லட்சுமிதேவி வழிபட்ட பெருமாள்!

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து தென் மேற்கில் 5 கிலோமீட்டர் தொலைவிலும், பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ள பட்டீசுவரம் என்னும் தலத்தில் இருந்து தென் கிழக்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் நாதன் கோவில் உள்ளது. முன் காலத்தில் சோழப் பேரரசின் தலைநகராக இருந்து, இன்று சிற்றூராக இருக்கும் பழையாறையின் ஒரு பகுதியாகவும் விளங்கும் சிறு கிராமம் தான் இந்த ஊர்.
திவ்யதேசம்
பசுமையான வயல்வெளிகள் நிறைந்த இந்தச் சிற்றூரில் தான் ஜகந்நாதப் பெருமாள் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். எனவேதான் இந்த ஊர் நாதன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. 

இந்தியாவின் வடபகுதியில் பூரி ஜகந்நாதர் ஆலயம் உள்ளது. அதே போல் தென்திசையான தமிழகத்தில் சென்னை அடுத்த திருமழிசையில் ஒரு ஜகந்நாதர் கோவில் உள்ளது. எனவே நாதன்கோவில் பகுதியில் கோவில் கொண்டிருக்கும் ஜகந்நாத பெருமாள் கோவிலை, தமிழகத்தின் ‘தட்சிண ஜகந்நாதர்’ என்று அழைக்கிறார்கள்.  

