவ்வூரின் பெயராகவும் வழங்கலாயிற்று. இப்போது மருவி சூலமங்கலம் என்று விளங்குகிறது. இக்கோவில் தலம் (சூலமங்கை) மூர்த்தி (கிருத்திவாசர்) தீர்த்தம் (சூல தீர்த்தம்) என்னும் 3–ம் கொண்டுள்ளது.
அஸ்திரதேவர் (சூல தேவர்) வழிபட்டு திருவிழா காலங்களிலும், தீர்த்த வாரியிலும் தான் முதன்மையாக விளங்க தக்க வரத்தை இறைவனிடம் பெற்ற தலம். சப்த மங்கையரில் சூல மங்கை வழி பட்ட தலம். பெரிய சிவாலயம், கல் திருப்பணி, ஊரின் பெயருக்கேற்றவாறு கோவில் வெளி வாயிலின் புறத்தில் சூலம் தலை மீது ஏந்தியவாறு சூல தேவர் உள்ளார்.
அஸ்திர தேவரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு மிக்க இத்தலத்தில் தை அமாவாசையன்று, அதாவது சூல விரதத்தன்று இத்திருக்கோவிலில் விரதம் அனுஷ்டித்தல், வழிபாடு செய்தல், திருக்கோவிலை மெழுகிட்டு கோலமிடுதல், உழவார திருப்பணிகள் செய்தல், திருமுறைகள் பாடுதல், அன்னம் பாலித்தல், தான தர்மங்கள் செய்தல்,
திருக்கோவில் நித்திய பூஜைகள் தடைபடாமல் இருக்க உதவுதல், தினசரியோ, வார நாட்களிலோ தவறாது திருக்கோவிலுக்கு செல்லுதல், திருக்கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்களுக்கு தங்களால் இயன்ற உதவி செய்தல் போன்ற திருப்பணிகளை செய்வோமாயின் உலகத்தில் யாவரும் செய்திராத தவப்பயனும்,
ஒப்பற்ற யாகங்கள் செய்த பலனும் இந்த பிறவியிலே கிட்டுவதுடன், சிவ பெருமானின் அனுக்கிரக பார்வையில் நாம் இருந்து அனைத்து போகங்களும் கிடைக்க பெற்று சிவானந்த பெரு வாழ்வு வாழலாம் என்பது திண்ணம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen