யாழ். போதனா மருத்துவமனையில் குருதித் தட்டுப்பாடு; தன்னிறைவு காண மக்களுக்கு அழைப்பு

21.09.2012.By.Lovi.யாழ். போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் O+ , O- , மற்றும் A+ ஆகிய குருதிகள் தட்டுப்பாடாகவுள்ளதாகவும், குருதிகளின் இருப்பில் தன்னிறைவு காண்பதற்கு மக்கள் குருதி வழங்கி உதவுமாறும் யாழ். போதனா மருத்துவமனை இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி திருமதி தாரணி குருபரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் எமது ஒன்லைன் உதயனுக்குத் தெரிவிக்கையில்,
யாழ். போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் மாதாந்தம் ஆயிரம் பைந்து குருதி தேவைப்படுகின்றது. குறிப்பாக குருதி வகைகளுள் O+ , O- , மற்றும் A+ ஆகியவற்றின் தேவை அதிகரித்துக் காணப்படுகின்றன. குறித்த குருதி வகைகளில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறித்த குருதி வகைகளில் நேற்றும் 100 பைந்து கொழும்பிலிருந்து பெறப்பட்டுள்ளது. தற்போது முன்னைய காலங்களைவிட குருதிக் கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், எமது வங்கிக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது. எனவே மக்கள் குருதிக் கொடை வழங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும். 

குருதிக் கொடை தொடர்பில் உள்ள ஐயங்களை குருதிக் கொமைடயாளர்களிடம் சென்று கேட்டறிந்து பின்னர் தெளிவான கொடையுணர்வுடன் குருதி வழங்க முன்வர வேண்டும். 

கிளிநொச்சி பொதுமருத்துவமனை, முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மற்றும் பருத்தித்துறை ஆதார மருத்துவமனை என்பவற்றிற்கு எமது வங்கியிலிருந்தே குருதி வழங்கப்படுகின்றது. அதேநேரம், தற்போது அங்கும் குருதி பெறப்படுகின்ற போதும், போதியளவு குருதி தேவையை நிறைவு செய்ய முடியாதுள்ளது. 

எனவே, 18 வயது முதல் 60 வயது வரையான நல்ல தேகாரோக்கியம் மிக்கவர்கள் குருதிக் கொடையளிப்பதன் மூலம், எமது இரத்த வங்கி தன்னிறைவு காண முடியும். 

அத்துடன், குருதி வழங்குமாறு நாம் எவரையும் வற்புறுத்துவது கிடையாது. அறுவைச் சிகிச்சைகளின் போதோ அல்லது எமது வங்கியினால் குருதி வழங்கப்படும் சந்தர்ப்பத்திலோ நாம் நோயாளியின் உறவினர்களிடம் மாற்றுக் குருதி கோரி வற்புறுத்துவதில்லை. ஆயினும் அவர்கள் தட்டுப்பாட்டை உணர்ந்து குருதிக் கொடை அளிக்க முன் வர வேண்டும். என்றார்.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள இரத்த வங்கிகள் தட்டுப்பாடு இல்லாது செயற்படுகின்றன. எமது இரத்த வங்கியில் மட்டுமே தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.