தமிழர்களிடம் தொடரும் அவுஸ்திரேலியக் கனவும் ஆபத்துக்களும்

 
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
வடக்கு கிழக்கில், கல்குடா, திருகோணமலை மற்றும் வாழைச்சேனைக் கடற்பரப்பினூடாகவும், மேற்குப் பகுதியில் காலி, நீர்கொழும்பு கடற்பகுதியிலிருந்தும் தமது பயணத்தை சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்கின்றனர்.
இலங்கையில் முப்பது ஆண்டு காலமாக தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும், புகலிடம் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றமை சற்றே அவதானிக்கப்பட வேணடியது அவசியமாகின்றது.
இதற்கான காரணம் உள்நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய நிரந்தர தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதே ஆகும்.
எனினும், யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கழிந்த பின்பே புகலிடக் கோரிக்கையாளர்களின் சட்டவிரோத பயணங்கள் அதிகரித்துள்ளன. இனப்பிரச்சினை காலத்தில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த சில குடும்பங்கள் அண்டை நாடான இந்தியாவுக்கு புகலிடம் தேடிச் சென்றுள்ளனர்.
ஆனால், தற்போது அவுஸ்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கடந்த ஆண்டில் 211 புகலிடக் கோரிக்கையாளர்கள் மாத்திரமே அவுஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் ஆனால் இந்த ஆண்டில் மாத்திரம் அவ் எண்ணிக்கை ஆறு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அந்த வகையில், இவ்வருடத்தில் மாத்திரம் அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளை நோக்கி பயணமானோரின் எண்ணிக்கை 1500இற்கும் அதிகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சரியான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதேவேளை, இவ்வரும் ஜுன் மற்றும் ஜுலை மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடிச் சென்றுள்ளனர். இவர்களில் 99 சதவீதமானோர்கள் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் என்பதே அங்கு அதிர்ச்சியளிக்கும் விடயம்.
இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 700இற்கும் அதிகமானோர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது இவர்களின் எதிர்கால வாழ்க்கையினை மேலும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இதேவேளை, வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்களிடம் ஆசை வார்த்தைகளைக் காட்டி ஒரு சில மோசடிக் கும்பல் ஆட்சேர்ப்பில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின்றன. அதுவும் அரசியலில் உயர்மட்டத்திலுள்ள அதிகாரிகளே இதற்கு துணை நிற்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் விடயம்.
யுத்தம் நிறைவடைந்த பின் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் மிக விரைவாக பரப்பப்பட்டு வருகின்றன. அத்துடன் அவற்றிற்கெதிரான போராட்டங்களும் அறிக்கைகளும் நமது தமிழ் அரசியல்வாதிகளால் தினம் தினம் செயற்படுத்தப்பட்டாலும் “செவிடன் காதில் சங்கூதினதைப்” போலாகிவிட்டது என்றே கூறலாம் அரசாங்கத்தின் நிலைப்பாடு.
இவ்வாறு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தமிழர்களின் நிலம் மற்றும் தொழில் வளங்களைச் சுரண்டத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வடக்கு கிழக்கில் மொத்தமாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலின் ஒன்றெ இந்த சட்டவிரோத ஆட்கடத்திலின் பின்னணியில் உள்ளது எனலாம்.
அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகளில் ஜனாதிபதியில் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சட்டவிரோத ஆட்கடத்தலின் பின்னணியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அடிக்கடி வடபகுதிக்கு சென்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் அவரது சகாக்களும் இச்செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு கடற்படையினர் துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“நெருப்பில்லாமல் புகையாது” என்பது போல எங்கேயோ இந்த தகவல் வெளிவந்த படியால் தான் ஜனாதிபதியில் புதல்வரின் பெயரும் இதில் அடிபட்டுள்ளது என்பதில் மறுப்பதற்கில்லை. காரணம் வடபகுதியில் சிங்களவர்களை விரைவாகக் குடியமர்த்தும் மகிந்த சிந்தனையின் ஒரு பகுதியாகக் கூட இது இருக்கலாம்.
வன்னியில் இராணுவக் கட்டுப்பாட்டில் வாழ்வாதார வசதிகள் இன்றித் தவிக்கும் மக்கள் தமது சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்றாவது தமது பிள்ளைகளைப் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்குத் துடிக்கின்றார்கள்.
அந்தவகையில், கைக்கு கைமாறும் பணத்தினைப் போல பல முகவர்களின் கைமாறி பாதுகாப்பற்ற படகுப் பயணங்களை தொடர்கின்றனர் தமிழர்கள்.
இந்நிலையில், தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களினால் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் மற்றும் கொக்கோஸ் தீவகளிலுள்ள தடுப்பு முகாம்களில் பாரிய இட நெருக்கடி தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த ஆண்டில் கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5100 புகலிடக் கோரிக்கையாளர்கள் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதிக சன நெரிசலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவுஸ்திரேலியத் தகவல்களிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது.
எனினும், கொக்கோஸ் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளிலுள்ளோர் நாளுக்கு நாள் புகலிடம்கோரி வரும் அகதிகளை புறக்கணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இருந்து அகதிகள் வருவதை அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தக் கூடாது என, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பில் லின்ச் த மோர்னிங் ஹெரால்ட் தெரிவித்திருந்தாலும், அகதிகள் வருகின்றமையை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறிருக்கையில், புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
உயிரைப் பணயம் வைத்து பல நாட்கள் பட்டினிப் போராட்டத்தில் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடிச் செல்வோரை மீண்டும் அங்கிருந்து நாடு கடத்துவதால் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக புகலிடம் தேடிப் பயணிப்போர் எண்ணிக்கை குறையுமா என்பது கேள்விக்குறி.
பல லட்சங்கள் கொடுத்து, கஸ்டங்களை மீண்டும் விலைக்கு வாங்கும் இப்படகுப் பயணங்களால் எதிர்நோக்கும் சவால்களையும் பிரச்சினைகளையும் மீண்டும் புகலிடம் கோரி இலங்கையிலிருந்து செல்பவர்கள் எண்ணிப் பார்ப்பார்களா?

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.