பலன்தரும் பரிகாரத் தலம்: பகைவர்களை வெல்லலாம்

 22 Jun 2012 வங்கீசபுரியை ஆண்டு வந்தான் அசுரன் சூலபாணி. சிவபெருமானிடம் அரும்பெரும் வரம் பல பெற்ற அவன், தன்னைக் காட்டிலும் அதிக வலிமையுடன் தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என எண்ணி தவம் இயற்றினான். அதன் பலனாக அவனுக்கு வச்சிரதந்தன் பிறந்தான். இவ்வாறு பிறக்கும்போதே வரம் பல பெற்று அதிக சக்திகளுடன் பிறந்த வச்சிரதந்தன், தன் நாட்டிலும் காட்டிலும் இருந்த நல்லோர்க்கு தீமைகளைச் செய்யலானான். அவனை யாராலும் வெல்ல முடியவில்லை.
 முனிவர்கள் பிரம்மனிடம் முறையிட, அவர் தேவேந்திரனை அனுப்பி வைத்தார். அவனும் வச்சிரதந்தனை வெல்ல இயலாமல் அன்னை பராசக்தியை வேண்டினான். காஞ்சி நகருக்கு வந்து, காமாட்சி அம்மனிடம் முறையிட்டான். அவன் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த அம்மன், அசுரனை அழிக்க துர்க்கையை அனுப்பி வைத்தாள். வங்கீசபுரிக்கு அருகே வராகமலையில் இறங்கி துர்க்கையும் வச்சிரதந்தனுடன் போரிட்டாள். ஆனால் அவன் தலை துண்டிக்கப்பட்டு கீழே விழுந்ததும், மீண்டும் முளைத்தது... சிங்கம், புலி, கரடி, காட்டெருமை என பல்வேறு தலைகளுடன் மீண்டும் மீண்டும் உருவம் எடுத்தான். இதனால் அவனை அழிக்க வழி தெரியாது தோல்வியுடன் திரும்பிய துர்க்கை அன்னை ஸ்ரீகாமாட்சியிடம் முறையிட்டாள்.
 கோபமடைந்த காமாட்சி, வங்கீசபுரி வந்து வச்சிரதந்தனுடன் போர் புரிந்தாள். அவனின் தலையைக் கொய்து கீழே எறியும் போதெல்லாம், அவனும் பல்வேறு விலங்குகளின் தலைகளுடன் தோன்றிப் போர் புரிந்தான். ஒரு கட்டத்தில் சலிப்புற்ற காமாட்சி, வச்சிரதந்தன் தலை துண்டிக்கப்பட்டு கீழே விழுந்தவுடன் காலால் அதை மிதித்து நசுக்கிவிடும்படி துர்க்கையிடம் கூறினாள். துர்க்கையும் அவ்வாறே செய்ய, மீண்டும் தலை எடுக்க முடியாமல் வச்சிரதந்தன் மாண்டுபோனான். எல்லோரும் நிம்மதி அடைந்தார்கள்.
 இவ்வாறு, அசுரனது தலையை மிதித்த இடம் தலையாறு எனவும், மூளை சிதறிப் போய் விழுந்த இடம் மூளையாறு எனவும், குலைகாய் ஈரல் விழுந்த இடம் குலையூத்து எனவும், உடல் குறுக்காக விழுந்த இடம் குறுக்குமலை எனவும் பெயர் பெற்றன. இன்றும் இந்தப் பெயர்கள் வழக்கத்தில் உள்ளன.
  எல்லோரும் நிம்மதி அடைந்தாலும், அன்னை காமாட்சி மட்டும் நிம்மதி இழந்தாள். அசுரனைக் கொன்ற பாபம் போக, வேகவதி நதிக் கரையில் தவம் மேற்கொண்டாள். இவ்வாறு அம்மன் தலையாறு மூங்கில் காடுகளில் தவமிருந்த இடத்தில் சந்நிதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது "அம்மா மச்சு' எனப்படுகிறது.
