வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா.16.08.2018. இன்று வியாழக்கிழமை முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
தொடர்ந்தும் 25 தினங்கள் இடம்பெறவுள்ள ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-25 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்- 05 மணிக்குத் திருமஞ்சத் திருவிழாவும், அடுத்த மாதம்-01 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் -06 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 02 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-06 மணிக்கு கார்த்திகை உற்சவமும், 03 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-07 மணிக்கு சூர்யோற்சவமும், 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல்-05 மணிக்கு கைலாசவாகன
உற்சவமும், 05 ஆம் திகதி புதன்கிழமை காலை-07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல்-05 மணிக்கு வேல் விமான உற்சவமும், 06 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-07 மணிக்கு தண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம்
பிற்பகல்-05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 07 ஆம் திகதி பிற்பகல்-05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை-07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை காலை-07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.அன்றைய தினம் மாலை கொடியிறக்க வைபவம் இடம்பெறும். வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நல்லூர்க் கந்தன் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான வசதிகளை வழமை போல யாழ் மாநகரசபை ஏற்பாடு செய்துள்ளது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்.
12 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராகவும், இலங்கையின் வடபகுதியிலுள்ள தமிழர்களின் இராசதானியாகவும்
விளங்கியது நல்லூர்.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு 'குருக்கள் வளவு' என்ற காணியில் 884 ஆம் ஆண்டளவில் கட்டியதாக 'கைலாய மாலை' எனும் நூல் கூறுகிறது.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைப் புவனேகபாகு தான் கட்டினான் என்பதற்கு ஆதாரமாக கைலாயமாலையில் வெளிவந்த பின்வரும் செய்யுளைக்
குறிப்பிடலாம்.
"இலகிய சகாத்த மெண்ணுற் றெழுபதா மாண்ட தெல்லை அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகும் யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும்
புரிவித்தானே.”
ஆதியில் ஆலயத்தை நிர்மாணித்த ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு தற்போதும் மஹோற்சவ காலங்களில் கட்டியம் கூறும் போது ஆசிர்வதிக்கப்படுகின்றார்.போர்த்துக்கீசரால்
இடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை இரகுநாத மாப்பாண முதலியார் 1734 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கற்களினாலும், செங்கற்களினாலும் மீளவும் அமைத்தார். இது தொடர்பில்'யாழ்ப்பாண வைபவ மாலை' நூலிலும் கூறப்பட்டுள்ளது.
திருவிழா உபயகாரர்களின் வருகையையோ,நாட்டின் தலைவர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் வருகையையோ எதிர்பார்த்து ஆலயத்தின் வழமையான பூசைகள் மற்றும் விசேட உற்சவங்களை பிற்போடும் வழக்கம் இந்தக் கோயிலில் அறவே கிடையாது. ஈழத்தின் தலை சிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும், அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக்கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், திருவீதியும் திகழ்கின்றன.
ஆலயத்தைச் சூழ இலங்கையிலேயே ஒரேயொரு சைவ ஆதீனமாகத் திகழும் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லூர் அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், நல்லூர் நடராஜர் பரமேஸ்வரன் மணி மண்டபம் ஆகிய பல மடங்களும், மண்டபங்களும்
காணப்படுகின்றன.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen