மதுரை மீனாட்சி கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம்

 : 

(18/06/2012
மதுரை, ஜூன் 18: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை ஆனி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகின்றது.
இத் திருநாள்களில் உபய திருக்கல்யாணம், தங்கரத உலா மற்றும் வைரக் கிரீடம், தங்கக் கவசம் சாத்துப்படி நடத்திட இயலாது என, கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை ஆணையர் பொ. ஜெயராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆனி ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு, ஜூலை 3-ம் தேதி இரவு நடைபெறும் ஆனி முப்பழ பூஜையின்போது, சுவாமி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் புறப்பாடாகின்றனர். வரும் 25-ம் தேதி ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணியளவில் அருள்மிகு நடராஜர், அருள்மிகு சிவகாமி அம்மனுக்கு, சுவாமி கோவில் 6 கால் பீடத்திலும், இதர 4 சபை நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன்களுக்கு, சுவாமி கோவில் 100 கால் மண்டபத்திலும் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதற்கு, அபிஷேக திரவியங்கள் மற்றும் பூஜைப் பொருள்களை பொதுமக்கள் திருக்கோவிலில் வழங்கி இறையருள் பெறலாம்.
ஜூலை 3-ம் தேதி மாலை 6.30 மணியளவில் அருணகிரிநாதர் நான்கு ஆவணி மூல வீதிகளிலும் புறப்பாடாகிறார். அன்று இரவு 7.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் சித்திரை வீதி புறப்பாடும் நடைபெறும்.
மேற்படி உற்சவ நாள்களில் இத் திருக்கோவிலின் சார்பாகவோ அல்லது வேறு எந்தவிதத்திலுமோ, உபய திருக்கல்யாணம், தங்க ரத உலா மற்றும் வைரக் கிரீடம், தங்கக் கவசம் சாத்துப்படி ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.