  வங்கீசபுரி பகுதி பின்னாளில் தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாக அளிக்கப்பட்டதால் தெய்வதானப்பதி எனப்பட்டது. இதுவே மருவி தேவதானம் என்றாகி, தேவதானப்பட்டி ஆனது.
 இங்கே பாளையங்களின் ஆட்சியாக பூசாரி நாயக்கரின் ஜமீன் ஆட்சி இருந்தது. ஜமீனில் மாடு மேய்க்கும் ஒருவன், மூங்கில் புதர்களுக்கு அருகே தன் மாட்டுக் கூட்டத்தில் இருந்து ஒரு மாடு மட்டும் தனியே சென்று திரும்புவதைக் கண்டான்.
 ஒரு நாள் தொடர்ந்து சென்று கண்காணித்தான். கன்று ஈனாத அந்த மாட்டின் மடியில் தெய்வீகக் கன்னியொருத்தி பால் அருந்துவது கண்டு திடுக்கிட்டான். அதேநேரம் அவன் தன் பார்வையையும் இழந்தான்.
 இந்த விவரத்தை ஓடிச் சென்று ஜமீன்தாரிடம் கூறினான். இது தெய்வக் குற்றம் என்று கருதிய அவர், பூஜை செய்ய உத்தரவிட்டார். அப்போது அம்மன் அசரீரி வாக்காக ஒலித்தாள்.
  "இங்கே முன்னொரு காலத்தில் வச்சிரதந்தனை அழித்து அமைதிக்காக தவமிருக்கிறேன். என்னைக் கண்ட மாடு மேய்ப்பவன் ஒளி தாங்காது பார்வை இழந்தான். இன்னும் ஒரு வாரத்தில் பெருமழை பெய்து ஆற்றில் வெள்ளம் வரும். அதில், மிதந்து வரும் மூங்கில் பெட்டியில் நான் வருவேன். ஓர் இடத்தில் மூங்கில் புதர் கொண்டு அணையிட்டு பெட்டி தடைபட்டு நிற்கும். அதை எடுத்து வைத்து வழிபட்டால் நலம் பல உண்டாகும். கன்னித் தெய்வமான என்னருகில் இல்லறத்தார் குடியிருக்கக் கூடாது. நெய்விளக்கு தவிர வேறு விளக்குகளை ஏற்றக் கூடாது. தேங்காய், பழம் நைவேத்தியம் செய்யவேண்டும். அன்ன நைவேத்தியம் கூடாது' என்றது அசரீரி.
  அதன்படி எல்லாம் நடந்தன. ஆற்றில் மிதந்துவந்த பெட்டியைத் தொட்டதும் மாடு மேய்ப்பவனின் பார்வை திரும்பக் கிடைத்தது. காக்கும் தெய்வம் காமாட்சியம்மனை மக்கள் வணங்கத் தொடங்கினர். காராம்பசுவின் பாலருந்திய அம்மன் உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப் பழமும்தான் விரும்புகிறார் என்று தெளிவு கொண்டனர் பக்
  தர்கள். அதனால், அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப் படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை. பூசை செய்த பின்னர்தான் தேங்காய் உடைக்கப்படும். மேலும் இக்கோயிலில் அன்னம் நிவேதனம் செய்யப் படுவதில்லை.
  கோயில் கதவுக்கு பூஜை: மூங்கில் அணையிட்டு நிறுத்தியதால் மூங்கிலணை காமாட்சி எனப்படுகிறார். அம்மனின் வாக்குப்படி பெட்டி எடுத்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. காமாட்சிப் புல்லால் வேயப்பட்ட குச்சுவீட்டுக்குள் (குடில்) அம்மன் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை கதவு பூட்டப்பட்ட பின் திறக்கப்படவேயில்லை. எனவே அடைத்த கதவுக்கு முன்பு நாக பீடம் அமைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. கோயிலின் வடக்கு பிராகாரத்தில் உள்ள மேடையில் இருந்தபடி கோயிலின் குச்சுவீடு கலசத்தை (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் செய்யலாம்.
