தவறான உணவு பழக்கத்தாலும் மூட்டு வலி வரும் வாய்ப்பு !

                
 
Monday 15 October 2012  .By.Lovi.
மூட்டுகளில் தேய்மானம் அடைவதால் ஏற்படுவது மூட்டு வாதம். பொதுவாக மூட்டு வாதம் எனப்பட்டாலும், இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களையே தாக்குகிறது. தற்கால உணவு பழக்க வழக்கங்கள் உடலில் பலவீனத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் பாஸ்ட் புட் கலாசாரம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெயரில்தான் பாஸ்ட் இருக்கிறதே தவிர, இதை உண்பதால் உடலில் சுறுசுறுப்பு குறைந்து விடுகிறது என்பது என்னவோ நிஜம்தான். அதுபோல் தற்போதைய வேலை முறைகளும், உடல் உழைப்புக்கு அவசியமே இல்லாத அளவுக்கு உள்ளது.

இன்றைய அவசர யுக மக்களிடம் அதிகாலை எழுதல், உடற்பயிற்சி போன்ற பழக்கங்கள் இல்லவே இல்லை. எளிதான சிறு சிறு உடற்பயிற்சிகள் கூட உடலை வலுப்படுத்தும். இதை யாரும் உணர்வதே இல்லை. இதனால் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு கூட எலும்புகள் பலவீனமாகி மூட்டுதேய்மானம் அடைந்து பாதிக்கப்படுகின்றனர். வளரும் குழந்தைகள் உணவுப்பழக்கம் பற்றி பெற்றோரும் கண்டுகொள்வதில்லை.

இத்தாலிய உணவுகளான பீட்சா, பாஸ்டா போன்றவற்றை பெற்றோரே வாங்கி கொடுக்கின்றனர். இதனால், இயற்கை சார்ந்த உடல் நலத்தை மேம்படுத்தும் உணவு பற்றிய உணர்வே குழந்தைகளிடம் இருப்பதில்லை. மேலும், இவ்வாறு மேலை நாட்டு உணவுகளை சாப்பிடுவது தங்களது அந்தஸ்தை அதிகப்படுத்தும் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளதும் இதற்கு காரணம். படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உடல் நலத்தை பேணுவதற்கும் கொடுக்கப்பட வேண்டும்.

மூட்டு வாதத்துக்கு சிகிச்சை என்ன?

மூட்டுவாதத்துக்கு தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன. நோயாளி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இதற்கு பிசியோதெரபி, மூட்டு பொருத்துதல், மெழுகு ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரணி மருந்துகள், நோய் எதிர்ப்பு மாற்று மருந்துகள், அறுவை சிகிச்சை என பல்வேறு வகைகளில் சிகிச்சை அளிக்கலாம்.மூட்டு வாத சிகிச்சையின் போது உணவு கட்டுப்பாடு பெரிய அளவில் இல்லை. பொதுவாக மீன் எண்ணெய் மூட்டு அழற்சியை போக்க உதவுகிறது.

ஆனால், கீல் வாதத்தை பொறுத்தவரை உணவு கட்டுப்பாடு அவசியமானது. மாமிசம், சிப்பி, நத்தை வகைகள் கீல்வாதத்துக்கு எதிராக அமைந்துவிடும். மேலும் ஆல்கஹால் போன்ற யூரிக் அமிலத்தை அதிகமாக்குபவை, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குளூட்டன் ஒவ்வாமை உடையவர்கள் கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்களை உட்கொண்டால் மூட்டுவலி அதிகமாக வாய்ப்பு உள்ளது.

மூட்டுவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கென உள்ள நிபுணர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்து கொள்வதோடு, பரிந்துரைப்படி உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நோய் வேதனையில் இருந்து நாம் மீள முடியும்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.