சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள
யாழ்.நாவற்குழியில் ஏ- 9 பிரதான வீதியில் சிவபூமி எனும் பெயரிலான திருவாசக அரண்மனை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்துப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருவாசக அரண்மனையில் வேறெங்கும் காண முடியாத பல்வேறு தனித்துவச் சிறப்புக்கள் உள்ளடங்கியுள்ளன.
திருவாசக அரண்மனையின் மூலவராகத் சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. சிவதெட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை நான்கரை அடி உயரம் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இந்தக் கோயிலில் வானுயர்ந்த ஐந்தடுக்கு விமானத்தில் சிவலிங்கங்கள் கவின் மிளிரக் காட்சி தருகின்றன.
சிவதெட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை முன்பாக 21 அடி உயரத்தில் அழகிய கருங்கர் தேர் பல்வேறு கலையம்சங்களுடன் கூடிய வகையில் அழகுற உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த தேருக்கு மேலாகச் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மற்றும் திருவாசகம் அருளிய மாணிக்கவாசக நாயனார் ஆகியோரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தேரின் முன்பாக கருங்கல்லான பெரிய
நந்தி அமைந்துள்ளது.
திருவாசக அரண்மனைக்குச் செல்லும் அனைத்து அடியவர்களதும் கண்கள் முதலில் கண்டு வழிபடும் வகையில் இந்தத் தெய்வீகக் காட்சிகள் அமைந்துள்ளன.
சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலின் இரு மருங்கிலும் மணிவாசகரால் அருளப்பட்ட 51 திருப்பதிகங்களை உள்ளடக்கிய 658 திருவாசகப் பாடல்களும் கருங்கல்லில் கையால் உளி கொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை வேறெங்கும் காண
முடியாத அற்புதக் காட்சியாகும்.
அதுமாத்திரமன்றி கருங்கல்லில் உருவாக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள் அரண்மனைப் பிரகாரத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதுடன் மேற்படி சிவலிங்கங்களுக்கு அடியவர்கள் தங்களின் கரங்களால் அபிஷேகம் செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவலிங்கங்கள் ஒவ்வொன்றும் மூன்றடி உயரமும், இரண்டரை
அடி விட்டமும் கொண்டவை.
கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த ஆனந்தன் வினோத் என்ற இளைஞர் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் தனது கையால் உளி கொண்டு செதுக்கியுள்ளார்.இந்தத் திருப்பணி முழுவதும் நிறைவேறுவதற்குச் சுமார் ஒன்றரை வருட காலங்கள் சென்றுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞரான புருசோத்தமனும் அவரது குழுவினரும் திருவாசக அரண்மனை வளாகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள 21 அடி உயரத்திலான கருங்கற் தேர், சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலை மற்றும்
சிற்பங்களையும் நிறுவியுள்ளார்.
யாழ்.ஊரெழுவைச் சேர்ந்த சண்முகநாதன் குழுவினர் திருவாசக அரண்மனைக் கட்டடத்துக்கான நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சிவபூமி-திருவாசக அரண்மனை
அமைவதற்கு வித்திட்ட காரணி
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் திருவெண்ணாமலை கோயில் வீதியில் இடம்பெற்ற திருமுறை மாநாட்டில் பங்கெடுத்துச் சிறப்புரையாற்றிவிட்டுத் திரும்பிய போது சித்தரொருவரைச் சந்தித்தார். அவர் கலாநிதி ஆறு. திருமுருகனை நோக்கி 'ஈழத்தில் திருவாசகத்தைக் காப்பாற்றுங்கள்... திருவாசகம் உங்களைக் காப்பாற்றும்' எனக் கூறினார்.
அத்துடன் திருவாசகத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சியைத் தொடங்கு...எல்லாம் நன்றாக நிறைவேறும் எனவும் குறிப்பிட்ட சித்தர் கூறினார். சித்தரின் கூற்றைத் தெய்வ வாக்காகக் கருதிய கலாநிதி ஆறு.திருமுருகனின் எண்ணத்தில் ஒளிபெற்றதே இந்தத் திருவாசக அரண்மனை.
திருவாசக அரண்மனை உருவாகுவதற்கு உதவியோர்
புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வாழும் தெல்லிப்பழையைச் சேர்ந்த இதய வைத்திய நிபுணர் மனமோகன் மற்றும் அவரது பாரியாரான வைத்தியகலாநிதி- சிவகெளரி ஆகியோர் திருவாசக அரண்மனை நிர்மாணிப்பதற்கான நிலத்தையும், நிதியையும் வழங்கியுள்ளனர்.
புலம்பெயர்ந்து அமெரிக்கா நாட்டில் வாழும் அராலியைச் சேர்ந்த பொறியியலாளரான அரவிந்தன் கைலாசபிள்ளை குடும்பத்தினர் கருங்கற் தேர் நிர்மாணிப்பதற்கான நிதியை வழங்கியுள்ளதுடன், கருங்கல்லில் திருவாசகம் முழுவதையும் பதிப்பிப்பதற்கு இதய வைத்திய நிபுணர் மனமோகனின் பெரும் நிதிப் பங்களிப்புடன் இலண்டன், கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து
வாழும் அன்பர்களின் நிதியுதவி மற்றும் கலாநிதி- ஆறு. திருமுருகன் வெளிநாடுகளுக்குச் சொற்பொழிவு ஆற்றுவதற்குச் சென்ற போது கிடைத்த நிதி அன்பளிப்புக்கள் என்பன உள்ளடங்கியுள்ளன.
சிவபூமி- திருவாசக அரண்மனைக்குச் சிறப்புச் சேர்த்துள்ள விடயங்கள்
திருவாசக அரண்மனைக்கு மென்மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் சிவபுராணம் சிங்களம், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிபெயர்ப்புக்கள் கருங்கல்லில் கையால் உளிகொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் திருவாசக ஆராய்ச்சி நூல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூல் நிலையத்தில் திருவாசகம் தொடர்பாக வெளிவந்த அனைத்து நூல்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
திருவாசக ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் தங்கி நின்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கேற்ற விடுதியறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாசக அரண்மனைத் திறப்பு விழாUntitled-1.jpg
யாழ்ப்பாணம் நாவற்குழியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமி- திருவாசக அரண்மனை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-04 மணிக்குத் திறப்பு விழாக் காண்கிறது. மேலும் இந்த வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை திங்கட்கிழமை காலை-09.45 மணி முதல் முற்பகல-10.45 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறும்.
பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக விளங்கும் திருவாசகம் பக்திச் சுவை நனி சொட்டும் வகையில் மாணிக்கவாசக சுவாமிகளால் இயற்றப்பட்டது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. இதனால் தான் தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்திற்கும் தனி இடமுண்டு.
இவ்வாறான பல்வேறு சிறப்புக்கள் பொருந்திய திருவாசகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு முதன்முதலாக இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான திருவாசக அரண்மனை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை யாழ்ப்பாண மக்கள் திருவாசகத்திற்கு வழங்கிவரும் உயர் கெளரவத்திற்குத் தக்க சான்று என்றால் அது மிகையில்லை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen