யாழ். பிரபல பாடசாலைகளில் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் கல்விச் செயற்பாடுகள் பெரிதும் பாதிப்பு

05.09.2012.BYrajah.
யாழ். மாவட்டத்தில் அரசியல் தலையீடுகள் காரணமாக பிரபல பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் சின்னாபின்னமாவது குறித்து மாவட்ட புத்திஜீவிகள் கவலை தெரிவித் திருப்பதோடு, பொறுப்புவாய்ந்த கல்வி அதிகாரிகளும் சமகாலத்தில் அரசியல்வாதிகளாக மாறி செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் அவர்கள் குறிப்பிடுகையில்,
கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் அதிகளவு மாணவர்கள் கல்வி கற்றும் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் பாடசாலைகளுக்குள் நுழைந்து கொண்ட அரசியல்வாதிகள் தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக, யாழ்.வேம்படி மகளீர் கல்லூரி விவகாரத்தில் கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் எடுக்கும் தீர்வே இறுதியானதும், ஜனநாயக நாட்டிற்குரிய பண்புமாகும். ஆனால் பாடசாலைக்குள் அழையா விருந்தாளியாக புகுந்த டக்ளஸ் நான் சொன்னதையே செய்வேன் என அரசியல் பேசினார்.
இதிலிருந்து இன்று வரை பாடசாலை அதிபர் இடமாற்றம், புதிய அதிபர் நியமனம் ஆகியவற்றில் இன்று வரை குழப்பம் நிலவுகின்றது. பின்னர் அமைச்சரின் அடிவருடியான கோட்டக் கல்விப்பணிப்பாளரை மதிக்கவில்லை என இந்து மகளீர் கல்லூரி அதிபர் அலைக்கழிக்கப்பட்டார்.
பின்னர் இந்துக்கல்லூரி அதிபர் மீதும் இடமாற்றம், ஊழல் என குற்றச்சாட்டுக்கள் பாய்ந்தன. இந்நிலையில் இப்போது கொக்குவில் இந்துக்கல்லூரியும் சேர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்துக்கல்லூரி அதிபருக்கு எதிராக 20குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை கல்வித்திணைக்களத்தின் மீது சுமத்தப்பட வேண்டிய குற்றச்சாட்டுக்களாகும். ஆனாலும் அதை வைத்துக் கொண்டு பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் குழப்பப்படுகின்றது.
இதற்குப் பின்னாலும் அரசியல் காரணமே தலைதூக்கியிருக்கின்றது. மேலும் இந்தப்பாடசாலைகள் அனைத்தும் மாவட்டத்தின் கல்விப் பெருமைக்கு நீண்டகாலம் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் அரசியல் நோக்கம் கொண்டவர்கள் தங்களுடைய இலக்குகள் அடையப்படும் வரையில் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேபோகின்றனர்.
எனவே இவற்றுக்கு எதிராக மாணவ சமூகமும், பெற்றோரும் அணிதிரள வேண்டும். என அவர்கள் மேலும் கேட்டிருக்கின்றனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.