சிவாலயங்களில் தேவாரத் திருப்பதிகங்களால் பாடப்பெற்ற தலங்கள் மிகச்சிறப்புடையவனாக கருதப்படுகின்றன. அத்தகைய சிவாலயங்கள் மொத்தம் இருநூற்று எழுபத்து நான்கு. இவை இந்தியா முழுவதும் பரவி விளங்குகின்றன. தென்னிந்தியாவில் குறிப்பாக சோழவள நாட்டில் உள்ள நூற்று தொண்ணூறு கோவில் கள் இதில் அடங்கும்.
சோழவளநாட்டு காவிரி தென்கரைத்தலங்களில் தேவாரப் பாடல்பெற்ற 56-வது தலமாக திருமீயச்சூர் லலிதாம்பிகா சமேத மேகநாத சுவாமி கோவில் விளங்குகிறது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீமேகநாதசுவாமி, ஸ்ரீசகலபுவனேஸ்வரர் ஆகிய இரண்டு சிவன் சன்னிதிகள் ஒருங்கே கொண்ட தலம் இது.
சூரியனும், பைரவனும் தனிச்சன்னிதியுடன் காட்சி தரும் தலம். நான்கு முகங்களுடன் கூடிய சண்டிகேஸ்வரர் அமைந்த தலம். சங்கநிதி, பதுமநிதியுடன் மகாலட்சுமிதேவி அருள்புரியும் தலம். அகத்தியர் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை அருளிய தலம் என பல சிறப்புகளை பெற்றது இந்த ஆலயம்.
சிவபெருமானின் சாபம் பெற்ற சூரியன், உடல் முழுவதும் செந்நிறம் நீங்கி கருமை நிறம் பெற்றான். சாப விமோசனம் அடைவதற்காக இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டான். சிவன் சாபவிமோசனம் அளித்தார். சூரியன் தனது கருமை நிறத்தில் இருந்து மீண்டு வந்ததன் அடிப்படையில் இவ்வூர் மீயச்சூர் எனப்பெயர் பெற்றது.
இக்கோவிலின் மூலவர் மேகநாதசுவாமி. அம்மன் நாமம் லலிதாம்பிகை சவுந்தரநாயகி. தீர்த்தம் சூரியபுஷ்கரணி. தலவிருட்சம் வில்வமரம்.
திருமீயச்சூர் ஆலயம், கஜப்பிரதிஷ்ட விமான அமைப்பு உடையது. பார்வதி பரமேஸ்வரனை கஜவாகனரூபராய் வைத்து சூரியன் பூஜை செய்ததால், சுவாமி கோவிலில் விமானம் யானையின் பின்பாகம்
போன்று கஜப்பிரதிஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களைக் கொண்டு திகழ்கிறது.
கோவில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் காணப்படுகிறது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோவிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னிதி உள்ளது. மகா மண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால்
பாடல் பெற்ற சிறப்பு இத்திருத்தலத்திற்கு உண்டு. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில், தெற்கு நோக்கி அழகுடனும் உலகில் வேறெங்கும் காணமுடியாத அமைப்புடனும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அம்பாள் சன்னிதி ஒரு ராஜ தர்பார் நடக்குமிடம் போன்று பொலிவுற காட்சியளிக்கிறது.
குடும்பத்தில் கணவன்- மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். ஒருவர் கோபப் படும்போதும் எந்நேரத்திலும் நிதானம் இழக்காமல் இருக்க வேண்டும். உலகில் எல்லா உயிர்களும் சமம்தான் என்ற அகந்தையின்றி வாழ்ந்தால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாய் வாழலாம் என்பது இத்தலத்தில் உள்ள விக்கிரகங்கள் மூலமாகவும், புராணக்கதைகள் மூலமாகவும் தெரிந்து கொள்ள முடியும்.
பொன்னேர் கொன்றை
மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைகள் உடையாள்
மீயாச் சூரானை தன்னேர்
பிறரில் லானைத் தலையால்
வணங்குவோர் அன்னேர் இமையோர் உலகம்
எய்தல் அரிதன்றே
- என்று இத்தல இறைவனை திருஞானசம்பந்தர் பாடி உள்ளார்.
சுயம்பு லிங்கமாக வீற்றிருந்து அருள்புரியும் மேகநாத சுவாமியை, அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் வழிபட்டு ஆயுள் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள். இங்குள்ள கல்யாண சுந்தரரை திருமணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கை கூடும் என்பது அனுபவப்பட்ட பக்தர்களின் கூற்று.
திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலில்தான் அருணன் (சூரியனின் தேரோட்டி), வாலி, சுக்ரன், எமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்தனர். இதனால் இங்கு ஹோமம் செய்வது சிறப்பு.
வியாதிகளை போக்கும் சங்காபிஷேகம்
100 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால், அதற்கு ஆயுளை அதிகரிக்கும் தெய்வசக்தி உண்டு. உயிர்களை பறிக்கும் அதிகாரம் கொண்டவர் எமதர்மன். இவர் இந்த ஆலயத்தில் நீண்ட ஆயுளைத் தரவல்ல சங்கு கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்தார் என்றும், மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையும், எமலோகத்தின் தல விருட்சங் களில் ஒன்றான பிரண்டை கலந்த அன்னத்தை நிவேதனம் செய்தும் சிவபெருமானை வழிபட்டார் எனவும் தலபுராணம் கூறுகிறது.
எனவே தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாமரை இலைகளில் பிரண்டை சாதத்தையும், சங்கு புஷ்பத்தை வைத்து சதய நட்சத்திரத்தில் சிவபெருமானை பூஜிக்க வேண்டும். பின்னர் அந்த தாமரை இலையிலேயே அன்னத்தை வைத்து ஏழைகளுக்கு தானம் அளித்து, தாமும் உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் கடுமையான
நோய் மற்றும் துன்பங்களில் இருந்து விடுபட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது ஐதீகம்.