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால், பத்து பாடல்கள் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்ற சிறப்பும் இந்த ஆலயத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். 
‘நாதன் உறைகின்ற நகர் 
நந்திபுற விண்ணகரம் நண்ணு மனமே!’
–என்று ஒவ்வொரு பாடலிலும் நந்திபுர விண்ணகர நாதனை மனம் நாட வேண்டும் என்று பாடிப் பரவுகிறார் திருமங்கை ஆழ்வார். வைகுண்டத்துக்கு இணையான திருத்தலம் என்பதால், ‘விண்ணகரம்’ என்று திருமங்கை ஆழ்வார் தனித்தமிழில் இந்த ஆலயத்தைப் போற்றுகிறார்.
தட்சிண ஜகந்நாதர் 
மேற்கு திசை பார்த்து நிற்கும் வண்ண ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ஓங்கி உயர்ந்த கொடிமரத்தைக் காணலாம். அதை ஒட்டி ஒரு சிறிய மண்டபம், அதைத் கடந்து சென்றால் மகா மண்டபம் உள்ளது. அதன் வடபுறத்திலே பன்னிரு ஆழ்வார்கள் வரிசையாக நிற்க, தென்புறத்தில் ஆண்டாள் சன்னிதி அழகுற அமைந்திருக்கிறது.
அதையடுத்து இறைவனின் சன்னிதி இருக்கிறது. ஜெய, விஜயர்களை வணங்கி உள்ளே நுழைந்தால், அங்கே மந்தார விமானத்தின் கீழ் ஸ்ரீனிவாசப் பெருமாள் வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியவராய், மேற்குதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் 
அருள்பாலிக்கும் இறைவனைக் காண கண் கோடி வேண்டும். சுவாமியின் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருந்து அருள்புரிகிறார்கள். ஆலயத்தின் உற்சவரின் திருநாமம் தான் ஜகந்நாதர் என்பதாகும். கருவறையின் உள்ளே வடபுறச் சுவற்றில் பிரம்மதேவர் வீற்றிருக்கிறார். தென்புறச் சுவற்றில் நந்திதேவர், மனித உருவில் பெருமாளை பணிந்து வணங்கியபடி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.  
செண்பகவல்லி தாயார் 
இறைவன் சன்னிதியின் தென்புறம் செண்பகவல்லி தாயார் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய சன்னிதியில் தவக் கோலத்தில், அமர்ந்த நிலையில் தாயார் காட்சி தருகிறார். கருவறை விமானத்தின் பின்புறம் தல விருட்சமான
 செண்பக மரம் உள்ளது.
திருப்பாற்கடலில் அவதாரம் செய்த லட்சுமிதேவி, திருமாலை கணவனாக அடைய எண்ணி செண்பக மரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தாள். லட்சுமி தேவி தவமிருக்க தொடங்கிய தினம் ஒரு அமாவாசை ஆகும். அன்றிலிருந்து எட்டாவது நாளில், அதாவது சுக்லபட்ச அஷ்டமி அன்று தவம் செய்யும் தாயாருக்கு, எதிர்திசையில் தோன்றி காட்சி கொடுத்தார். மேலும் தாயாரை தனது மார்பில் செண்பக லட்சுமியாக ஏற்றுத் தாங்கிக் கொண்டார். 
பிரார்த்தனைத் தவம் 
தாயாரின் தவம் நிறைவேறி, பெருமாள் ஏற்றுக் கொண்ட சுக்லபட்ச அஷ்டமி அன்று, இந்த ஆலயத்தில் ‘ஸ்ரீ சூக்த ஹோமம்’ செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தால், பிரிந்துள்ள தம்பதிகள் சேருவார்கள். கணவன்– மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். 
பல்லவ மன்னர் நந்திவர்மன் தனக்கு குழந்தைப் பேறு இல்லாததால், இத்தலத்திற்கு வந்து பெருமாளையும், 
தாயாரையும் வழிபட்டு பிள்ளைப் பேறு பெற்றான். பிறந்த குழந்தைக்கு ‘நந்திபுர விண்ணகரப்பன்’ என்று பெயர் சூட்டினார். மேலும் திருக்கோவிலில் மண்டபம் கட்டிக் கொடுத்தார் என்பது போன்றவை குறிப்பாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று, இத்தலத்து தாயாருக்கு திருமஞ்சனம் செய்வித்து, பாயசம் நிவேதனம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
விஜயரங்க சொக்கலிங்க சேதுபதி என்பவர், தனது தாயாரின் வயிற்றுவலி நீங்க இத்தல இறைவனையும், இறைவியையும் பிரார்த்தனை செய்தார். இதையடுத்து அந்நோய் நீங்கியவுடன் இக்கோவிலுக்கு ஒரு மண்டபம் கட்டி  கொடுத்துள்ளார். இதை மெய்ப்பிக்கும் வகையில், சேதுபதி மற்றும் அவரது மனைவி சிலைகள், பெருமாளைத் தொழுதவண்ணம் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 
தன்னிடம் அடைக்கலம் வந்த புறாவிற்காகத் தன் தசையை அரிந்து வைத்து, கடைசியில் தானே தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த சிபிச் சக்கரவர்த்திக்கும், மார்க்கண்டேய மகரிஷிக்கும் அருள்புரிந்த தலம் இது. 
சிலேடைப் பாடல்களால் தமிழை ஆண்ட காளமேகப் புலவர் பிறந்த ஊர் என்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்ப்பதாகும். மேலும் சோழர் குல அரசி குந்தவை நாச்சியார், தனது இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபட்ட தலம் என்பதும் சரித்திரச் சான்றுகளுடன் உள்ளன. 
இதுமட்டுமல்ல திருஷ்டி தோஷம் அகலவும், சந்திர தோஷம் நீங்கவும், கடன் தொல்லை, வியாபார நஷ்டம் விலகவும், மகாலட்சுமி தேவியின் திருவருள் கிடைக்கவும் இது சர்வதோஷ பரிகாரத்துக்குரிய பிரார்த்தனைத் தலமாகத் திகழ்கின்றது. 
–டாக்டர்.ச.தமிழரசன், தஞ்சாவூர்.
நந்தி  தவம்  செய்த  தலம்
இந்த ஆலயத்தில் நந்திதேவர் மனித உருவில், பெருமாளை வணங்கியபடி உருவம் வடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிவன் ஆலயங்களில் தான் நந்தி பகவான் வீற்றிருப்பார். அதுசரி விஷ்ணு ஆலயத்தில், சிவனின் வாகனமான நந்திதேவருக்கு என்ன வேலை? என்கிறீர்களா! வாருங்கள் அந்த வரலாற்றைப் பார்க்கலாம்.
ஒருமுறை விஷ்ணு பக்தரான, வேதவியாசரை கயிலாயத்தின் காவல் தெய்வமான நந்திதேவர் தங்கப்பிரம்பால் அடித்தார். விஷ்ணு துவேஷம் இல்லாத, சிவ பக்தி தான் சிறந்தது. ‘அரனும், அரியும் ஒன்றே’ என்று உணர்த்தும் வகையில், சிவபெருமான் நந்தி மேல் கோபம் கொண்டு, அவரது எல்லா அதிகாரங்களையும் பறித்து விட்டார். 
தனது தலைவனான சிவபெருமானிடம், நந்திதேவர் சாப விமோசனம் தரும்படி பணிவுடன் வேண்டினார்.
‘பூலோகத்தில் காவிரி நதி தீரத்தில் அமைந்திருக்கும் செண்பகாரண்யத்தில் உள்ள ஜகந்நாதப் பெருமாளை, தவம் செய்து வழிபட்டால் உனது சாபம் நீங்கும். பழையபடியே உனது அதிகாரங்களைப் பெறுவாய்’ என்று சிவபெருமான் சாப விமோசனம் கூறினார். 
அதன்படியே நந்தி இத்தலத்தில் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். எனவே தான் இவ்வூர் ‘நந்திபுரம்’ என்றும் ‘திருகோவில் நந்திபுர விண்ணகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. தவம் செய்த இடம் ‘நந்திவனம்’ என்றும், அதற்கு எதிரே உள்ள தீர்த்தம் ‘நந்தி புஷ்கரணி’ என்றும் அழைக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.