நாங்கள் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறோம். என் கணவர் சொந்தமாகத் தொழில் செய்கிறார். உடல் நலத்தில் அடிக்கடி தொல்லை ஏற்படுகிறது. அவர் அதையும் பொருட்படுத்தாது காரில் பயணித்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கும், எனக்கும் சுக்ர திசை நடக்கிறது. பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.
இங்கு என்னைத் தனியாக வெளியில் செல்ல அனுமதிக்கமாட்டார். ஆனால் எனக்குத் தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை உண்டு.
எங்கள் குடும்ப நலன் கருதியும், அவரது ஆரோக்கியம் சீராகவும் பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரவும், பொருளாதார முன்னேற்றம் காணவும் வீட்டிலேயே நாங்கள் தெய்வ வழிபாடு செய்வதாக இருந்தால் எனது ஜாதகப்படி எந்த மாதிரியான வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்? வீட்டில் தெய்வீகச் செடி வளர்த்தால் எந்த மாதிரிச் செடி வளர்க்கலாம்? (ஜானகி கிருஷ்ணன், பெங்களூர்).
பதில்:- தாங்கள் வீட்டிலிருந்து வழிபாடு செய்வதன் மூலமே விரும்பிய பலனை அடையலாம். குறிப்பாக
உங்கள் பூஜை அறையில் உங்கள் இஷ்ட தெய்வப் படங்கள் அனைத்தையும் வைத்து வழிபாடு செய்யுங்கள். நீங்கள் விருச்சிக ராசியில் பிறந்திருக்கிறீர்கள். எனவே தாங்கள் விரும்பிய விருட்ச வழிபாடும் பலன் தரும். வெளியில் தனியாக செல்ல இயலாத சூழ்நிலை இருப்பதால், உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேற வீட்டின் முன்புறத்தில் யோகம் தரும் இடத்தில் தொட்டியில் ஒரு மாடம் கட்டி அதில் துளசிச் செடியை வைத்து வழிபாடு செய்யலாம்.
துளசி செடிக்கு அருகில் அதன் கீழே விளக்கேற்றி வைத்து, தினமும் மாலை நேரத்தில் வழிபடுவது நல்லது. ஜோடி தீபமாக ஏற்றுங்கள். கீழே கோலம் போட்டு அதன் மீது ஒரு தட்டு வைத்து அதில் விளக்கேற்றுவது நல்லது. கிருஷ்ணன் பாதமுள்ள அச்சு கோலத்தட்டு இருப்பது நல்லது.
குறிப்பாக இருவருக்கும் சுக்ரதிசை நடப்பதால் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி கவசம் பாடி, துளசி மாதாவை வழிபட்டால் துயரங்களிலிருந்து விடுபட இயலும். ஒளி மூலம் தான் லட்சுமியை இல்லத்திற்கு வரவழைத்துக் கொள்ள முடியும். கலக்கும் இருளை விலக்குவது விளக்கு. நம் கலக் கத்தை போக்குவதும் விளக்கு வழிபாடுதான். இதை அடிப்படையாக வைத்து ஆலயங்களில் கூட விளக்கு பூஜை வைக்கிறார்கள்.
எனவே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே விளக்கேற்றி வழிபட்டாலும், உள்ளன்போடு கசிந்துருகி வழிபட்டாலும், கோவிலை விட்டுக் கும்பிடும் வீட்டு வாசலில் வந்து வரத்தைக் கொடுப்பாள் லட்சுமி என்பதை அனுபவத்தில் அறிந்து கொள்வீர்கள். தெய்வீகத் தாவரங்களில் முதன்மையான தாவரமாக விளங்கும் துளசிச் செடி உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற தாவரமாகவும் அமைகின்றது.
கேள்வி:- என் மகளுக்கு வரன் பார்த்து வருகிறோம். அவர் அமெரிக்காவில் எம்.எஸ் படித்து முடித்து வேலை பார்த்து வருகிறார். அமெரிக்க மாப்பிள்ளையே வேண்டுமென்று சொல்கின்றாள். வெளிநாடு செல்லும் முன்னதாக சூரியனார் கோவில், ஆலங்குடி, திருப்பாம்புரம், திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆகிய தலங்களுக்கெல்லாம் சென்று வழிபட்டு வந்தோம். திருமணம் எப்பொழுது முடிவாகும்? (எஸ்.காந்தரூபி, சுப்ரமணியன், சென்னை.
பதில்:- தாங்கள் அனுப்பிய ஜாதகப்படி பார்க்கும் பொழுது சூரியனோடு, கேது இணைந்திருக்கிறார். கேது உங்கள் லக்னத்தைப் பாக்கிறார். 7-ல் செவ்வாய் குரு வீட்டில் இருப்பதால் செவ்வாய் தோஷமில்லை. களத்திர ஸ்தானாதிபதி 6-ல் மறைந்து விட்டார். உங்கள் புதல்வி பிறந்த தேதியும் 8, மாதமும் எட்டு, வருடத்தின் கூட்டுத் தொகையும் எட்டு, “எட்டுக்குரிய சனியோ ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாக இருக்கின்றார்.
அவரோ வக்ர இயக்கத்தில் இருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி ஜல ராசியில் இருப்பதால் வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்கும். பிப்ரவரி 15-க்கு மேல் வரும் திருமணப் பேச்சுக்கள் பொருத்தமாக அமையும். சூரியனார் கோவில், திருப்பாம்புரம், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற தலங்களுக்கு சென்று யோகம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் நல்ல வரன்கள் அமையும்.