கருடனின் மூத்த சகோதரன் அருணன். இவர் கால்கள் இல்லாமல் ஊனமாக பிறந்தவர். சூரியனின் தேரோட்டியாக இருப்பவர். சூரியோதயத்தை அவரது பெயரால் அருணோதயம் என்றும் சிலர் அழைப்பார்கள். சிறந்த சிவபக்தனான அருணன், கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க சூரியனிடம் அனுமதி கேட்டான்.
அதற்கு சூரியன், 'நீ! உடல் ஊனமுற்றவன். உன்னால் ஈஸ்வரனை தரிசனம் செய்ய முடியாது' என்று கூறி கிண்டலும், கேலியும் செய்தான். சூரியன் கொடுத்த துன்பத்தை தாங்கிக்கொண்ட அருணன், விடாமுயற்சியுடன் கடும் தவம் இருந்து சிவனின் தரிசனத்தைப் பெற்றான்.
சிவதரிசனம் செய்ய முயன்ற அருணனை கேலி செய்த சூரியனின் மீது சிவனின் கோபம் திரும்பியது. அவர் சூரியனிடம், 'என்னை தரிசனம் செய்ய நினைத்த அருணனைத் துன்புறுத்திய நீ ஒளி இழந்து போவாய்' என்று சாபமிட்டார். இதனால் உலகமே இருண்டு போனது. சூரியனின் உருவம் கருமை நிறத்தை அடைந்தது.
சூரியன் மிகவும் வருந்தி மன்னிப்புக்கேட்டு கொண்டதன் பேரில், 'திருமீயச்சூரில் தீர்த்தம் அமைத்து பதினொரு மாத காலம் சிவ வழிபாடு செய்ய வேண்டும்' என்று சாப விமோசனத்திற்கான வழியை சிவபெருமான் கூறினார். சூரிய பகவான் திருமீயச்சூரில் தவமும், வழிபாடும் நடத்தி மீண்டும் இழந்த தன் ஒளியைப் பெற்றார்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ந் தேதி வரை, இந்த ஆலய கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பு மிகுந்ததாக உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தால் தேக ஆரோக்கியம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
சுவாமி சன்னிதியின் வடபுறத்தில் அமைந்துள்ள துர்க்கை சிலையில் கிளி உள்ளது. எட்டுக்கரங்களுடன் வீற்றிருக்கும் இந்த தேவியை, 'சுகப்பிரம்ம துர்க்காதேவி' என்று அழைக்கின்றனர்.
துர்க்கையிடம் பக்தர்கள் வைக்கும் கோரிக்கையை, இந்தக் கிளி அம்பாளிடம் கூறி நிறைவேற்றுவதாக ஐதீகம் கூறப்படுகிறது. காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
இக்கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பேரளம் ரெயில்நிலையத்திற்கு மேற்கே 1 கிலோ மீட்டர் தூரத்தில் திருமீயச்சூர் ஆலயம் உள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையிலும், கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் வழியாக சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.
-திருமாலன், திருச்செந்தூர்.
லலிதா சகஸ்ரநாமம்
உலகெங்கும் அனைத்து ஆலயங்களிலும் பக்திமணம் கமழ ஒலித்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான தலம் திருமீயச்சூர்.
பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தீராத தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் தங்களை காத்தருளும்படி அன்னை பராசக்தியை வேண்டினர். அசுரனை அழிப்பதற்காக தேவியானவள், ஒரு வேள்வி குண்டத்தில் இருந்து ஸ்ரீசக்ரத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அரக்கனுடன் கடுமையாக போர்புரிந்து அவனை அழித்தாள். அரக்கனை அழித்த பிறகும் அன்னையின் உக்கிரம் தணியவில்லை.
சிவபெருமான் அன்னையின் கோபத்தை தணிக்க 'மனோன்மணி' என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யும்படி கூறினார். அன்னையும் திருமீயச்சூருக்கு வந்து தவம் செய்து சாந்தமானாள்.
அப்போது அங்கு சாப விமோசனத்திற்காக தவம் இருந்த சூரியன், சிவபெருமான் வர காலதாமதமானதால்
'வகுரா' என கத்துகிறான். 'வகுரா' என்பது திருமீயச்சூர் இறைவனின் பெயர். இது பார்வதிக்கு சினத்தை மூட்டியது. 'சூரியன் ஏற்கனவே பாதிக்கப்பட்டவன்' என்று கூறி பார்வதியை சமாதானப்படுத்தினார் சிவபெருமான். அன்னையின் கோபத்தை தணிக்க, வகினி தேவதைகள் ஆயிரம் திருநாமங்களால் லலிதா சகஸ்ரநாமத்தை பாடினர். இதுவே லலிதா சகஸ்ரநாமம் ஆயிற்று.
கொலுசு கேட்ட லலிதாம்பிகை
உலகநாயகி லலிதாம்பிகைக்கு அர்ச்சகர்கள் அனைத்து ஆபரணங்களையும் அணிவித்திருந்தனர். காலுக்கு கொலுசு மட்டும் அணிவிக்கவில்லை.
ஒருமுறை பக்தர் ஒருவரின் கனவில் அம்பாள்
தனக்கு கொலுசு வேண்டும் என்று கேட்டதாகவும் அதன்படி அந்த பக்தை அம்பாளுக்கு கொலுசு வாங்கி அணிவித்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறவும் அம்மனுக்கு கொலுசு காணிக்கையாக செலுத்தி வழிபடுகிறார்கள்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen