எங்கள் தைபொங்கல் பாரம்பரியத்தை மறக்கலாமா

திரும்பும் திசையெல்லாம் கரும்பும், மஞ்சள் குலைகளும் குவிந்து கிடப்பதை பார்த்தாலே பொங்கலின் இனிமை இதயத்தில் பொங்குகிறது.
பொங்கல் பாரம்பரியத்தை மறக்கலாமா?
தை மகளை வரவேற்க தமிழர்கள் தயாராகிவிட்டார்கள். திரும்பும் திசையெல்லாம் கரும்பும், மஞ்சள் குலைகளும் குவிந்து கிடப்பதை பார்த்தாலே பொங்கலின் இனிமை இதயத்தில் பொங்குகிறது. 
தை பொங்கல்
வார்த்தையால் வர்ணிக்கும் சாதாரண விழாவா? தொண்ணூறு நாட்களுக்கு முன்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய மூன்றே நிமிடங்களில் மொத்த டிக்கெட்டும் விற்றுப்போனதே! லட்சக்கணக்கான மக்கள் பஸ்களில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே! அது ஏன்? 
பொங்கல் என்றாலே உள்ளமெல்லாம் துள்ளுகிறது! சுண்டி இழுக்கிறது. அந்த நாளை நினைத்தாலே விவரிக்க முடியாத சந்தோசம் பொங்குகிறது. 
ஒருவாரத்துக்கு முன்பே அடுப்புக்கட்டி தயாராகி விடும். மண்ணை குழைத்து குத்துச்சட்டியில் நிரப்பி தட்டினால் வரும் உருண்டை வடிவ கட்டிகளை வெயிலில் உலரவிடுவார்கள். காய்ந்ததும் அதற்கு வெள்ளை அடிப்பார்கள். வெள்ளை அடிப்பது என்றாலே இந்த கால பிள்ளைகளுக்கு தெரிவதும் சந்தேகமே? வெள்ளை பெயிண்டுதானே என்றுதான் 
கேட்பார்கள்!
சுடப்பட்ட சுண்ணாம்பு சிப்பிகளை (கிளிஞ்சல்கள்) ஊற வைத்தால் (தண்ணீர் ஊற்றி கொதிக்க வைப்பது) சுண்ணாம்பு தயாராகிவிடும்.  அதை தண்ணீரில் கரைத்து பெயிண்ட் அடிப்பது போல் அடிப்பார்கள். பின்னர் காவி வண்ணக்கோடுகள் போடப்படும். வீடுகளும் வெள்ளையடிக்கப்பட்டு, பழைய பொருட்களை கழித்து சுத்தமாக பளிச்சென்று 
காட்சியளிக்கும். 
முதல் நாள் இரவு ஒவ்வொரு வீட்டிலும் தூங்காத இரவாகத்தான் இருக்கும். பெண்கள் தங்கள் வீடுகளின் முன்பும் தெருக்களிலும் பிரமாண்டமான வண்ண கோலம் போடுவார்கள்.  பொங்கல் வைக்கப்படும் இடம் சாணம் மெழுகப்பட்டு மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருக்கும். 
அதிகாலை 3 மணியளவில் குளியலுக்கு தயாராவார்கள். தை பனி உடல் முழுவதையும் தைதை என ஆட வைப்பதாகும். ஆனால் உற்சாக மூடில் பனியாவது....? குளிராவது...? எதுவும் உடலில் உறைப்பதில்லை! குளித்துவிட்டு புத்தாடை அணிவது சந்தோசம். வித விதமான ஆடை மீது ஆர்வம் இருந்தாலும் அன்று மட்டும் பாரம்பரிய உடையில்தான் கலக்குவார்கள். 
பழக்கப்படாத உடைகளாக இருப்பதால் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி இடுப்பு ஒத்துழைக்க மறுக்கத்தான் செய்யும். ஆனாலும் சிரமப்பட்டு கட்டிக் கொள்வார்கள். 
ஆண்கள் பட்டு வேட்டி-சட்டை, பெண்கள் பட்டு சேலை, இளம் பெண்கள் பட்டு பாவாடை-தாவணி! அதுவே ஒரு தனி அழகு! ரவிக்கையின் வடிவமைப்பு... மேட்சிங் கச்சிதம்... நேர்த்தியாக கட்டப்பட்ட புடவை... சான்சே இல்லை...!தங்க சிலை ஒன்று உயிர்பெற்று நடமாடுதோ எனலாம்.
 அதனால்தான் கவிஞர்களின் கற்பனை ஊற்றெடுத்தது. பாடல்களும் பிறந்தது. பார்த்தவர்கள், பழகியவர்கள் கூட பாரம்பரிய உடையில் கம்பீரமாக தெரிவார்கள். அந்த அழகும் வசீகரமும் இதயத்தில் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தும். ஐம்பதை கடந்த தம்பதிகள் கூட ஒருவருக்கொருவர் வர்ணித்து முகம்சிவந்து வெட்கப்படுவதுண்டு. 
மகிழ்ச்சி களைகட்ட வாசல்முன்பு பொங்கல் வைக்கும் இடத்துக்கு வருவார்கள். வாழை இலை போட்டு அதில் மஞ்சள் அல்லது சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். விளக்கேற்றி வெற்றிலை, பாக்கு பழத்துடன் பனம்கிழங்கு, காய்கறிகளையும் படையல் வைப்பார்கள். முழுக்கரும்பையும், மஞ்சள் குலையையும் 
கட்டி வைப்பார்கள். 
புதுமண்பானையில்தான் பொங்கல் வைக்க வேண்டும். பானையை கழுவி சந்தனம், குங்குமம் வைத்து வாய் பகுதியில் மஞ்சள் குலையையும் சுற்றி கட்டுவார்கள். அது கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். தம்பதிகள் இருவரும் பானையை தொட்டு அடுப்பில் வைப்பார்கள்.  பின்னர் சாமி விளக்கில் இருந்து தீபம் எடுத்து அடுப்பை பற்ற வைப்பார்கள். சிறுவர், சிறுமிகள் சுற்றி இருந்து தீ போடுவார்கள். 
பானையில் பாதி அளவுக்கு தான் தண்ணீர் இருக்கும். தண்ணீர் சூடானதும் தேவையான அளவு பச்சரிசியை போடுவார்கள். அதை தொடர்ந்து மளமள என்று போடப்படும் தீயில் சிறிது நேரத்திலேயே பானை பொங்கி வழியும். அப்போது பெண்களின் குலவை சத்தமும், குழந்தைகளின் பொங்கலோ... பொங்கல்... என்ற மகிழ்ச்சி கோஷமும் தெருமுழுவதும் 
எதிரொலிக்கும். 
பொங்கல் தயாரானதும் கற்பூர தீபம் ஏற்றி கிழக்கு திசையில் எழுந்தருளியுள்ள சூரிய பகவானை நேரில் பார்த்து மனம் உருகி வழிபடுவார்கள். இதே போல் எந்நாளும் எங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க வேண்டும். விவசாயத்தை செழிக்க வைத்து எங்களை வளப்படுத்தும் இயற்கை தெய்வங்களே உங்களை நன்றியுடன் வணங்குகிறோம். பிறந்திருக்கும் இந்த ஆண்டும் எங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். 
வருவோரும், போவோரும் ‘அக்கா, பால் பொங்கிருச்சா’...? என்று விசாரித்துக் கொள்வார்கள். சில இடங்களில் பாலையும், தண்ணீரையும் கலந்து பொங்க வைத்து விட்டு பச்சரிசி போட்டு பொங்கும் பழக்கமும் இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் 2 பானைகளில் பொங்கல் வைப்பார்கள். ஒன்று வெண்பொங்கல், மற்றொன்று 
சர்க்கரை பொங்கல். 
வெண் பொங்கலுடன் காய்கறிகள் கலவையை சேர்த்து சாப்பிடும் பழக்கம் பரவலாக உண்டு. அடுத்து தை பொங்கல் அந்த வெண்பொங்கல் சுவை நம்மிடம் இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் கூடி இருந்து அவற்றை சாப்பிட்டு மகிழ்வார்கள். 
இளவட்டங்கள் தெருக்களில் தோரணங்கள் கட்டி ஒலிபெருக்கி அமைத்து பாடல்களை ஒலிபரப்புவார்கள். வடம் இழுத்தல், ஓட்டப்பந்தயம், பாட்டிலில் நீர் நிறைத்தல், கோணி ஓட்டம் என்று பல கிராமிய விளையாட்டுகள் களைகட்டும். 