கேள்வி:- எனது ஜாதகத்தையும், எனது கணவரின் ஜாதகத்தையும் அனுப்பியிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி உடல்நிலைத் தொல்லைகள் ஏற்படுகிறது. மும்பையில் சொந்த வீடு வாங்கலாம் என்று நினைத்துள்ளோம். எப்பொழுது அமையும்? (எல்.கீதா, மும்பை).
பதில்:- தங்கள் ஜாதகத்திலும் லக்னத்திற்கு 4-ல் சனி சஞ்சரிக்கின்றார். அதே நேரத்தில் அஷ்டமத்து சனி விலகிவிட்டது.
எனவே இனி வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு கைகூடி வரும். தங்கள் கணவர் ஜாதகப்படி குரு ராசியைப் பார்க்கிறார். எனவே குரு பார்க்கக் கோடி நன்மை என்பதற்கேற்ப தற்சமயம் சொந்த வீடு வாங்கும் யோகம் உருவாகும். ஆனால் அதே நேரத்தில் பூமி காரகன் செவ்வாய் நீச்சம் பெற்றிருக்கிறார். எனவே பூமி வாங்கும் பொழுது நன்கு ஆராய்ந்து வாங்குவது நல்லது.
கேள்வி:- எனது புதல்வரின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் உண்டா? வாடகை வீட்டில் வசிக்கும் யோகம் உண்டா? தற்சமயம் வாடகை வீட்டில் தான் வசிக்கின்றேன். ஏதேனும் தோஷங்கள் இருக்கிறதா? ஜாதகத்தை பார்த்துச் சொல்லும்படி கேட்டுக் கொள்கின்றேன். (ஜி.ராமகிருஷ்ணன், சென்னை).
பதில்:- தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருக்கிறார். செவ்வாய்தான் பூமிகாரகன் என்பவர். அவர் ராகுவோடும் இணைந்து 12-ல் மறைந்திருக்கிறார். எனவே தான் வீடு வாங்கும் யோகம் இயற்கையிலேயே வந்து சேரும். பூமி நாதசுவாமி வீற்றிருந்து அருள் வழங்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. வாய்ப்பிருக்கும் பொழுது வைத்தீஸ்வரன் கோவில் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.
கேள்வி:- எனது ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். இதுவரை நான்கு வருடமாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தேன். இப்பொழுது சொந்த ஊர் வந்த பிறகு நிலையான வேலை இல்லை. எப்பொழுது வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லலாமா? சொந்தத் தொழில் செய்யலாமா? (வி.ரகுபதி, மதுரை).
பதில்:- உங்கள் ஜாதகப்படி தற்சமம் அஷ்டமத்துச் சனி விலகிவிட்டது. இப்பொழுது சந்திரனுக்கு 9-ல் சனி, செவ்வாய், கேதுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே, சுயதொழில் செய்வதை காட்டிலும் வேலைக்குச் செல்லும் வாய்ப்பே அதிகம் இருக்கிறது. ஏப்ரலுக்கு மேல் வெளிநாட்டு யோகம் கைகூடும் விதத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருக்கின்றன. சனி விலகியதால் வாய்ப்பிருக்கும் பொழுது திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவது நல்லது.
கேள்வி:- நான் ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கின்றேன். எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? வீடு வாங்கும் யோகம் உண்டா? அல்லது வீடு கட்டும் யோகம் உண்டா? (ஆர்.ஸ்ரீதேவி, மயிலாடுதுறை).
பதில்:- தங்கள் ஜாதகத்தில் சகாய ஸ்தானத்தில் செவ்வாய் நீச்சம் பெற்று சனியோடு கூடியிருக்கிறார். எனவே வீடு கட்டும் யோகத்தை விட, வீடு வாங்கும் யோகமே அதிகம் இருக்கின்றது. உத்தியோக ஸ்தானாதிபதி சுக்ரன் பகை கிரகங்களுடன் இணைந்து சஞ்சரிப்பதாலும், ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதாலும், வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளியில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
கேள்வி:- எனது சகோதரியின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். அவருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? அவரின் ஜாதகத்தை பொருத்தம் பார்த்து அனுப்பினால், எந்த பதிலும் வருவதில்லை. திருமணத் தடைக்கு என்ன காரணம்? (ஆர்.அம்சவள்ளி, கோளியனூர்).
பதில்:- தங்கள் சகோதரியின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி சுக்ரன் பகை வீட்டில் இருக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் சூரியன், கேதுவுடன் அஷ்டமாதிபதி புதனும், ராசிநாதன்
செவ்வாயும் இணைந்திருக்கிறார்கள். மேலும் ஏழரைச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுகின்றது. எனவே, வரன்கள் வந்தாலும் பலன் இல்லை. இப்பொழுது குருவின் பார்வை அவரது ராசியில் பதிகிறது. எனவே திருமணப் பேச்சுகள் முடிவடையக்கூடிய வாய்ப்பு உண்டு. இனி மேல் வரும் திருமணப் பேச்சுக்களை பரிசீலனை செய்யலாம். அந்நியத்தில் நல்ல இடத்தில் திருமணம் முடியும். சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen