தேவாலய வேண்டுதல் குறித்து ஓரினச் சேர்க்கையாளர்கள் கோபம்

10.08.2012.
பிரான்ஸ் நாட்டில் வரும் ஓகஸ்ட் 15 ம் திகதி கத்தோலிக்க தேவாலயங்களில் நாட்டின் நன்மைக்காக Prayer for France என்ற பெயரில் நடைபெறும் இறைவழிபாடு இந்த ஆண்டு புதுப்பிக்கப்படவுள்ளது.
இந்த வழிபாடு ஓரினச் சேர்ககையாளர்களின் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் சட்ட ரீதியான அங்கீகாரத்தை புறக்கணிப்பது போன்று இருப்பதாக ஓரினச் சேர்க்கையாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கத்தோலிக்கத் தேவாலங்கள் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள இடதுசாரி ஆதரவுடைய சோசலிசக் கட்சிக்கு எதிராக உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள், மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை அங்கீகரித்து பொது மக்களின் நன்மைக்காகப் பாடுபடவேண்டும் என்று இறைவனிடம் ஜெபிக்குமாறு தலைமைப் பேராயர் ஆண்டிரி விஞ்சட் - ட்ரோய்ஸ் தேவாலயங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதில் கோரிக்கைகள் என்று குறிப்பிடப்படுவது ஒரே பாலினக் கவர்ச்சியை சட்ட ரீதியாக புறக்கணிப்பதுதான், என்பதை புரிந்து கொண்ட நிக்கோலஸ் கோகெய்ன் தம் எதிர்ப்பை France 24 தொலைக்காட்சி மூலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் முடிவெடுக்க வேண்டிய ஓரினச் சேர்க்கை குறித்த பிரச்னையில் சமயம் தலையிடக்கூடாது. சமயத்திற்கு அரசியலில் இடமே இல்லை என்று கோகெய்ன் ஆத்திரப்பட்டார்.
இந்தப் பிரார்த்தனையை பதிமூன்றாம் லூயி 17ம் நூற்றாண்டில் தொடங்கி வைத்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இம்மரபு மறைந்துவிட்டது. இப்போது மீண்டும் இம்மரபைத் தொடங்கியுள்ளனர்.
தேவாலயத்தின் செய்தித் தொடர்பாளரான மான்சைனர் பெர்னார்ட் போட்வின், தீய சமூகப்பழக்கவழக்கங்களுக்கு எதிராக பொதுமக்களின் அபிப்ராயத்தை வளர்ப்பதே இப்பிரார்த்தனையின் நோக்கம் என்றார்.
மேலும் ஒரே பாலினத்தார் சட்டப்படி இணைந்து வாழும்போது குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தால் அது அந்தக் குழந்தைக்குப் பாதகமாக முடியும். தாய் தந்தையரின் அன்பை அனுபவித்து வளர்வது போன்ற வாழ்க்கை குழந்தைக்கு அமையாது.
தங்களின் உடல் இச்சைக்காக குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்கக்கூடாது என தலைமைப்பேராயர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது LGBT இயக்கத்தாருக்கு கோபமூட்டுவதாக உள்ளது.
தேவாலயம் குடும்பம் என்று வரையறுப்பது இன்றைய காலகட்டத்துக்கு ஒத்துவராது. இன்று இரு பாலினப் பெற்றோர், ஒரே பாலினப் பெற்றோர், தனித்து வாழும் பெற்றோர் என குடும்பங்கள் பலவகை பெற்றோர்களைக் கொண்டனவாக உள்ளன. அனைத்து வகை குடும்பங்களையும் பெற்றோர், குழந்தை நலம் பேணுபவையாக அரசு கருத வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என கோகெய்ன் தெரிவித்தார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.