கிரிக்கெட்டில் டோனி இரட்டை சதம் அடித்தால் கூட கிடைக்காத மகிழ்ச்சி இந்த விளையாட்டுகளில் கிடைக்கும். மொத்த கிராமமும் கூடி நிற்கும். எங்கெங்கோ வாழ்பவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி மகிழும் மகிழ்ச்சி திருவிழா. கூடினால் குதூகலத்துக்கு குறைவிருக்குமா?

மறுநாள் மாட்டுப் பொங்கல். மனிதர்களுக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும்-உதவும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாள். அன்றைய தினம் தொழுவங்கள் கோவிலாகி விடும். மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம்பூசி கழுத்தில் பூமாலை, நெற்றியில் திலகம், கொம்புகளில் பலூன் கட்டி குழந்தை போல் மாடுகளை மகிழ்விப்பார்கள். 

அன்றும் பொங்கல் வைத்து படையலிட்டு மாடுகளுக்கு வழங்கப்படும். 

அதற்கு மறுநாள் காணும் பொங்கல். இது முற்றிலும் உற்சாக பொங்கல். வீடுகளில் இருந்து கரும்பு, உணவுகளை எடுத்துக் கொண்டு தோட்ட பகுதிகளுக்கு செல்வார்கள். அங்கும் கிராமத்து ஜனங்கள் குழுமி இருப்பார்கள். 

கரும்புகளை கடித்து கொண்டு ஓடும் சிறுவர்-சிறுமிகள், இரண்டு பனை மரங்களுக்கு இடையில் அல்லது மரக்கிளைகளில் ஊஞ்சல் கட்டி அதில் பெண்கள் உற்சாகமாக ஆடுவார்கள். ஊஞ்சலை ஓரிருவர் ஆட்டிவிட... உயரத்துக்கு சென்று திரும்புவதும், மரத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிறு கிரீச்... கிரீச் என்று எழுப்பும் ஓசையும், ஊஞ்சலில் ஆடும் பெண்களில் சிலர் பயந்தும், சிலர் மகிழ்ச்சியிலும் எழுப்பும் சத்தமும் ஊஞ்சலிலாடும் பெண்களின் பட்டுப்பாவாடை காற்றில் ஆடுவது பட்டாம்பூச்சி பறப்பதை நினைவு படுத்தும். ஓடி பிடித்து, தொட்டு பிடித்து இளவட்டங்கள் போடும் துள்ளல்! மரங்களில் மறைந்து கண்ணாமூச்சி ஆடும் போது யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் மரத்தின் அந்தப் பக்கம் அவளும், இந்தப் பக்கம் அவனுமாக நின்று காதல் மொழி பேசிக் கொள்வதை நோட்டமிட்டு கேலி செய்து மகிழும் நட்புவட்டாரம்! 

அடேயப்பா.... எவ்வளவு சந்தோசம்! எவ்வளவு பணம் செலவழித்தாலும் கிடைக்காத உண்மையான மனமகிழ்வு. இந்த தை அள்ளிதரும் மகிழ்ச்சி அடுத்த தை வரை மனதில் நிலைத்திருக்குமே!

இன்று.....

இதைத்தான் யுடியூப்பில் பார்த்திருக்கிறேனே என்பார்கள். அந்த அளவுக்கு காலம் மாறிவிட்டது. ஆனால் இது உண்மையல்ல நாம் மாறிவிட்டோம் என்பதுதான் உண்மை.

கோர்ட்டு தடைபோட்டுள்ள ஜல்லிக்கட்டுக்காக மல்லுகட்டுகிறோம். பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை அழிப்பதா? என்று ஆத்திரப்படுகிறோம். நியாயமானதுதான். 

எந்த தடையும் இல்லாத பொங்கல் பாரம்பரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோமே! கடமைக்காக சர்க்கரை பொங்கல் வைத்து பூஜையறையில் வைத்து வழிபட்டு சாப்பிடுகிறோம். முழுநேரமும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூழ்கி கிடக்கிறோம். 

பாரம்பரிய கொண்டாட்டத்தையும் பாரம்பரிய உடையையும் கைவிட்டு வருகிறோமே! நகரத்தில் இதற்கெல்லாம் ஏது வசதி எனலாம்! நினைத்தால் முடியும். 

அபார்ட்மென்டுகளில் வீடு வாசலில், மொட்டை மாடியில் கூடி பொங்கல் வைக்க முடியும். குறைந்த பட்சம் அன்றைய தினத்தில் பாரம்பரிய உடைக்கு மாறலாமே!

நமது பாரம்பரிய உடை என்ன? வேட்டி. 

நாம் அனைவரும் வேட்டி உடுத்துகிறோமா? திருமணத்தன்று மட்டும் வேட்டி கட்டியவர்கள்தான் இன்று நம்மில் பலர் உள்ளனர். வேட்டியை மறந்து போனது நியாயமா? நமது பாரம்பரியத்தைத் தொலைத்து விட்டு, பண்டிகை கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. குறைந்தபட்சம் தைப் பொங்கல் திருநாளிலாவது ஒவ்வொரு ஆண் மகனும் வேட்டி உடுத்த வேண்டும். நம் பாரம்பரியத்தை போற்றுவதற்கு அது ஒன்றுதான் வழி. 

வேட்டி உடுத்தாமல் கொண்டாடப்படும் பொங்கல் உண்மையான பொங்கல் இல்லை என்பதை ஒவ்வொரு தமிழனும் மனதார உணர வேண்டும். எனவே இன்றே, இந்த நிமிடமே சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.... இந்த ஆண்டு தைப் பொங்கல் தினத்தை வேட்டி அணிந்துதான் கொண்டாடுவேன் என்று. வேட்டியில் தொடங்கும் நமது பாரம்பரியம் அடுத்தடுத்து நமது வேர்களை அடையாளம் காண உதவும். தமிழ் இனம் தனி இனம் என்பதை உறுதிபடுத்த வேட்டியை கையில் எடுங்கள்.

ஆனால் வேட்டி உடுத்துவதை கேவலமாக நினைக்கும் அளவுக்கு நாம் மாறி வருகிறோம். இந்த நிலையை இனியும் அனுமதிக்காதீர்கள். தமிழினத்தின் அடையாளமாக பரம்பரையாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் விழா இந்த சமுதாயம் இருக்கும் வரை மங்காமல் மறையாமல் கட்டிக்காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. 

அதற்காக மிகப்பெரிய தியாகம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கடமைக்காக பொங்கல் வேண்டாம். நம் உயிரோடும் உறவோடும் கலந்த அந்த பக்தியும், பாரம்பரியமும் மிக்க பொங்கலோடு நம் உணர்வும் பொங்கவேண்டும். அதுதான் உண்மையான பொங்கல். 

இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும். தமிழினத்தின் பெருமை எங்கும் பரவட்டும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.