  காமக்காள் திவசம்: பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி ஜமீன்தார் மனைவி காமக்காள். அவர் தன் ஒரே மகன் பொம்முலிங்கசாமியுடன் காமக்காள் அரண்மனை கட்டடத்தில் வசித்துவந்தார். காமக்காள் தன் பக்தியின் சக்தியால் அம்மனுடன் நேரடியாகப் பேசும் பேறு பெற்றாள். ஒரு முறை, தன் அன்னையைப் போல் தானும் அம்மனைக் காண வேண்டும் என்ற ஆசை பொம்முலிங்கசாமிக்கு எழுந்தது. அம்மாவிடம் நச்சரித்தான். அன்று இரவு அம்மனிடன் தன் மகனின் ஆசையைக் கூறினாள் காமக்காள். ஆனால் அம்மனோ காமக்காளைத் தவிர யார் கண்டாலும் இறந்துவிடுவார்கள் என்றாள். இதைக் கூறியும் பிடிவாதம் செய்த மகனை வேறு வழியின்றி இரவு அம்மனைக் காண அழைத்துச் சென்றாள். அம்மனின் தெய்வீக ஒளி காணப்பெறாத மகன் அங்கேயே இறந்து பட்டான். வேதனையில் அழுது புலம்பினாள் காமக்காள். தனக்கு ஈமக்கடன் செய்ய இருந்த ஒரே மகனை பறித்துக் கொண்டு போனாயே என வருந்தினாள். அவளைத் தேற்றிய அன்னை தானே மகனாக இருந்து அவளுக்குக் கடன் செய்வேன் என்று உறுதியளித்தாள். அவ்வாறே தை மாத ரதசப்தமி அன்று காமக்காள் இறப்புக்குப் பின் அம்மனே தகுந்தவர்களுக்குத் தெரிவித்து தானே இறுதிக்கடன், திவசம் முதலியவை செய்தாளாம்.
 விழாக்கள்: ஆண்டுதோறும் தை ரத சப்தமி அன்று கோயிலில் காமக்காள் திவசம் கொடுக்கப்படுகிறது. அன்றே கோயிலின் ஆண்டுத் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்படும். தொடர்ந்து எட்டு நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடி மாதங்களில் முதல் மூன்று நாட்கள் ஆடிப் பள்ளயத் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை வருடப் பிறப்பு, விஜயதசமி, கார்த்திகைத் திருநாள், தைப் பொங்கல் ஆகிய விழாக் காலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
 இங்கே நெய்விளக்கு மட்டுமே ஏற்றப்படுகிறது. காணிக்கையாகப் பெறப்படும் நெய் இங்குள்ள மண்பானைகளில் ஊற்றி வைக்கப்படுகின்றன. இந்த நெய்யை எறும்பு, ஈ, வண்டு எதுவும் மொய்ப்பதில்லை.
 திருவிழாக்காலங்களில் சேகரிக்கப்படும் நெய், தேவதானப்பட்டியைச் சுற்றிலுமுள்ள சில கோயில்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆடு, மாடு, கோழி பலியிடுவது கிடையாது. பொங்கல் வைக்கும் பழக்கமும் இல்லை.
  காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைப் போன்றே இங்கும் பூசை மண்டபத்தின் முன் கெüளி சின்னம் (பல்லி) பொறிக்கப்பட்டுள்ளது. இங்கே கெüளி குறி கேட்க பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.
  பலன்கள்: பகைவர்களை வெல்லும் சக்தியை காமாட்சியம்மன் அளிப்பாள். மேலும், திருமண வரம், குழந்தை வரம், தொழில் வளர்ச்சி, மன அமைதி ஆகியவை கிடைக்கப் பெறலாம். நெய் வாங்கி ஊற்றுதலை நேர்த்திக் கடனாகச் செய்கிறார்கள் பக்தர்கள்.
  அமைவிடம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அல்லது வத்தலக்குண்டு அருகில் தேவதானப்பட்டியிலிருந்து 2 கி.மீ. தொலைவு. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கோயில் செயல்பட்டு வருகிறது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.