தல்லாகுளம் பெருமாள் கோயிலில் 29-ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
தென்னிந்திய அளவில் மதுரை சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் ஆகியவற்றை மையமாக வைத்து நடைபெறும் இத்திருவிழாவானது சைவ, வைணவ சமய ஒற்றுமைத் திருவிழாவாகத் திகழ்கிறது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 8-ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 10-ஆம் தேதி திருக்கல்யாணமும், 11-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா, தல்லாகுளம் பெருமாள் திருக்கோயிலில் கொட்டகை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. வரும் 29-ஆம் தேதி காலையில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது.
மே 10-ஆம் தேதி அழகர் கோயிலில் திருவிழா தொடங்குகிறது. 12-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் தோளுக்கினியனாக பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடாகிறார். அவர் கள்ளழகர் திருக்கோலத்தில் வழியெங்கும் திருக்கண்ணில் எழுந்தருளியவாறு வருகிறார்.
13-ஆம் தேதி பகலில் மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு வரவேற்பளிக்கும் எதிர்சேவை நடைபெறும். அன்று மாலை தல்லாகுளம் பெருமாள் கோயில் பகுதியில் கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தல்லாகுளம் பெருமாள் கோயிலில் 13-ஆம் தேதி இரவு தங்கி திருமஞ்சனமான பின்னர் தங்கக்குதிரையில் புறப்படும் கள்ளழகர் 14-ஆம் தேதி காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குள் அமைக்கப்படும் மண்டகப்படியில் இறங்கி அருள்பாலிக்கிறார். அன்று இரவு வண்டியூர் பெருமாள் கோயிலில் தங்குகிறார். 15-ஆம் தேதி காலையில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்த பின்னர், அன்று இரவு ராமராயர்
 
மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். தசாவதாரம் விடியவிடிய நடைபெறுகிறது. 16-ஆம் தேதி நள்ளிரவு பூப்பல்லக்கும், 17-ஆம் தேதி காலையில் அழகர்மலைக்கு புறப்பாடும் நடைபெறுகிறது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை முன்னிட்டு ஆழ்வார்புரம் பகுதியில் தாற்காலிகப் பாலம், மண்டகப்படி அமையும் இடங்கள் சீரமைக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு வருகின்றன. ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்பதால், சிமிண்ட் தொட்டி கட்டி அதில் நீரை நிரப்பி அழகர் அதில் இறங்குவதற்கான ஏற்பாடும் நடந்து வருகிறது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.