திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் மாத பௌர்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
இக் கோயிலின் கார்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தைக் காண வியாழக்கிழமை பிற்பகலே பல ஆயிரம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர்.
இவர்கள் வியாழக்கிழமை முதலே திருவண்ணாமலையில் கிரிவலம் வரத் தொடங்கினர்.
தொடர்ந்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வந்து, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.
3-ஆவது நாளாக கிரிவலம்: டிசம்பர் மாதத்துக்கான பௌர்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் சனிக்கிழமை மாலை 6.13 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். சனிக்கிழமை காலை 9 மணிக்குப் பிறகு கிரிவலம் வந்த பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen