பிள்ளையாரின் பிறப்பு

 
" காலைவணக்கம் நண்பர்களே!
 உங்களுக்குகாக தான் காத்துக்கிடக்கின்றன  படைப்புகளை படியுங்கள். "தங்கள் வருகைக்கு மிக்க நன்றி"
 
இன்று பிள்ளையார் தனது எத்தனையாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை. அவர் பிறந்தநாளை கொண்டாடும் நம்மில் பலருக்கு அவருடையப் பிறப்பு பற்றிய ஐந்து ஆறு கதைகள் தெரியும்.

1) பிள்ளாயார் பார்வதியின் அழுக்கிலிருந்து பிறந்தவர்

2) பிள்ளையார் சிவனின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து பிறந்தவர்
3) பார்வதியின் சாபத்தால் சிவனே பிள்ளையாராக மாறினார்

4) முழுமுதற்கடவுளான பிள்ளையார் பார்வதி சிவனின் தவத்தினால் அவர்களுக்குப் பிள்ளையாக பிறந்தார்
5) வாதாபியிலிருந்து பிள்ளையாரை பல்லவர்கள் கொண்டுவந்தார்கள்.
.
இப்படியாக பிள்ளையாரின் பிறப்பு பற்றிய கதைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தப் பிள்ளையாரைப் பற்றி விக்கப்பீடியாவிற்காக தேடிய பொழுது பிள்ளையார் என்று நாம் கும்பிடும் தெய்வத்தை நம்முடைய முன்னோர்கள் ஆணாக வழிபடவில்லை என்ற தகவல் கிடைத்தது.
மனிதர்கள் இயற்கையை வழிபட ஆரமித்தன் காரணம் இயற்கையின் மீதான பயமே காரணம். இயற்கையின் மீதான பயம் போய்விட்ட பின்பு அந்த வழிபாடு மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. உதாரணத்திற்கு தமிழர்களின் வருணன் மற்றும் இந்திரன் வழிபாடுகள். அவற்றில் சில வழிபாடுகள் பிற்காலத்தில் வேறு உருவம் பெற்று தங்களை தக்கவைத்துக் கொள்கின்றன. அவ்வாறான ஒரு வழிபாடு பிள்ளையார் வழிபாடு.
பண்டைய இலக்கியங்களில் பிள்ளையார் பற்றி தகவல்கள் இல்லை. பிற்கால இலக்கியங்களில் பிள்ளையார் வழிபாடு மற்ற தெய்வங்களை விட முதன்மையாக முன்னிருத்தப்பட்டது விசித்திரம். மனிதர்களின் முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக பிள்ளையார் கருதப்பட்டுள்ளார். வங்காள ராஜ்யத்தில் உழத்தியர் எனும் உழவர்களின் தெய்வமாக பிள்ளையார் உள்ளார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறார்.
உழவர்களின் தெய்வமாகவும், முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக கருதப்பட்டதால் பயர்களை நாசம் செய்யும் காட்டு யானைகளுக்கப் பயந்து இந்தப் பிள்ளையார் வழிபாடு துவங்கப்பட்டிருக்கலாம். புராணங்களிலும் பிள்ளையாரை வழிபடாமல் போனதால் தான் பாற்கடலிருந்து ஆலகாலம் தோன்றியது எனவும், சிவானின் தேர் உடைந்தது என்றும் பல்வேறு கதைகள் கூறுகின்றன. முன்னோர்கள் கருதிய முயற்சிகளுக்கு கேடுவிளைவிக்கும் என்ற கோட்பாடு முழுவதுமாக மாறாமல் இன்றுவரை உள்ளது. புராணகால கடவுள்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி முதல்வனாக வணங்கப்படும் அந்தஸ்து இதனால்தான் கிடைத்தது.
பிள்ளையாரின் மீதான பயம் குறைந்து சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும் வழிபடதொடங்கிய பொழுது, அவர் செழிப்பின் கடவுளானார். சிவபெருமான் சிச்ஸ் பேக் வைத்திருக்கும் பொழுது அவருடைய பிள்ளை தொப்பை வயிற்றுடன் இருப்பதற்கான காரணம் செழிப்புதான். (குபேரனுக்கும் தொப்பை உண்டு. பொண்ணுங்க தொப்பை வைக்கிறத ஏத்துக்காம திருமகளை சிலிம் ஆக்கிவிட்டார்கள்) . அஷ்டஇலட்சுமிகளோடு மருமகன் பிள்ளையாரும் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே.
வடக்கே தெற்கே ஒட்டி
 வலது புறம் மூரி வச்சு
 மூரி ஒழவிலே
 முச்சாணி புழுதி பண்ணி
 சப்பாணி பிள்ளையார்க்கு
 என்ன என்ன ஒப்பதாமாம்!
முசிறி உழவிலே
 மொளைச்சாராம் பிள்ளையாரு
ஓடு முத்தும் தேங்காயை
 ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு
 குலை நிறைஞ்ச வாழைப்பழம்
 கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு
 இத்தனையும்ஒப்பதமாம்
 எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!
மீண்டும் பழைய இடத்துக்கு வருவோம், பிள்ளையாரின் பிறப்பு. மேலேயுள்ள நாட்டார் பாடல் “முசிறி உழவிலே மொளைச்சாராம் பிள்ளையாரு” என்று ஏர்ச்சாலால் உழும் பொழுது மண்ணிலிருந்து பிள்ளையார் பிறந்தார் என்ற உழவர்களின் நம்பிக்கையை கூறுகிறது. வேதகால கடவுளான சிவபெருமானுடன் பிள்ளையார் வழிபாட்டை இணைக்க நினைத்தவர்களால் மேலே நாம் பார்த்த ஐந்து ஆறு கதைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்பட்டிருக்காவிட்டால் வங்காளத்தில் சிறுதெய்வாக வணங்கப்பட்டு பிள்ளையார் வழக்கிலிருந்து போயிருப்பார்.
வெள்ளாளர்களுக்கு நன்றியுணர்வு அதிகம். தங்களுடைய வெள்ளாண்மை முடிந்து அறுவடை வந்ததும், தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவி்ப்பார்கள். உழவர்கள் சூரிய கடவுளுக்கு எடுக்கும் பொங்கல் திருவிழாவை ஒத்து பிள்ளையார் திருவிழாவும் நடந்திருக்கிறது.
மாட்டுக் கொளப்படையில்
 மாவுருண்டை ஆயிரமாம்
 எருதுக் கொளப்படையில்
 எள்ளுருண்டை ஆயிரமாம்
 ஆட்டுக் கொளப்படையில்
 அதிரசம் ஆயிரமாம்
 கண்ணுக் கொளப்படையில்
 கடலுருண்டை ஆயிரமாம்
 குட்டிக் கொளப்படையில்
 கொழுக்கட்டை ஆயிரமாம்
 பண்ணிக் கொளப்படையில்
 பணியாரம் ஆயிரமாம்
 இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
 சப்பாணிப் பிள்ளையார்க்கு!
மாவுண்டை, எள்ளுருண்டை, அதிரசம், கடலுருண்டை, கொழுக்கட்டை, பணியாரம் என்று தங்களின் உணவுப்பொருட்களை பிள்ளையாருக்குப் படைத்து தங்களுடைய மகசூல் திருவிழாவை கொண்டாடியிருக்கின்றார்கள். பணம் முதல் இனப்பெருக்கம் வரை பெண்ணோடு தொடர்படுத்தி அம்மனாக வழிபடும் வழக்கம் சாக்தம். தாய் தெய்வம், கன்னி தெய்வம் என எல்லாவற்றையும் பெண்ணாக பார்த்தே பழக்கம் கொண்டவர்கள் பிள்ளையாரையும் பெண்ணாக்கினார்கள். அதற்குள் பிள்ளையார் சிவமைந்தனாக மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் இந்த பெண் பிள்ளையார் வழிபாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருந்துள்ளது. தற்போது சுசீந்திரம் கோயிலில் பெண் பிள்ளையாரை தரிசிக்கலாம்.
காளையே ஏறு..
முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணானார் தன் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
 காளைக் கணபதியே – (காளையே)
வேலருக்கு முன் பிறந்த
 விக்கினரே முன் நடவாய்
 ஊருக்கு மேற்காண்டே
 ஒசந்த தொரு வெப்பாலை
 வெப்பாலை மரத்தடியில்
 சப்பாணி பிள்ளையாராம்
 சப்பாணிப் பிள்ளையார்க்கு
 என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்
 நிமித்தியமாம் பிள்ளையார்க்கு
 கொத்தோடு தேங்காயாம்
 குலைநிறைய வாழைப்பழம்
 இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
 சப்பாணி பிள்ளையார்க்கு – (காளையே)
வண்டு மொகராத – ஒரு
 வண்ண லட்சம் பூ வெடுத்து
 தும்பி மொகராத
 தொட்டு லட்சம் பூவெடுத்து
 எறும்பு மொகராத
 எண்ணி லட்சம் பூவெடுத்து
 பாம்பு மொகராத
 பத்து லட்சம் பூவெடுத்து
 வாரி வந்த பூவையெல்லாம்
 வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
 கொண்டு வந்த பூவை யெல்லாம்
 கோபுரமா கொட்டி வச்சேன்
 குளத்திலே ஸ்நானம் பண்ணி
 கோலு போல நாமமிட்டு
 பொழுதேறிப் போகுதிண்ணு
 வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
 இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
 சப்பாணிப் பிள்ளையார்க்கு!
பிள்ளையாரை சிவமைந்தனாக ஏற்றுக் கொண்டாலும் தமிழ் உழவர்கள் வழிபாட்டு முறையை மாற்றவி்லலை. தமிழர் வழிபாட்டு முறையை மேலேயுள்ள நாட்டார் பாடல் விவரிக்கிறது.
எங்கோ தோன்றி எப்படியோ பிள்ளையார் வழிபாடு இன்று இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிள்ளையாரே!
 

 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.