குறை தீர்க்கும் குருந்தமலை குமரன்

 22 Jun 2012 12
கொங்கு நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் சிலர்... சேர நாட்டில் மிளகு, இலவங்கம், கிராம்பு ஆகியவற்றை வாங்கி மூட்டைகளாகக் கட்டி பொதி மாடுகளில் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக சென்றனர். வழியில் குருந்தமலை அடிவாரத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். அப்போது அவர்களிடம் வந்த சிறுவன் ஒருவன், ""இவை என்ன மூட்டைகள்?'' என்று கேட்க, சிறுவன்தானே என்ற அலட்சியத்தில் "தவிட்டு மூட்டைகள்' என்றனர் வியாபாரிகள்.
மறுநாள் அவர்கள் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க, அனைத்தும் தவிட்டு மூட்டைகளாகவே மாறியிருந்தன. அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் முருகனே சிறுவன் வடிவில் வந்தான் என்பதை உணர்ந்து குருந்தமலை மீது வீற்றிருந்த குமரனை வேண்டினர்.
உடனே அந்த மூட்டைகள் அனைத்தும் மிளகு, இலவங்கம், கிராம்பு மூட்டைகளாக மாறின. இப்படி வியாபாரிகளை சோதித்த குமரன், குருந்தமலை மீது குழந்தை வேலாயுத சுவாமியாக குடிகொண்டுள்ளார்.
குருந்த மலை: சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் சோலைகள் நிறைந்த அமைதியான சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 750 வருடங்களுக்கு முன்னர் உருவான கோயில். குமரனுக்கு குருந்த மரங்கள் மிகவும் உகப்பானவை. இம்மலையில் குருந்த மரங்கள் அதிகமாக இருந்ததால் "குருந்தமலை' என்றாயிற்று; அகத்தியருக்கு முருகன் குருவாக இருந்து உபதேசித்ததால் குருந்தமலை என்று பெயர் ஏற்பட்டதாகவும் வரலாறு.
கோயில் அமைப்பு: வடக்கு நோக்கியுள்ள ராஜகோபுரம் வழியே கோயிலினுள் நுழைந்தால் வலது பக்கம் கம்பீரமான விநாயகர் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள மண்டபத்தைக் கடந்து சென்றால், வலப்பக்கம் சப்த மாதாக்கள் அருள்புரிகின்றனர்.
இருபுறமும் திருக்கை வேல்கள் பதிக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில் ஏறினால் 18ஆம் படியில் கருப்பண்ண சாமி வீற்றிருக்கிறார். அவரை வணங்கி மேலே சென்றால் இடும்பன் கோயில்.
இதையடுத்து காசி விஸ்வநாதர் கோயில் தீபக் கம்பமும், காசி விஸ்வநாதர் சந்நிதியும் உள்ளன. இடது புறம் நாக சந்நிதி உள்ளது. இதற்கு மேற்கே பஞ்சாட்சர கணபதியும், பஞ்ச லிங்கங்களும், வள்ளி - தெய்வானையுடன் கூடிய கல்யாண சுப்பிரமணியரும் அருள்புரிகின்றனர்.
இதையடுத்து மேலே சென்றால் கிழக்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கிய ஆதிமூலவர் சந்நிதி உள்ளது. இங்குதான் முதலில் புராதனக் கோயில் இருந்துள்ளது. அதையொட்டி அகத்திய லிங்கம் ஒன்றும் உள்ளது. இவற்றை வணங்கிவிட்டுச் செல்லும்போது கொடிமரத்துடன் கூடிய மூலவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்குதான் குழந்தை வேலாயுத சுவாமி அருள்புரிகிறார். தினமும் காலை குழந்தை வடிவில் காட்சி தரும் குமரன், மாலையில் முதியவர் தோற்றத்தில் அருள்புரிகிறான்.
தீர்த்தம்: மலையில் கோயிலைச் சுற்றியும், அடிவாரத்திலும் பல சுனைகள் உள்ளன. இவை அனைத்தும் நலம் தரும் தீர்த்தங்களாகப் பயன்படுகின்றன. மயில் வடிவில் உள்ள மயில் சுனையில் உள்ள நீர்தான் மூலவருக்கு திருமஞ்சனம் செய்யப் பயன்படுகிறது.
கர்ப்பக் கிரகத்திற்கு கீழ்ப்புறம் உள்ள ஆறுமுகச் சுனையானது மூலவரின் திருப்பாதங்களை நனைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அனுமன் சந்நிதி: கீழே அடிவாரத்திற்கு எதிர்ப்புறமுள்ள சிறிய குன்றின் மேல் அனுமன் சந்நிதி உள்ளது. இக்கோயிலின் எதிர்ப்புறம் அனுமந்த தீர்த்தம் இருக்கிறது.
அற்புதம்: ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரியனுடைய பொற்கிரணங்கள் முருகனுடைய திருமேனி மீது விழும் அதிசயம் நடக்கிறது. போகரின் சப்த காண்டத்தில் குருந்தமலை பற்றிய குறிப்பு உள்ளது. இதுதவிர குருந்தமலை மாலை, குருந்தமலை பதிற்றுப்பத்து அந்தாதி, குருந்தமலை பிள்ளைத் தமிழ், கம்பீர விநாயகர் பதிகம், குருந்தமலை திருப்புகழ் உள்பட பல நூல்களும் குருந்தமலையின் புகழைப் பறைசாற்றுகின்றன .
விசேஷங்கள்: ஒவ்வொரு தமிழ் மாத முதல் தேதியிலும் எல்லா மூர்த்தங்களுக்கும் அபிஷேகத்துடன் அன்னதானம் நடக்கிறது. கிருத்திகையில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தைப்பூசப் பெருவிழா 10 நாட்களுக்கு நடக்கிறது.
திருப்பணி: இக்கோயிலின் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிற 29ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
அமைவிடம்: கோவை மாநகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை. இங்கிருந்து மேற்கே வெள்ளியங்காடு செல்லும் வழியில் உள்ளது புங்கம்பாளையம். இங்கிருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது குழந்தை வேலாயுத சுவாமி கோயில்.
தவிட்டு மூட்டைகளாக மாற்றி திருவிளையாடல் நடத்திய குமரனை வழிபட்டால் நமது துன்பங்களும் தவிடு பொடியாகுமன்றோ

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.